November 2016

Monthly Archives

  • C244-எல்லாப் புகழும் இறைக்கே! –4/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    lotus                

    அ.வி. 1C244

    16-11-2016 –புதன்

    FFC-140- சுயமாஙய்ச் ச்ிந்தித்தே தெளிவாய்
    இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு மகரிஷி அவர்கள் சீடர்களுக்கு கூறும் அறிவுரையைக் — Information, conformation, Transformation” கவனிக்க வேண்டும். அதாவது அவர் கூறுவதனை தகவலாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார், “Doubt what I say’ என்பார். திருவள்ளுவர் அறிவுறுத்துவதுபோல் அந்த தகவல் சரிதானா, சரியில்லையா, அந்த தகவல் உண்மைதானா, என சீடர்களை உறுதிப்படுத்தச் சொல்கிறார். உறுதிப்படுத்திய பிறகு அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார். ஏன் இவ்வாறு சொல்கிறார்? வீடு கட்ட வேண்டும் என முடிவு செய்தாகிவிட்டது. அடுத்தது அதற்கான வரைபடத்தை(plan- Blue print) தயார் செய்து அரசிடம் approval வாங்கி வைத்துவிட்டால் போதாது. வீடு கட்டி முடிந்ததாகிவிடுமா? அந்த வரைபடம் போல் வீட்டைகட்டி அதில் குடியேற வேண்டும். அதுபோல் அவர் கூறும் தகவல்களை சரிபார்ப்பதோடு இருந்துவிடாமல் தகவல்களை சரிபார்த்த பிறகு தன்னிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தால்தான் பலன் ஏற்படும் என்கிறார். மாற்றத்தால்தான் பலன் ஏற்படும்.
    அவர் சிந்தித்து சொன்ன கருத்தை சீடரும் சிந்தித்தால் தனதாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் சீடரிடம் மாற்றம் வரும். ‘உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார். அதனால் உடற்பயிற்சி செய்கிறேன்’ என்றில்லாமல், ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடற்பயிற்சி எவ்வாறு பயனளிக்கின்றது என்பதனை அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    எப்போதும் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையை விளங்கிக் கொள்ள ஆர்வம் வேண்டும். ஏன் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்? மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். இயற்கையின் இரகசியம் எது என்றும், அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-139-இயற்கையின் இரகசியம் எது

    மகரிஷியின் இந்த அறிவுரையை துணையாகக் கொண்டு நம் சிந்தனையைத் தொடர்வோம்.
    பேரியக்க மண்டலத்தில் இயக்கத்தை உற்று நோக்கினால், அது மூன்றடுக்கு இயக்க நிலைகளாக .இயங்கிக் கொண்டிருப்பதை அறியலாம். அவையாவன – தூலம், சூக்குமம், காரணம். தோற்றங்கள் என்றாலே அது தூல வடிவில் இருக்கும். வடிவம் இருந்தாலும் அந்த தூல வடிவமே அத்தோற்றத்தின் உண்மை நிலையாகாது. அதனால்தான் திருவள்ளுவர் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் மெய்ப்பொருளை(உண்மை நிலை) காண்பது அறிவு என்கிறார். அந்தத் தோற்றம் இயக்க நிலைதான். அந்த தோற்றத்தில் இரண்டு இரகசியங்கள் அடங்கியுள்ளன.
    . உதாரணத்திற்கு உடலை எடுத்துக் கொள்வோம். உடல் வடிவமுள்ளது. அந்த வடிவமே உடல் ஆகிவிடவில்லை. உடலே மனிதனாகிவிடமுடியாது, உடல் செல்களால் ஆனது. அந்த உடலுக்குள் உயிர் இருக்கின்றது. பஞ்ச பூதங்களில் முதல் பௌதீகப் பிரிவான விண் உடலில் சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றது, அதுவே உயிர் எனப்படுகின்றது. நுண்ணியதாக இருப்பதால் அது நுண்ணுடல் எனப்படுகின்றது. உயிர் புலன்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாமல் சூக்கும நிலையில் உடல் முழுவதும் ஓடுவதால் இது சூக்கும உடல் எனப்படுகின்றது. சூக்கும உடலில் அமைந்துள்ள விண்களின் தற்சுழற்சியால் வெளியேறும் இறைத்துகள்களால் எழும் அலைகளால் அமைந்ததே சீவகாந்தக்களம். இது காரண உடல் எனப்படுகின்றது. உடல் என்பது தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்கு இயக்க நிலைகளாக உள்ளது.
    ஆகவே எந்த ஒரு இயக்கத்திலும் தூல நிலை புலன்களுக்கு தெரியும். ஆனால் சூக்குமமும், காரணமும் புலன்களுக்கு எட்டாது. இரகசியமாக இருக்கும். இந்த மூன்றும் தனித்தனியாக இயங்க முடியாது. எனவே இந்த மூன்றும் ஒன்றால் ஒன்று நிலை பெறுகின்றது, சிறப்புப் பெறுகின்றது. இந்த உண்மையை உணரும்போதுதான் மனிதனுக்கு இயற்கையின் தன்மையை அறிந்து, எந்த அளவுக்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும் என்கின்ற தெளிவு உண்டாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இயற்கையின் இரகசியம் என்பதே சூக்குமம், காரணம் என்கின்ற இரண்டு நிலைகளுமாகும். இயற்கையின் இரகசியம் எந்த அளவிற்கு உணரப்படுகின்றதோ அந்த அளவுக்கு வாழ்வில் பொறுப்புணா்வு ஏற்படும் என்கிறார். அவ்வாறில்லாமல் தூலம் புலன்களுக்கு எட்டுவதால் அதன் மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழி வகுப்பதாகிவிடும் என்கிறார்.

    மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் உண்மை என்பதும் மேன்மை என்பதும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள். மேன்மை புலன்களால் உணரமுடிவதால், அதனை மட்டும் அனுபவித்துவிட்டு உண்மையை அறியாமல் இருக்கக்கூடாது.
    ஆகவேதான் ‘நான் என்பது உடலல்ல, நான் என்பது, அறிவு’ என்கின்ற உண்மை தெளிவாகியதால்தான் ‘நான் யார் என்ற தத்துவமே நாமாக உள்ளோம்’ என்கின்ற உண்மை விளங்குகிறது. உலக சகோதரத்துவம் உண்மையாகின்றது. அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் உயிரறிவு பெறவேண்டும் என்கிறார். மகரிஷி அவர்கள்.
    மலரை எடுத்துக் கொள்வோம். மலர் தோற்றமுடையது. தோற்றம் மட்டுல்லாமல், அதற்கு வண்ணமும் உண்டு. வாசமும் உண்டு. தோற்றம் என்பது தூல நிலை. மலரின் சூக்கும நிலை என்ன? மலர் எதனால் ஆனதோ அதுதான் அதன் சூக்கும நிலை. மலர் அணுக்களால் ஆனது. அணுக்கள் மலரின் சூக்கும நிலை. மலரின் காரண நிலை எது? மலருக்கு வண்ணத்தையும் வாசத்தையும் கொடுப்பது எது? மலரிலிருந்து வரும் காந்த அலைகள். அந்த காந்த அலைகள் தான் வண்ணமிகு, வாசமிகு மலராக காட்சி அளிப்பதற்குக் காரணமாக உள்ளது. மலராக காட்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கு தூல நிலை, கூக்கும நிலை, காரண நிலை ஆகிய மூன்றடுக்கு இயக்கங்கள் அவசியமாகின்றன. இவ்வாறாக மலரின் இரகசிய ஆனால் உண்மை நிலையைக் கொண்டுதான் மலர் வழியே மறைபொருளை விளக்க முடிகின்றது.

    FFC-139- jமலர் வழியே விளங்கும் மறை பொருள்

    இயற்கை அழகை இரசிக்கும் எண்ணம் மிகமிக உயர்ந்துள்ளது. மலரின் உண்மை நிலையை உணராதவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும், மலரின் உண்மை நிலை அறிந்தவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இரண்டாமவர் மலரை ரசிப்பது அவரை இறையுணர்விற்கு கொண்டு செல்லும். இதே போன்றே விடுமுறை நாட்களில் இயற்கை காட்சிகளைப் பார்ப்பதற்கு வெளியில் செல்கிறோம். இயற்கை காட்சிகளின் உண்மையை அறிந்தவர்கள் அன்று பூராவும் இறை உணர்விலேயே இருப்பர். எனவே மேன்மையை அனுபவிப்பதுபோல், உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
    அந்த ஆர்வம் மிகுபட உண்மையை அறிந்து கொள்வதன் அவசியத்தை உணரவேண்டும், அதற்கு உண்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று வேதாத்திரி மகரிஷி அவா்கள் கூறும் விளக்கத்கை அறிய வேண்டும்.

    மனிதனும் சரி மற்ற சடப்பொருட்களும் இயற்கையிலிருந்துதான் உருவாகியுள்ளது. எனவே உண்மை என்பதும் மேன்மை என்பதும் மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உண்மை என்பது — உள்+மை= உண்மை. உள்ளடங்கியது உட்பொருள். மேன்மை என்பது புறச்சிறப்பு. எனவே இந்த இரண்டு சொற்களில் உள்ள எழுத்துக்களான ‘உள்’, ‘மை’ ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கியது தான் உண்மை என்கின்ற சொல் என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது:- மேன்மை என்பது புறச்சிறப்பு. மேலாக புலன்களுக்கு எடுத்துக்காட்டுவது. புலன் உணர்வுக்கு உட்பட்ட மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும். உண்மையை அறியும்போதுதான் மேன்மையின் சிறப்பை எந்த அளவிலே, எந்த முறையிலே நாம் அனுபவிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்  இன்பம் துய்த்தலில் உள்ள உண்மையை ஆராய்வோம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்:

    1) இயற்கையின் இரகசியம் எது என அறியப்பட்டது.
    2) உண்மை என்கின்ற சொல்லின் உருவாக்கம் பற்றி அறிந்தது.
    அ) அதிலிருந்து புலன் மயக்கத்திலிருந்து தெளிவு பெறுவது பற்றியும்,
    ஆ) திருவள்ளுவர் மெய்ப்பொருளை ஏன் அறிய வேண்டும் என்று சொல்கிறார் என்பது பற்றியும் அறியப்பட்டது..

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-228

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-228

    14-11-2016 – திங்கள்

    கடவுளுக்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா? எவ்வாறு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • C243-எல்லாப் புகழும் இறைக்கே! –3/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு

    lotus

    அ.வி. C243

    13-11-2016 – ஞாயிறு

    FFC-139-குரு ஸ்லோகம்  சென்ற விருந்தில், மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது; அப்படியானால் என்ன அர்த்தம் என வினா எழுப்பி இருந்தோம். அப்பொறுப்பும் கடமையும் என்னவென்று இன்றைய விருந்தில் அறிவோம். ஒவ்வொரு மனவளக்கலைஞரும் ஒரு இறைத்தூதுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே

    வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொண்டு,

     விளங்கிய ஒவ்வொருவரும் விளங்கியதை நடைமுறைக்கு கொண்டு வந்து,

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கையின்/இறையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலே,

    சமுதாயத்திற்கு கொண்டு சோ்க்கின்ற கடமையை உணர்ந்து,

    உடலாலும், அறிவாலும், பொருளாலும், குறிப்பாக எண்ணத்தாலும் (ஏனெனில் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதாலும், அதனால் எண்ணம் பரிணாமத்தின் வாகனமாக இருப்பதாலும்) ஒவ்வொருவரையும் தொண்டாற்ற வைக்க இயற்கை/இறை திட்டமிட்டுள்ளதை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் எவ்வாறு என ஐயம் எழலாம். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது எவ்வாறு இயற்கையின் எண்ணம் என்கின்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் இயற்கையின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். இயல்பாகவே மனிதன் தனக்கு தெரிந்த நல்லவற்றை பிறருக்குத் தெரிவித்து, அவர்களையும் மகிழ்வித்து, தானும் மகிழும் இயல்புடையவன். இவ்வாறாக வளர்ந்ததுதான் மொழியும், கலையும். எனினும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதனையும் அறிந்து கொள்வோம். அவ்வாறு தெரிந்து கொண்டால்,  ‘பிறருக்குத் தெரிவிக்கும் கடமையிலும் பொறுப்பிலும்’(duties and responsibilities) தொடர் ஆர்வமும், அதிக அக்கறையும் ஏற்படும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞர் திருமூலரின் விருப்பம்—எண்ணம்– வாழ்த்து. அறிஞர் என்பவர் யார்? அதாவது ஐயமின்றி அறிவை அறிந்தவர் அறிஞர். திருவள்ளுவரின் வாக்குப்படி, ஐயமின்றி அறிவை அறிந்தவரும் தெய்வமும் ஒருவரே.

    ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”                குறள் 702

    எனவே ஒர் அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின்/இறையின் எண்ணம் என்பதும் ஒன்றுதானே! குரு யார் எனக் கூறும் ஸ்லோகம் கூறுவதனையும் கவனத்தில் கொள்வோம்.

    குரு ஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே தேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குரு யார் உணர்த்துகின்றது. மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குரு சாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது. எனவே குரு நிச்சயமாக இறைவனே என்கின்றது இந்த ஸ்லோகம்.

    உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருப்பதனை இயற்கை/இறையினுடைய விருப்பமாக இருக்காதா? ‘எனவே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என திருமூலர் விரும்பியதாக இருந்தாலும் அது இயற்கையினுடையத/இறையினுடையதுதானே! இயற்கை/இறை தானே திருமூலர் வழியாக சொல்லியிருக்கின்றது.

    1984 இல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பேரின்ப களிப்பு என்கின்ற தலைப்பில் உள்ள பாடலில் பத்தாவது செய்யுளை நினைவு கூர்வோம். FFC-139- என்னுள் அவனை வைத்தேன்

    ‘இறைவனாகிப் பாடுகின்றேன்’ என்கின்ற வார்த்தைகள் அவர் இறைவனாகிவிட்டதை தெரியப்படுத்துவதற்காக அல்ல. சுத்த அத்வைதத்தால் வெளிவந்த வார்த்தைகள் அவை. அவர் இறைவனாக ஆவதற்கு முன் நடந்த நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.—1) என்னுள் அவனை வைத்தேன்— 2) ஏற்றி வந்தேன் – 3) போற்றி வந்தேன்— 4) என்னையவனுள் இணைத்தான். சுத்த அத்வைதப்படி இந்த நான்கு நிகழ்வுகளையும் கடந்து வந்த மனிதர் தெய்வமானவர்தானே!

    மேலும் இவ்வாறாக சிந்திப்போம். எண்ணம் என்பது என்ன? எண்ணம் யாருடையது? ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்பதால் அந்த அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின் எண்ணம்தான். இயற்கை, அறிஞரின் வாயிலாக எண்ணமாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிஞர் மட்டும் இயற்கை அன்னையின் குழந்தையல்ல. 740 கோடி குழந்தைகள் உள்ளன தற்போது இயற்கை அன்னைக்கு.

     எனவே

    FFC-138- தெளிவை அளிப்பதே இறையின் அருள்தானே

     ஒரு குழந்தைக்கு உணர்த்தப்பட்டது என்றால், மற்ற சகோதர-சகோதரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதுதானே அந்த மூத்தக்குழந்தையின் கடமையும் பொறுப்பும், நன்றி உணர்வும் ஆகின்றது?! அவ்வாறாக, மூத்தக்குழந்தையின் கடமையிலும், பொறுப்பிலும், நன்றி உணர்விலும் உருவானதுதானே நாம் நுகர்ந்து கொண்டிருக்கும் வேதாத்திரிய பாரிஜாத மலர். வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்(Vethathriam is spring-orifice of Wisdom).

    இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்  அறிவோம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்

    1) மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்கள் என்றும், அதனால் ஏற்பட்டுள்ள கடமையும், பொறுப்பும்

    2) எவ்வாறு குருவும் கடவுளும் ஒருவரே,

    3) தெளிவை அளிப்பதே இறையின் அருள்,

    4) வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading