FFC – 180-தெளிவு—6/6
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
தெளிவு—6/6
FFC – 180
13-04-2016—புதன்.
வாழ்க வளமுடன்.
தெளிந்த தெளிவு பெற, ‘தெளிவு’ என்கின்ற தலைப்பில் ஐந்து அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று தெளிவு பற்றி ஆறாவது அறிவிற்கு விருந்து நடை பெற இருக்கின்றது. இத்துடன் தெளிவு என்கின்ற அறிவிற்கு விருந்து நிறைவு பெறும். அடுத்ததாக நிறைவு பெறாமல் இருக்கும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சிந்தனையைத் தொடர்வோம் என்கின்ற செய்தியை அன்பர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளலாகின்றது. இன்றைய துணைத்தலைப்பு ‘நம்குருதேவர் பெற்ற தெளிவு’. ஐந்து விருந்துகளில் என்ன சிந்தித்திருக்கிறோம் என்பதனை நினைவு படுத்திக் கொள்வோம். கடந்த ஐந்து விருந்துகளில்சிந்தித்தவை நினைவில்கொண்டு வருவதற்கு கீழே உள்ள அட்டவணையைக் காணவும். இன்று என்ன சிந்திக்க இருக்கிறோம் என்பதும் அட்டவணையில் காணலாம். 
பொதுவாக ‘தெளிவு’ என்கின்ற சொல்லின் பொருள் என்ன? அறிவு ஒன்றை அறிந்து/புரிந்து கொள்ளும்போது, அறிதலில்/புரிந்துகொள்ளுதலில் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒன்றைப்பற்றி ஐயமற தெரிந்து கொள்ளுதல் தெளிவு. அதுமட்டுமல்லாமல், அந்த ஒன்றைப்பற்றி அறிந்து கொண்டதில் ஏற்படுகின்ற அறிவின் நிலையால், அதனை வாழ்வில் பின்பற்ற வேண்டியிருந்தால், தயக்கமின்றி செயல்படுத்துகின்ற துணிச்சல் இருந்தால், அப்போது அறிவிற்கு ஏற்பட்ட நிலைதான் தெளிவு எனப்படுகின்றது. இங்கே ஆன்மீகத்தில் தெளிவு என்பது, வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பது பற்றிய முடிவு எடுக்கின்ற அறிவின் பரிபக்குவ நிலையாகும்.
தெளிவு என்பது மனதின் பத்து படிநிலைகளில் ஒன்பதாவது நிலை. உயிரின் படர்க்கை நிலைதான் மனம். உயிர் படர்க்கை எய்தி மனமாக செயல்படுகின்றது. அப்போது மனம் பத்து படிநிலைகளில் இயங்குவதைக் கவனிக்கலாம். அந்தப் பத்துப் படிநிலைகள் என்னென்ன?

ஆகவே தெளிவு என்பது ஆராய்ச்சியின்/சிந்தனையின் விளைவாக, அறிவிற்கு ஏற்படுகின்ற புரிதல் நிலை. எந்த ஒன்றையும் செய்துதான் பெற வேண்டும் என்பதால், முடிவு எடுத்தால்தான் அச்செயலில் ஈடுபட முடியும். ‘தெளிவு’ எவ்வளவு முக்கியமானது இறை உணர் ஆன்மீகத்தில் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். மனிதப்பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுதல் என்று வேதாத்திரிய இறையியல் கூறுகின்றது. அது செயல்முறைக்கு வருவதற்கு, ஆராய்ச்சி செய்து தெளிவு, பெற்று, முடிவிற்கு வந்து அதுபோல் வாழவேண்டும். ‘இறை உணர்வு பெறுதல்’ என்பது வெறும் பதினோரு எழுத்துக்களைக் கொண்ட சொற்களாகவே இருந்து விடக்கூடாது. அது செயல் முறைக்கு வரவேண்டும். எனவே கருத்தியலாக அறிந்ததை, ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, தெளிவு பெறவேண்டும்.
’மனிதப்பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெற வேண்டும்’ என்பதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். ‘வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே’ என்கின்ற கூற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். மனதின் பத்துப்படி வரிசையில், கடைசி மூன்று படிகளுக்கு மனித மனம் வரவேண்டும். இல்லை எனில் மனதின் முதல் ஏழு படிகளிலேயே மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். மனம் பழக்கப்பதிவுகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும். பழக்கம் நல்லதாக இருந்தால் பரவாயில்லை. பழக்கம் வாழ்வின் நோக்கத்திற்கு முரணாக இருந்தால் துன்பமேதான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
மனம் கடைசி மூன்று படிகளான ஆராய்ச்சி, தெளிவு, முடிவிற்கு வரவில்லையானால், ஆறாம் அறிவின் செயல்பாடுகளில் ஏழாவதும், கடைசியுமாகிய ‘தன்னிலை உணர்தல்’ பற்றிய சிந்தனைக்கே வராது. அப்போது அறிவின் நிலையை என்ன என்று சொல்வது? மனித இனத்தின் முந்தைய நிலையான விலங்கின நிலைதான். விலங்கினப் பதிவுகள்தான் ஆதிக்கம் செலுத்தும். ஆராய்ச்சிக்கு வந்தால்தான் அது மனிதநிலையாகும். விலங்கினப்பதிவுகளை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்து மனிதப் பண்புகள் உருவாகும். மனிதப்பண்புகள் இல்லாமல், அதாவது பண்பேற்றம் பெறாமல் இறை உணர்வு என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.
‘வாழ்வின் நோக்கம், இறை உணர்வு பெறுதலே’ என்பதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது தெளிவு ஏற்படாதவாறு பல இடையூறுகள் ஏற்படலாம்.
அறிவு ஏற்கனவே புலன்மயக்கத்தில் வாழ்ந்து வருவதால், அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து வருவதற்கு சிரமப்படும். புலனின்பம் துய்ப்பதில் அளவும், முறையும் பின்பற்றப்படவில்லையானால் ‘இறை உணர்வு’ என்பது செயல்முறையில் எவ்வாறு சாத்தியமாகும்? அளவும், முறையும் பின்பற்றாத அறியாமை நிலையில், துன்பமே மிஞ்சும்.
அறிவை அறிகின்ற அறிவுடைமையாகிய இறை உணர்வு பெறுவது என்பது அறியாமை நீங்காமல் எவ்வாறு சாத்தியமாகும்? அறியாமை நீங்கினால் துன்பம் வராது. அறியாமை நீங்கும்போது, ஏற்கனவே முன்வினையின் பயனாக துன்பம் வந்தாலும், அதனை எதிர்கொள்ள வேண்டியத் திறமையும், யுக்தியும் அறிவிற்கு ஏற்படும்.
இறை உணர்விற்கு வேறு என்ன பெயர்? ஞானம் பெறுதல் என்றும் சொல்லலாம். ஞானம் என்பது அறிவின் தெளிவு நிலை. இது பொதுவான விளக்கம். சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பதனை அவரவர்களே உறுதி படுத்த வேண்டும். இதனை உறுதிபடுத்துவதில் இறை உணர் ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு என்ன சிரமம் உள்ளது? இறை உணர்வு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது ஒரு காரணம். எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்கின்ற தவறான புரிதல் காரணம். மனிதனாகப்பிறந்தவன் மனிதனாக வாழ்தலே இறை உணர்வு பெற்ற நிலைதான். இறை உணர்வால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கு என்ன பயன்? அறம் வளரும். இறை உணர்வு பெற்ற தனிமனிதனால் அவனுக்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி நன்மையே. அறம் வளரும்போது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் மலர்கின்றன சமுதாயத்தில். இதுதானே தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்குத் தேவை. ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் மலர்ந்த மனிதன் மனநிறைவோடு வாழ்வான். தீயவைகள் அவனை அண்டா. மனிதலட்சணத்தோடு வாழ்வான்.
மகரிஷி அவர்கள் தெளிவினால், வாழ்வின் நோக்கம் என்ன என்று கண்டுபிடித்த போதும், முடிவாக அதனை அடைந்த பேரானந்தத்தையும் நமக்காக ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் கூறுகிறார். அக்கவியிளை நினைவு கூறலாம். மகரிஷி அவர்கள் முப்பத்தைந்து வயதில் இறை உணர்வு பெற்றுவிட்டார். பிறகு ஐம்பது வயதிலிருந்து சமுதாயத்திற்கு முழுவதுமாக சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார். மகரிஷி அவர்கள் எப்போது கவிகள் எழுத ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. இன்பம், இன்பம், இன்பம், இன்பம் என்கின்ற தலைப்பைக் கொண்ட கவி எப்போது எழுதினார் என ஞானக்களஞ்சியத்திலிருந்து தெரியவில்லை. ஆனால் 1998 ஜனவரி மாத அன்பொளி இதழில் வெளியாகி இருந்தது இக்கவி. இக்கவியினை நினைவு கூர்வோம்.
பொருள்: தான் பேரின்பம் அடைந்ததை நான்கு நிலைகளாகக் கூறுகிறார்.
1) பிறவியின் நோக்கத்தை அறிந்த போது.
2) நோக்கத்தை அடைய மனம் தூய்மை ஆனபோது.
3) உயர்வான துறவு நிலை உணர்ந்த போது
4) முடிவாகத் துறவுநிலை பெற்றபோது
ஆகிய நான்கு நிலைகளிலும் பேரின்பம் அடைந்ததை எவ்வாறு உரைப்பேன் என்கிறார். இந்த நான்கு நிலைகளும் எதனைத் தெரிவிக்கின்றன. மகரிஷி அவர்கள் படிப்படியாக இறை உணர்வைப் பெற்ற நிலைகளைத்தான் எடுத்துரைக்கின்றன.
1) ‘பிறவியின் நோக்கத்தை அறிந்த போது’ என்றுதான் கூறியுள்ளாரே தவிர, அது எது என்று பாடல் வரிகளில் கூறவில்லை. ஒரு வேளை அவரது சிந்தனாப்பள்ளி மாணவர்களுக்கு ‘பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது’ என்று அவர் ஏற்கனவே கூறியிருப்பது தெரிந்ததுதானே என்பதால் கூறவில்லையோ?! எனவே பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதுதான் என்று அறிந்த போது என்றே நாம் எடுத்துக் கொள்வோம். இந்த முதல் படியே மகரிஷி அவர்கள் தெளிவடைந்த நிலை. பின்னர் இரண்டாவது படியில் இறை உணர்வு என்பதனை மாற்றுக் கோணத்தில், அதாவது இறை உணர்வின் பயன்பாட்டைக் கொண்டுக் கூறுவதனை அறிய முடிகின்றது. ஏற்கனவே “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு” எனக் கூறியுள்ளார். அதனைக் கொண்டே இரண்டாவதாக என்ன செய்தார் எனக் கூறுகின்றார்.
2) இறை உணர்வு என்ன என்று தெளிவாகிய பிறகு பொறுப்புணர்ந்து, அறநெறியாகிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றிலும் விழிப்போடு இருந்து, பொறுப்புணர்ந்து செயல்களாற்றி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மை ஆன போதும் பேரானந்தத்தை அடைந்தார். ஏனெனில் அவர் தெளிவடைந்ததால், அதற்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதனை செய்து வரும்போது, முதல் நிலையில் பெற்ற பேரானந்தம் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து முடிவாக மனம் தூய்மை ஆனபோது இரட்டிப்பு பேரானந்தம் அடைந்துள்ளார்.
இந்த இரண்டாவது நிலையைக் கவனிக்கும்போது இறை உணர்வு பெறுவது என்பது மனம் தூய்மை அடைதலே அன்றி வேறில்லை என்றாகின்றது. ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்’ எனப்படுகின்றது. மனம் தூய்மை அடைந்துவிட்டது. ஆகவே இறை உணர்வு பெற்றாகிவிட்டதா எனில் பெற்றாகிவிட்டது. ஆனால் இல்லை. ஏனெனில் இறை உணர்வு முழுமை பெறவில்லை. அவரைப் பொருத்த வரை, அதாவது அவரே தந்துள்ள இயற்கையியல்/இறையியல் படி, ‘இறை உணர்வு பெறுவது’ என்பதில் மூன்றாவது நிலையை அடைய வேண்டும்.
3) மூன்றாவது நிலை ‘உறவுகளில் உண்மை நிலை துறவு’ என்று அறிவது. அதனை அறிந்ததை மூன்றாவது நிலையாகக் கூறுகிறார். அத்துடனும் ‘இறை உணர்வு பெறுவது’ முடிந்து விட்டதா எனில் இல்லை. நான்காவது நிலையான
4) முடிவாக அத்துறவு நிலையை அடைந்த போதும் அடைந்த பேரின்பத்தை எவ்வாறு உரைப்பேன் என்கிறார். ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் பயனாக தெறிவு பெறவேண்டும். தெளிவு பெற்ற பிறகு முடிவு எடுக்க வேண்டும். இந்த நிலையிலேயே இருந்துவிட்டால் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த கண்டுபிடிப்பினால் பயன் ஒன்றுமில்லை. முடிவு எடுத்து அதற்கொப்ப செயலில் ஈடுபடவில்லையானால் அதற்கு தெளிவு என்றே சொல்ல முடியாது.
இக்கவி அவருடைய மாணவர்களுக்காக மகா சமாதி அடைவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர்தான் அருளியுள்ளார். மனவளக்கலை பாகம் 1 முதற்பதிப்பில்(அக்டோபர் 1983) வாழ்வின் நோக்கம் பற்றி உரைநடையாக எழுதியுள்ளார். எனினும், 14 வருடங்கள் கழித்து மேலும் தெளிவாக, மனவளக்கலை அன்பர்களுக்கு வாழ்வின் நோக்கம் என்பதனை எதார்த்தமாக சொல்ல வேண்டும் எனக்கருதி இயற்கையே/இறையே அருளியதுதான் இன்பம், இன்பம், இன்பம், இன்பம் என்கின்ற தலைப்பைக் கொண்ட எட்டு வரிகளே கொண்ட கவி.
முன்பெல்லாம் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு (B.E, மற்றும் MBBS) படிப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கே பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுடன், கட்டாயம் நுழைவுத்தேர்வு(Entrance Examination) எழுதி இருந்தால்தான் தகுதி வரும். அதுபோல் இறை உணர் ஆன்மீகத்திற்கு, தெளிவினால், வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டுபிப்பது அவசியமாகின்றது. வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கண்டுபிடிப்பதே வாழ்வின் நோக்கம் அறிவது.
என அழைப்பு விடுக்கிறார் வேதாத்தரி மகரிஷி அவர்கள்.
இப்பாடலை உறங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் அறிவை, தட்டி எழுப்பி சிந்தித்து தெளிவு பெறுவதற்காகவே அருளியுள்ளார். ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்’ எனக் கூறுவதே எதார்த்த நிலையை எடுத்துக் கூறும் அதே வேளையில் தெளிவினை ஏற்படுத்துவதற்கான புனித வாசகம். ‘திரிந்து’ என்றால் நோக்கமில்லாமல் அலைவது என்று பொருள். `Journey of Consciousness’ என்கின்ற ஆங்கில நூலிலே மனிதப்பிறவியன் பயனை அடையவில்லை என்றால், அவனது வாழ்க்கை ‘உணவை உண்டு மலமாக்கிய இயந்திரத்திற்குச் சமம்’ என்கின்ற வரியினைக் காணமுடிகின்றது.
இறைவணக்கப் பாடலில்
“எல்லாம் வல்ல தெய்வமது;
எங்கும் உள்ளது நீக்கமற;
சொல்லால் மட்டும் நம்பாதே;
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”
என்கிறார் மகரிஷி அவர்கள்.
எனவே தெளிவு என்பது சிந்தித்தலிருந்து பிறப்பதுதான்.
அரசனாக இருந்து, பட்டிணத்தடிகளை வீண்பழியின் காரணமாகத் தண்டிக்க இருந்த பத்திரகிரியார் (இறைவன் பட்டிணத்தடிகளை தடுத்தாட்கொண்டநிலை அது), அவருக்குச் சீடராக மாறியவர். அவர் அருளிய மெய்ஞ்ஞானப் புலம்பல் என்னும் தலைப்பில் அருளியுள்ள பாடலை அறிவோம்.
‘எப்போது பொழியும்’ என எதிர்கால வினையில்தான் கூறுகிறார். எனவே அந்த நிலையை அடையும் முன்னரே, அடைய இருக்கும் அந்த அனுபவத்தைப் பற்றி பத்திரகிரியார் தெளிவடைந்து வந்து கொண்டிருந்ததால் கூறமுடிந்திருக்கின்றது.
எனவே தெளிவு என்பது ஆனந்தத்தை தருகின்றது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அறிவு என்பது எது? அறிவதற்காகவே உள்ளது அறிவு. அதுவும் அறிய வேண்டியதை அறிந்து விட்டால், அதாவது, தான் யார் என்று தெரியாத நிலையைில், தன்னையே அறியும்போது/அறிந்த தெளிவில் அதற்கு ஆனந்தம் ஏற்படாதா என்ன? இதனைச் சொல்வதும் அதே அறிவுதான். தெளிவினை அனுபவித்துப்பார்க்கலாமே. வாழ்க வளமுடன்.
28-03-2016 அன்று மகரிஷி அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்துவதற்காக கூடினோம். அன்று திருவேதாத்திரியம் தந்துள்ள இறை உணர் ஆன்மீகத்திற்கு ‘தெளிவு’ மிக மிக அவசியம் எனக்கருதி, தெளிவு என்ற பொருளில் சிந்திக்க ஆரம்பித்தோம். இன்றோடு ஆறு விருந்துகள் முடிந்தன. ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’ என அழுத்தமாக உறுதி அளித்துள்ளதால் இப்பிறவியிலேயே தெளிவு பெற்று இறை உணர்வு பெறுவோம் என மகரிஷி அவர்களுக்கு தெரிவிக்கும் வேளையில், அவரது சூக்கும உடல் என்றென்றும் நமக்கு காப்பாகவும், வழிநடத்தியாகவும் இருக்குமாறு மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-04-2016-புதன்) பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற சிந்தனையைத் தொடர்வோம். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
![]()









Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.