November 2016

Monthly Archives

  • C248-எல்லாப் புகழும் இறைக்கே! – 8/?

     வாழ்க மனித அறிவு                                          வளர்க மனித அறிவு

    FFC – C248

    30-11-2016 -புதன்

    மீண்டும் காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

    FFC-144-பொருள் புகழ் செல்வாக்கு

     

            காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடல் எட்டு வரிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் காந்த தத்துவ நூலில் மகரிஷி அவர்கள் அதற்காக அளித்துள்ள விளக்கவுரை 86 வரிகளில் அமைந்துள்ளது. இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்துகொள்வோம். இருப்பினும் அன்பர்கள் மீண்டும் மகரிஷி அவர்களின் விரிவுரையை வாசித்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

         மனிதப் பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து, விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறநெறியை பழகிக் கொள்வதில்லை. ஆகவே பல பிறவிகளாக, கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவாகிய ‘பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை’ சஞ்சித கா்மாவாக வந்துவிட்டது. அது பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம் (செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகிவிட்டது. ஆசை பெருகுவதால்,

    1)   எவ்வளவு இருந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.

    2)   அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு விடுகின்றது. உள்ளமும் கெடுகின்றது. அதற்கும் மேலாக மனித உறவில் இனிமை கெடுகின்றது.

    3)   தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடிவதில்லை. நிறுத்தவும் முடிவதில்லை. தேக்கம் ஏற்படுகின்றது.

    4)   விளைவு, மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்பவர்களுக்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார் இப்பாடலின் விரிவுரையில்.

       பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகியவைகளில் புகுந்தழுந்தி மனித மனத்தைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் இருள் வாழ்க்கையில் வாழ்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே புகுந்து, அழுந்தி, புண்ணாகுதல், மனித மனம் ஆகிய நான்கு சொற்களைக் கவனிக்க வேண்டும்.

    1)   புகுந்து — தடையில்லாமல், யோசனை இல்லாமல், உள்ளே நுழைதல்

     

    2)   அழுந்தி – உள்ளிறங்குதல், புதைதல், ஒட்டிக் கொள்ளுதல், நிலை கொள்ளுதல்.

    எனவே புகுந்து, அழுந்தி என்கின்ற இருசொற்களின் பொருளை உற்று நோக்கினால், ‘புகுந்தழுந்தி” என்று மகரிஷி அவர்கள் கூறும் உட்பொருளை புரிந்து கொள்ள முடியும்.

    முன் யோசனை இல்லாததால்,

    நுண்மாண் நுழைபுலனறிவு  இல்லாது – விளைவறியாது,

    பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புதைந்து கொள்ளுதலை,

    புதைகுழியில் விழுந்து தானாகவே எழுந்து வரமுடியாத நிலையோடு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது.

    புதைகுழியில் விழுந்தவர் வேறொருவரின் உதவியின்றி எழுந்து வர முடியாது. அதுபோல் இருளிலுள்ள இந்த சமுதாயம் மருள் என்கின்ற மயக்க நிலையில் ஏற்ற ஆசை, அதனால் வருகின்ற பழிச்செயல்களிலிருந்து மீள்வதற்கு, புதைகுழியில் விழுந்தவருக்கு உதவும் வேறொருவர் போல், மகரிஷி அவர்கள் விளக்கம் தந்து உதவுகிறார்.

    3)   புண்ணாகுதல் –

         உடல் உறுப்புகளில் புண் உண்டாவதை அறிவோம். உறுப்புகளில் சதை, இரத்தம் இருக்கும். அங்கே புண் உண்டாகும். புண் சரியாகவில்லையென்றால் சீழ் வரும். ஆனால் அரூபமாக இருக்கின்ற மனதில் எவ்வாறு புண் வரும்? புண்ணாகும் என்று கூறிச் சிந்திக்கச் செய்கிறார்   இங்கே மகரிஷி.

     

    4)   மனித மனம்

    ‘மனித மனம்’ என்று கூறியிருப்பதனை கவனிக்க வேண்டும். மனம் என்றே சொல்லியிருக்கலாம்.      ஆனால் மனித மனம் என்கிறார். மனம் இதமாக இருப்பவன் மனிதன் (மனம்+இதம்=மனிதன்). மனிதனுக்கு மனம் இதமாக இருக்கவேண்டும். மனம் ‘புண்ணாகி’ என்பது இதமாக இருக்க வேண்டிய மனம், இதமிழந்து இருப்பதனைக் குறிப்பிடுகின்றது.

       ‘இதம்’ என்பது சுகத்தைக் குறிக்கின்றது? எப்போது சுகம் கிடைக்கும் மனதிற்கு?

         மனம் இசைவாக இருக்கும்போது சுகம் கிடைக்கும். இசைவு என்பது ஒத்துப்போகுதல். அதாவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமல் இருப்பதும், முடிந்தால் நன்மை செய்வதும்தான் இசைவும், ஒத்துப் போகுதலுமாகும். இதுவே இயற்கையின் நோ்மறை(positiveness) யாகும். ஆகவே மனதிற்கு சுகமளிக்கும்.

         அளவாகவும், அனுபவிக்கத் தகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும் மனம், இதமாக இருக்கும். மனம் எந்த ஒன்றையும் அனுபவித்தாலும், இன்பவியல் சூத்திரமான(formula) அளவையும், முறையையும் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் இன்பமே துன்பமாகும் விந்தையினை சந்திக்க வேண்டிவரும்.

       ஆகவே உருவமில்லாத மனம் புண்ணாகுதல் என்பது, இசைவில்லாமலும், அளவையும்,    முறையையும் முறையே மீறுதலும், மாற்றுதலாகும்.

          பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் ஆகிய நான்கில் புகுந்து அழுந்தி மனித மனம் புண்ணாகி, இருளடைந்துவிட்ட வாழ்க்கையில் ஒளியைக்கொண்டு வர தனது விளக்கத்தினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். புகுந்து அழுந்தி அனுபவிக்கும்போது இன்பவியல் (இன்பம்+இயல்) மறக்கப்படுவதால், இயற்கையின் இனிமை கெட்டு வாழ்வில் துன்பங்களே விளைகின்றன.

       இன்பவியல் என்பது என்ன? இன்பதுன்ப நிகழ்ச்சியினை வேதாத்திரியம் அறிவியல் அடிப்படையில் விளக்குவதால் இன்பதுன்ப நிகழ்ச்சியினை இயல் என்கிறோம்.

    மனிதனின் உறுப்புகள் இயங்குவதனை மருத்துவ இயலாகக் கொள்கின்ற போது,

    உறுப்புகள் இயங்குவதே இன்பம் அனுபவிப்பதற்கே என்றிருக்கும் போது,

    அந்த இன்பம் என்பது என்ன என்று இதுவரை மருத்துவ விஞ்ஞானம் கூறாத நிலையில்

    வேதாத்திரியம் இன்ப துன்ப நிகழ்ச்சியினை அறிவுபூர்வமாகக் கூறுவதால்

    இன்பதுன்ப நிகழ்ச்சியினை அறிவியலாகக் கருத வேண்டியுள்ளது

    வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களால்.

    இன்பவியலின் சூத்திரத்தை மட்டும் இங்கே நினைவு கொள்வோம். இன்பவியலை முழுவதுமாக   வேறொரு விருந்தில் விரிவாக அறிவோம். இன்பவியலின் சூத்திரம் என்ன?

    ஒன்று அளவை (limit) மீறக்கூடாது; மற்றொன்று முறையை (method) மாற்றக்கூடாது என்பதாகும்.

    துன்பத்திற்குக் காரணமான அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.

       இன்பம் அனுபவிப்பதில், இன்பவியல் முன்னரே தெரிந்திருந்தாலும் பழக்கத்தால் அலட்சியப்படுத்தினாலும், தெரியாதிருந்தால் அது அறியாமையாகி, இரண்டுமே மனிதஅறிவின் குறைபாடுகளாக இருப்பதால் இயற்கையின் இனிமை கெடுகின்றது. விளைவு – வாழ்வில் துன்பங்களாக விளைகின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை அறிந்து கொள்வோம்.

     

     

     

     

     

     

     

     

     

     

  • சிந்திக்க வினாக்கள்-232

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    28-11-2016 – திங்கள்

    ‘கலாச்சாரம்’ என்கின்ற சொல்லுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • C247-புகழும் உயர்புகழும் – 7/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – C247

    27-11-2016 – ஞாயிறு

    இன்றைய விருந்தில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்துவது எவ்வாறு பேரின்பம் அடைவதை இழக்க வைக்கின்றது என்று அறிவோம். அதற்கு காந்த தத்துவத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கவனிக்க வேண்டும்.

    காந்த தத்துவம்

    FFC-143-NEW- எல்லாப்புகழும் இறைக்கே

     

    மெய் உணர்தல் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பொருளல்லாதவற்றை பொருள் எனக் கொள்ளுதல்(குறள் எண். 351) மயக்க உணர்வு என்கிறார். அம்மயக்க உணர்வால் சிறப்பு இருக்காது. துன்பமே உண்டாகும் என்கிறார்.
    அதே போன்று மற்றொரு குறளில்(355) எப்பொருள் எத்தன்மையதாக, தோன்றினாலும், அப்பொருளின் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும் என்கிறார். இந்த அடிப்படையில்தான் பெரியபுராணத்தில் ‘ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ எனப்படுகின்றது. இது விரக்தியால் சொல்லப்படுவதன்று. ஓடு, செம்பொன் என்கின்ற இரண்டு பொருட்களும் தூல நிலையில் வேறு வேறாகத் தோன்றுகின்றது. ஆனால், சூக்குமத்தில் இரண்டும் அணுக்களால் ஆனதே. காரணநிலையில் இரண்டிலும் காந்தம் வெளிப்படுகின்றது. இந்த நிலையில் பொருள் கொள்ளும் போதுதான் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றான் என்பது சரியாக இருக்கும்.
    அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தில் 423 வது குறளில் எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், அப்படியே எடுத்துக்கொள்ளாமல், சுயமாய்ச் சிந்தித்து அப்பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர்(மானசீக குரு) வழி வந்த மகரிஷி அவர்கள் அதனை மேலும் நமக்குத் தெளிவாக்கியுள்ளார். பொருள், நிகழ்ச்சி என்றும், இயற்கையின் இரகசியம் எது என்றும் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    இயற்கையின் இரகசியம் எது என்று கூறும்போது மூன்றடுக்கு இயக்க நிலைகளான தூலம், சூக்குமம், காரணம் ஆகியவற்றில் சூக்குமமும், காரணமும் இயற்கையின் இரகசியங்கள். அதனை எந்த அளவிற்கு உணர்கின்றோமோ, அந்த அளவிற்கு வாழ்வில் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும் என்கிறார் மகரிஷி அவர்கள். இல்லாவிடில் திருவள்ளுவர் கூறியதுபோல் மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தின் நோக்கம் என்பது இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அனுபவித்தலே. மெய்ஞ்ஞானத்தின் நோக்கம் அவ்வாறு இயற்கை வளங்களிலிருந்து மாற்றப்படும் வாழ்வின் வளங்கள் எல்லோருக்கும், எல்லாவற்றையும் போதுமான அளவில் கிடைக்கச் செய்து, எல்லோரும் இன்புற்று, உலகில், ‘அமைதி பூத்துக்குலுங்க’ வழி செய்வதே. அதற்கு மெய்ப்பொருள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தெளிவாகிட வேண்டும். மெய்ஞ்ஞானம் அடைவதற்கான பயிற்சிகள் மட்டுமே உலகில் அமைதியினை ஏற்படுத்திவிடாது.

    720 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில். தனிநபர்கள் வெகு சிலர் மேற்கொள்ளும் மெய்ஞ்ஞானப் பயிற்சிகளால் மட்டுமே உலகில் அமைதி வந்துவிடாது. அப்பயிற்சிகளை செய்பவர்களுக்கு மட்டுமே அமைதி கிடைக்கும். மெய்ஞ்ஞானப் பயிற்சிகளை மக்கள் அனைவருமே மேற்கொள்வதில்லை. மேற்கொள்ளவும் இயலாது. ஆனால் உலகில் அமைதி நிலவிடவேண்டும். ஆகவே உலகில் அமைதி நிலவிட, மெய்ஞ்ஞானப் பயிற்சியின் நோக்கத்தையும் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவையும் கருத்தில் கொண்டு சமுதாய வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பலதிட்டங்களை தீட்டி ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

    மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. இதற்காக இரவு பகலாக சிந்தித்து மகரிஷி அவர்கள் உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இம்முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் உலக சமாதானப் பாடல்களுக்கு தானே விரிவுரை அளிக்க விரும்பி முதலில் தமிழில் விளக்கவுரையும், உலக சமாதானம் என்பது உலகத்திற்கு பொதுவானது என்பதால், பிறகு இரண்டாம் பதிப்பில் விளக்கவுரையை மட்டும் உலகப் பொது மொழியான ஆங்கிலத்திலும் அளித்துள்ளார்.

    காந்த தத்துவ நூலின் முகவுரையில் மகரிஷி அவா்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்” என முற்காலத்தில் அறிவை உணர்ந்த பேரறிஞர் ஒருவா் தன்னுடைய சீடர்களுக்குக் கூறியுள்ளதாகக் கூறுகிறார். அதுதான் பிரணவம் என்கின்ற சொல்லால் விளக்கிய காந்த தத்துவம் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே காந்த தத்துவம் பற்றிய கவிகளுக்கு மகரிஷி அவர்களே விளக்கவுரை நல்கியுள்ளார்.
    காந்த தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை’ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது?

          காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக, பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக் கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடல் அமைந்துள்ளது.

    ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்கின்ற முதல் பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விரிவான விளக்கவுரையை அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். முதல் பாடல் எட்டு வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், மகரிஷி அவர்களே அவ்வரிகளுக்காகத் தந்துள்ள விரிவுரை 181 வரிகளில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே தத்துவ நூல்களையும், தத்துவக் கவிகளையும் படிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை (word to word) பொருள் கொள்ளக் கூடாது. வரிகளுக்கு வரி பொருள் கொள்ளக்கூடாது. வரிகளுக்கு இடையேயும் பொருள் கொள்ள வேண்டும் (We must read in-between lines)

    அவ்விரிவுரையில் மகரிஷி அவர்கள், தான் இறையுணர்வு பெற்றதை படிப்படியாக விளக்குகிறார். நம்முடன் மகரிஷி அவர்கள் நேராக பேசுகின்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒருவேளை, வேறு யாராவது விளக்கவுரை தந்திருந்தால் மகரிஷி அவர்களின் சொந்த இறையுணர்வு அனுபவம் விடுபட்டே போயிருக்க வாய்ப்புண்டு.

    மகரிஷி அவர்கள் அவரது விளக்க உரையில், எவ்வாறு காந்த தத்துவத்தில் அவர் தெளிவு பெற்றார் என்பதனைக் கூறுகிறார், ஆக்கினைத் தவமும், துரிய தவமும் ஆழ்ந்து செய்யச் செய்ய தனக்கு சக்திகள தவம், சிவகளத்தவம் இரண்டும் உள்ளுணர்வாக உருவானதைக் கூறுகிறார். அதனால்தானே அவரது மனவளக்கலை பயிற்சியில் சக்திகள தவமும், சிவகளத்தவமும் இடம் பெற முடிந்தன. இது இயற்கை/இறையின் ஏற்பாடன்றோ!

    இவ்விரண்டு தவங்களினால் , பொருள், புகழ், இன்பம், செல்வாக்கு ஆகிய நிலைகளில் அலைச் சுழல்களாக இயங்கிக் கொண்டிருந்த மனம் இருப்பு நிலையான அமைதிக்கு வந்து நின்ற அனுபவம் பெற்றதாகக் கூறுகிறார், இந்த அனுபவத்தைக் கொண்டு நிலைக்கும், அலைக்கும் இடையே அவரது ஆராய்ச்சி தொடர்ந்ததாகக் கூறுகிறார், அதன் விளைவாக நிலையானது அறிவும் என்றும், அதுவே அலைநிலையில் மனமாக இயங்குகின்றது எனவும் விளக்கம் பெற்றார் என்கிறார், பிறகு காந்தம் உருவாவது பற்றியும். அந்த காந்த ஆற்றலின் தன்மாற்ற விளைவுகளே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மனம் என்கின்ற ஆறு உண்மைகளைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

    இறையே தனது துண்டுபட்ட பகுதி நிலையில் (fractionated state) பிரபஞ்சத்தில் இயங்கும் எல்லாப் பொருட்களாகவும் இருப்பதால் இறையின் தன்மை அனைத்தும் ஒவ்வொன்றிலும் இருப்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார், இறையே எல்லாமாகவும் இருப்பதால் அணு முதல் அண்டங்கள் வரை நெறி தவறாமல் இயங்கி வருவதை உணர்ந்தார், இந்த உண்மையினை உணர்ந்து உணர்ந்து அதில் லயமாகும் போதெல்லாம் அந்த மனநிலையே தனக்கு உயர்ந்த தவமாக அமைந்தது என்கிறார், மனதின் அடித்தளமாக விளங்கும் இறைநிலையை உணர்ந்த அந்த விழிப்புநிலையை பேரானந்தம் என்கிறார்.

    ஆகவே முதல் பாடலுக்கான விளக்கவுரையை காந்ததத்துவ நூலில் கட்டாயமாக வாசித்துப் பயன் பெறவும்.
    அடுத்த அறிவிற்கு விருந்தில் மேலும் சிந்திப்போம்.