admin

Author Archives

  • 224-பிறவிப் பயனை நல்கும்! 8/?

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

     
    பிறவிப் பயனை நல்கும்! 8/?

    அறிவிற்கு விருந்து—224

    07-09-2016—புதன்.

    gurudevar

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்.

                                                                                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க வளமுடன்.
    ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்பவரின் நிலை,
    எல்லாவற்றையும் துறந்துவிடுவதுதான் எனத் தவறாக எண்ணி அச்சம் கொண்டு,
    வாழ்க்கையாகிய விருந்தில் ஆன்மீகத்தை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையினை மாற்றி,
    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கை ஏற்றி தொடர்ந்து எறியச் செய்து,
    ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் வேறு வேறன்று, ஒன்றேயான வாழ்வியல் கலை என்கின்ற தெளிவினை ஏற்படுத்தி,
    ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் கலந்த சரிவிகித உணவாக்கி
    அறிவிற்கு இயற்கையின்/இறையின் கருணையினால் அருளப்பட்டுள்ள விருந்தாகிய
    மனவளக்கலையின் பயனாகவே தொடர்ந்து பிறவிப்பயன் பற்றி சிந்தித்து வருகிறோம்.

    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கபட்டுள்ளது:

    இருபதாம் நூற்றாண்டில் அருளப்பட்ட மனவளக்கலை சமுதாயத்தில் என்ன செய்து வருகின்றது என மனவளக்கலைஞரல்லாதோர் அறிய விரும்பி வினவினால் என்ன பதில் அவர்களுக்காக காத்திருக்கின்றது?
    எண்ணெய், திரி இருந்தும் எரியாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு முதன் முதலாக தொடர் ஒளியை சமுதாயத்தில் வீசச் செய்துகொண்டுள்ளதே இந்த மனவளக்கலை’ என்பதே பதிலாகும்.
    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு, தொடர்ந்து சுடர்விடும்படி ஏற்றிவைக்கப்பட்டுள்ளதால், அதற்கு சான்றாக சிந்தனையின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்ள சிந்தனை என்பது என்ன என்று சிறிது நேரம் சிந்தித்துவிட்டு இன்றைய விருந்தை அருந்தச் செல்வோம். பொதுவாக அறிவிற்கு விருந்தே சிந்தனையின் அடிப்படையில் அமைந்திருந்தாலும்,  அடுத்தவிருந்தான,  ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரவர்களின் சுயசிந்தனையே உதவியாக இருக்கும் என்பதால் சிந்தனையைப்பற்றி இன்று சிந்தித்துவிட்டு அடுத்த விருந்தில் ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி (11-09-2016) சிந்திப்போம்.

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்:

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கின்ற சொற்றொடர் புதிதாகவும், புதிராகவும் உள்ளதே. சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்றால் என்ன? சிந்திப்போம்.

    இப்பூவுலகில், சிந்தித்து வாழ்பவர்கள் வெகு சிலரே! வாழ்கின்ற மக்களின் தொகை எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், சிந்தித்து வாழ்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் உள்ளனர். மற்றவர்கள் சிந்திப்பதில்லையா என்கின்ற கேள்வி எழலாம். சிந்தனையோடு சிந்திப்பவர்கள்தான் சிந்திப்பவர்கள். சிந்தனையோடு, சிந்தனை செய்து, பிறகு செயலுக்கு வரவேண்டும். அவ்வாறுச் சிந்தித்து செயலுக்கு வருபவர்கள் அரிதாக உள்ளனர்.

    இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த சீன தேசத்து அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்கிறார். ஏன் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்? ‘சரியானது எது என்று உணர்ந்த பிறகும்’ என்று அறிஞர் கன்பூசியஸ் சொல்வது சிந்திப்பதைத்தான். எனவே இந்த அமுதமொழியை சிந்தனை செய்வதில் பொருத்திப் பார்த்தால், இரண்டு உண்மைகள், புலப்படும்.

    ஒன்று சிந்திப்பது என்றால் என்கின்ற வரையறை.
    மற்றொன்று சிந்தித்ததை செயல்படுத்தமால் இருப்பது கோழைத்தனம் என்பது.

    ‘சரியானது எது என்று’ உணர்வது எப்போது சாத்தியம்?

    ‘சரியானது எது என்று’ உணர்வது அறிவிற்கு எப்போது சாத்தியமாகின்றது? சிந்தனையோடு, சிந்திப்பவர்களுக்கு மட்டுமே  ‘சரியானது எது என்று’ உணர்வது சாத்தியமாகின்றது. சிந்திப்பதற்கு சிந்தனையையே அடைமொழியாகச் சேர்த்து ‘சிந்தனையோடு சிந்திப்பது’ என்று சொல்வதன் பொருள் என்ன?
    ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது என்றிருக்கும்போது மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே சிந்திப்பதில்லை என்றும் ஒட்டு மொத்தமாகவும் கூறமுடியாது. சிந்திக்கின்ற ஒரு சிலர் ஒன்றைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றால் தொடர் விடாமுயற்சியாக, சிந்திக்க எடுத்துக்கொண்ட பொருளில் தெளிவு கிடைக்கும்வரை (அதற்கு விடை கிடைக்கும் வரை) அச்சிந்தனையைத் தொடர் சிந்தனையாக நீட்டிப்பதில்லை. அவர்களுக்கு மனச்சோர்வு (MENTAL FATIGUE) அதற்குள் வந்து விடுகின்றது. திக்கு முக்காடுகின்றனர். அதனைப்போக்க புலன் வழி இன்பத்திற்குச் சென்று விடுகின்றனர் அல்லது அறிவை வேறு திசை நோக்கிச் செலுத்தத் தயாராகின்றனர். அவ்வாறு தொடர் விடாமுயற்சியாக சிந்திக்கின்ற ஒரு சிலரில் வெகு சிலரே முடிவு வரும் வரைச் சிந்தித்து தெளிவு/விடை கண்டு தானும் பயனடைந்து, தெளிவு கண்டதற்கு நன்றி செலுத்தும் முகமாக, தனக்குள்ள பொறுப்பாலும், பொறுப்பின் காரணமாக சமுதாயத்தின் மீது வளர்த்துக் கொண்ட அக்கறையால் அதனை சமுதாயத்திற்கு பொன்மொழிகளாகவோ, கவிகளாகவோ, உரைநடைகளாகவோ அருளி அறிவுத் தொண்டாற்றுகின்றனர்.

    அதனால் பயன் அடைந்த சமுதாயம் அவர்களை அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஞானிகள் என்று அழைத்துப் போற்றுகின்றது. அந்த அளவிலேயே அந்த பயன் நின்றுவிடுகின்றது. ஆனால் அறிஞர்களைப் போன்று தானும் சுயசிந்தனையாளராக வேண்டும் என்கின்ற அவா எழவேண்டும். சரியான சிந்தனை என்றால் அந்த சிந்தனையின் முடிவைக் கொண்டு புரியும் செயலின் செயலால் விளைவு நல்லதாக அமைய வேண்டும். இல்லை எனில் அந்த செயல் சிந்தித்து எடுத்த முடிவின்படிதான் செய்யப்பட்டது என்று சொல்வதில் அர்த்தமில்லை. சிந்திப்பது எதற்காக என்கின்ற புரிதலில் சிந்தனை செய்வதைத்தான் மகரிஷி அவர்கள் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். கேட்பதில் கவனத்தோடு கேட்பது சிறப்பு என்று சொல்வதில்லையா? அதுபோல் தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்று சொல்வதும். அதுபோல்தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். முதல் வாக்கியத்தில் கேட்பதற்கு கவனத்தோடு என்பது அடைமொழியாக உள்ளது. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் சிந்தனைக்கு சிந்தனையே அடைமொழியாக உள்ளது. சிந்தனையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொல்வதற்காக ‘சிந்தனையோடு’ என்கின்ற வார்த்தை அடைமொழியாக இல்லாமல் வேறு எந்த வார்த்தை பொருத்தமாக இருக்க முடியும்? எனவே சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அறிவின் பணி எண்ணுவது. எண்ணுவதுகூட ஒருவழியில் சிந்தனை என்றே கொண்டாலும் சிந்தனையோடு எண்ணுவது சிறப்பு. அதனைத்தான் சிந்தனையோடு சிந்திப்பது என்கிறார். சிந்தனையோடு சிந்திப்பது என்பதற்கு சிரத்தையோடு சிந்திப்பது என்றுகூட பொருள் கொள்ளலாம்.

    சிந்தனைப் பற்றி மகரிஷி அவர்களின் ஒரு சில பொன்மொழிகள்:

    சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் என்கிறார்.
    சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு என்கிறார்.

    விளக்கம்: சிந்திப்பதெல்லாம் எதற்காக? மனிதனின் நன்மைக்காகத்தானே! நன்மை எப்போது வருகின்றது? சிந்தித்த பிறகு அதனை செயல்புரிவதன் மூலம் வருகின்றது. நல்லது விளைவாக வருகின்றது என்றால் அச்செயல் நல்ல செயலாகத்தானே இருக்க முடியும். பண்பு என்றால் ஒன்றின் பண்பு என்று பொருள். எனவே தான் சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதலால் வருவது நன்மையாக இருப்பதால் அதனை நற்பண்பு என்கிறார்.

    இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும் சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான் என்று, தான் வாழ்ந்து கண்ட அனுபவத்தால் உறுதி கூறுகின்றார்.
    தெய்வத்தைப் போற்றி வழிபட்டு வாழ்வோர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்து உயர்வார் என்கிறார்.  சினம், அச்சம்(FEAR IS THE GREATEST SIN) ஒழியச் சிந்தனையை ஏற்றி சீவன் நிலைகளை நன்குணர வேண்டும் என்கிறார். சமுதாயத்தில் உள்ள தனிமனிதனும், குடும்பங்களும் துன்பங்களையும் சிக்கல்களையும் அனுபவிக்கிறார்களே தவிர அவற்றைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை செய்ய யாருக்கும் நேரம் இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார்.

    யாவற்றையும் சிந்தித்து தங்கள் வாழ்க்கையில் கொண்டுவந்து, அப்புறம் அதை நாட்டிற்குக் கொடுங்கள் என்கிறார்.

    பிறந்தவர்கள் அனைவருமே இறக்கும் வரை வாழ்கிறார்கள். அதனால் எல்லோரையும் வாழ்ந்ததாகக் கொள்கின்றதா இந்த சமுதாயம்? கொள்வதில்லையே!
    இல்லையே! வாழ்கின்றவர்களில் ஒரு சிலரைத்தான் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்கின்றது இந்த சமுதாயம். ஏன்? அவர்கள் எல்லோரையும் போல், சிந்திக்காமல் வாழ்வதில்லை. அவர்களது மூச்சே சிந்திப்பதுதான். இடைவிடாது சுவாசம் நடந்த கொண்டிருப்பது போல் ஆராய்ச்சியும் சிந்தனையும் அவர்களிடம் நடந்துகொண்டே இருக்கும்.

    இறக்கும் வரை எவ்வாறு சுவாசம் அவசியமாக இருக்கின்றதோ, அதுபோல் சிந்திப்பதும் நடந்திருக்கின்றது அவர்களது வாழ்வில். சுவாசிப்பது அனிச்சைச் செயல். தானாக நடப்பது. அதுபோல் சிந்திப்பதும் அவர்களின் வாழ்வில் அனிச்சையாக நடப்பது. எனவே அவர்களை சிறப்புப் பெயர்களால் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் எனப்படுகின்றனர்.

    தவறு எப்போது நடக்கின்றது?

    சிந்திக்காமல் செயல்படும்போது தவறு நடக்கின்றது. ஏனெனில் சிந்திக்காதபோது செயலின் உடன் அல்லது பின்விளைவு கணிக்கப்படுவதில்லை. எனவே செயலுக்கு விளைவு, நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம் ஆகிய ஐந்து காரணிகளுக்கேற்ப வருவதால், சிந்திக்காதபோது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்யப்படும் செயல்களின் விளைவு ஐந்தில் ஏதாவது ஒரு காரணி சரியாக அமையாவிட்டாலும் சரியானதாக இருக்காது. ‘விளைவு சரியானதாக இருக்காது’ என்பது விளைவு துன்பமாக வருவதைத்தான் குறிக்கின்றது. துன்பத்தை அனுபவிக்கவா மனிதன் செயல் புரிய வேண்டும்?’ தன் கண்களைத் தன்விரல் கொண்டே குத்திக் கொள்வதுபோல் அல்லவா உள்ளது சிந்திக்காது செயல்புரிவது!

    சரியானதை செய்யாது இருப்பது எவ்வாறு கோழைத்தனம்?

    சீன அறிஞர் கன்பூசியஸ் கூறும் ‘சரியாக எது என்று உணர்வது’ சிந்தனை என்று சிந்தித்து அறிந்து கொண்டோம். அவ்வாறு ‘சரியானது எது என உணர்ந்த பிறகும் அதனைச்
    செய்யாது இருப்பது கோழைத்தனம்’ என்று அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது எவ்வாறு சரி என்றும்,
    ஏன் இதனைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள சிந்திக்க வேண்டும்.

    ‘கோழை’ என்பது என்ன? கோழை என்றால் கபம், சளி(PHLEGM, SPUTUM) எனப்படும். கபமும், சளியும் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல் ஒரு மனிதன் கோழையாக. இருப்பதும் அவன் சிறப்புற வாழ்வதற்கு உகந்ததல்ல. கோழை என்கின்ற சொல் மனிதனின் மனதைப் பற்றிக் கூறும் சொல்லாகவும் உள்ளதையும் அறிவோம். ஒருவரை ‘கோழை’ என்றால் என்ன பொருள்? அவர் மன உறுதியோ, துணிச்சலோ இல்லாத நபர்(COWARD) என்று பொருள். ‘ஒரு கோழை இன்னொரு கோழையை உருவாக்குகிறான்’ என்கின்ற கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கோழையாக இல்லாமல் இருப்பதற்கு. கோழையாக இருக்கக் கூடாது எனில் பயம் கொள்ளக் கூடாது என்று பொருளாக இருந்தாலும், பயப்படுவதற்கு பயந்துதான் ஆக வேண்டும். உதாரணத்திற்கு ஒரு செயல் புரிவதற்கு முன் அதன் விளைவு நல்லதாக இருக்காது என்று தெரிந்தும் பயம் கொள்ளாமல் துணிச்சலோடு செய்வது விவேகமானதன்று. ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறைநீதியை மதித்து நடத்தல் கோழையன்று. பயம்கொள்வதன்று. பயத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது—‘FEAR IS THE GREATEST SIN’ என்பார். தேவையற்ற பயம் இருந்தால் கவலை வரும். அதற்காக அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்பதில் செய்யாமல் இருப்பது எவ்வாறு கோழைத்தனம் என்பதற்கு வருவோம்.
    மகாக் கோழைத்தனம் என்பதால் மற்ற கோழைத்தனம் ஏதேனும் இருப்பின் அதனைவிட இது பெரிய கோழைத்தனம் என்றாகின்றது. கோழை என்பதால் சரி எனக் கண்டுபிடித்ததை செயல்படுத்தாதவர் மனஉறுதியோ, துணிச்சலோ இல்லாத தடுமாற்றம் (WAVERING) கூடிய மனத்தன்மை உடையவர் என்று பொருளாகின்றது என்பது. உண்மையன்றோ! ஏனெனில் சில அரிய சிந்தனைகள் மலர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருக்கும். அவ்வாறு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முடிவைச் செயலுக்குக் கொண்டுவராதவரை கோழை என்று சொல்லாமல் வேறு எவ்வாறு அழைக்க முடியும் சீன அறிஞர் கன்பூசியஸ். அவர்கள்?

    சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவர முடியாமல் போவது ஏன்?

    சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்தால்தானே சிந்தித்ததன் கனியை அருந்த முடியும்! சிந்திக்க முடிகின்ற அறிவிற்கு செயல்படுத்துவதற்கு ஏன் தயக்கம் ஏற்படுகின்றது? ஏன் பயம் ஏற்படுகின்றது? ஏன் கோழையாகிறான் செயல்படுத்துவதில் மனிதன்? ஒன்று அவன் சரி என சிந்தித்தது சரியில்லையோ என்கின்ற ஐயம் அவனுக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டு வந்தால் அதன் விளைவு சரியாக இல்லாமல்போனால் என்ன செய்வது என்கின்ற அச்சம் அறிவிற்கு. அல்லது தன்மீது நம்பிக்கையில்லைாமை. அல்லது சரியென சிந்தித்ததை செயல்படுத்தும்போது அவனது சுற்றத்தார் எழுப்புகின்ற எதிர்ப்பு இருக்கலாம். அவர்களையும் மீறி செயல்படுத்துவது முடியாமல் போகலாம். எது எப்படி இருந்தாலும் சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்தாதது சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது போன்று கோழைத்தனமே. பொதுவாக யாரும் தன்னை கோழை என்று கூறுவதனை ஏற்க மாட்டார்கள். காரணம் சுய கௌரவம். ஆனால் இதனை மேலும் துல்லியமாக அதாவது சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்திய உண்மைச் சம்பவத்தின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

    என்ன சம்பவம் அது?

    மகரிஷி அவர்கள் பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்து கொண்டார்? யாராவது சொல்லி அறிந்து கொண்டாரா? அல்லது தானாகவே அறிந்து கொண்டாரா? சான்றோர்களின் அறிவாற்றலின் துணையைக் கொண்டு, தானும் சுயமாகச் சிந்தித்து அறிந்து கொண்டதுதான் பிறவியின் நோக்கம் அறிந்தது. ‘பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது’ சரியென உணர்ந்ததை என்ன செய்தார் மகரிஷி அவர்கள்? செயலாக்கி வெற்றி பெற்றார். செயலாக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு உலகிற்கே விடிவெள்ளியாகத் திகழ்கின்ற வேதாத்திரியம் கிடைத்திருக்குமா? பிறவியின் பயன் இறைஉணர்வு பெறுவது சரி என சிந்தனையுடன் சிந்தித்து முடிவுசெய்ததே,

    முதல்படியின் பேரின்பமே இரண்டாவது படி ஏற ஊக்கம்:

    ஆரம்பத்திலேயே, முதல் படியிலேயே அவருக்கு பேரின்பத்தை கொடுத்ததால், மேற்கொண்டு பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவதற்காக ஊக்கத்தோடு அறநெறியில் நின்று விழிப்போடு இருந்து பொறுப்புடன் திட்டங்களைத் தீட்டி அதற்கான புனிதச் செயல்களை ஆற்றினார். விளைவு பேரின்பப்படிகளின் இரண்டாவது நிலைக்கு உயர்ந்து மகிழ்வுற்றார். எனவே அதேபோன்று இறை உணர் ஆன்மீக சாதகர்கள் முதலில் பிறவியின் நோக்கம் என்ன என்று அவரவர்களே கண்டுபிடிக்க சிந்தனையுடன் சிந்தித்து உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தியதை எந்தவித தயக்கமும் இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வர எத்தனிக்க வேண்டும்.

    இறை அருள் தானே துணை புரியும்:

    அவ்வாறு ஊக்கத்துடன் முயற்சி செய்து வரும்போது இறையே காப்பாக அமைந்து அந்த சாதகருக்கு அருள் புரிய/தடுத்தாட்க் கொள்ளக் காத்திருக்கும். காரணம் மனிதன் இறையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறை பத்தடி நோக்கிவருவதற்கு காத்திருப்பதே! தன்னை உணர வேறு வழியின்றி மனிதன் வழியாக உணர்வதற்காகத்தானே இறை அசையாத ஆதிநிலையிலிருந்து அசைந்து துகள்களாகி பஞ்சபூதங்களாகி, மற்ற உயிரினங்களாகி கடைசியில் மனிதனாக வந்துள்ளது. எனவே மனிதன் ஒரு அடி எடுத்து வைத்தால் இறை பத்தடி எடுத்து வைக்கும் என்பது உண்மையாகத்தானே இருக்க முடியும். அதனை அனுபவித்துப் பார்ப்போமே!

    இதற்கு ஒரு உதாரணத்தைக் கூட அனுபவப்பட்ட பெரியவர்கள் கூறுவதுண்டு. கடலிருந்து நீர் ஆவியாகி மேகமாகி, மழைபெய்து நீர் நதியாகி நெடுந்தூரம் பயணித்து கடலில் சங்கமம் ஆகும் நிலையில் கடலே எதிர்கொண்டு சென்று நதியை தன்னுடன் இணைத்துக் கொள்ளுமாம்.

      இப்போது ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பது பற்றி சிந்தனையுடன் சிந்திப்போம். துறவு என்பது எது என்று அறிவதும், அந்த துறவு நிலையை முடிவாகப் பெறுவதும் பேரின்பப் படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    இதுவரை ஏழு அறிவிற்கு விருந்துகளில் பிறவிப்பயன் பற்றியே சிந்தித்து வருகிறோம். பிறவிப்பயன் அடையும் நான்கு படிகளில் முதல் இரண்டு படிகளை அறிந்து கொண்டோம். மற்ற இரண்டு படிகளான
    ‘துறவு’ என்பது என்ன என்றும்,
    துறவு என்பது வாழ்க்கையைத் (உலகியல்) துறந்து விட்டு, இவ்வுலகில் எவ்வாறு வாழமுடியும் என்கின்ற கேள்விக்கான விடையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். சிந்திப்பதற்கேற்ப செயல்படுவோம்.

    உலக அமைதி எந்த அடிப்படை உண்மையின் மீது அமைய இருக்கின்றது?
    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என ஜபிக்கும் அறிவு ‘துறவு என்ன என்பதும் துறவு எய்துவது எவ்வாறு பேரின்பத்தைத் தரும்’ என்பதனை அறிந்து கொள்வது சிறப்பு. வையகத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று உலக சகோதரத்துடன் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுவதற்கு, அந்த சூழ்நிலை எந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்? ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற வேதாத்திரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காலங்காலமாக இருக்கும் பழக்கத்தை, நல்லதைக் கருதி மாற்ற வேண்டுமென்றாலும், மாற்றம் அடிப்படையில் உண்மையைக் கொண்டதாக இருக்கின்றது என்பதனைத் அறிவிற்குத் தெரிவித்தாக வேண்டுமல்லவா?!

    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ – தாரக மந்திரம் வலிவு பெற. . .

    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற உண்மையை அறிந்துகொண்டு, அதில் உறுதியோடு இருப்பது ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற உலகை வாழ்த்தும் தாரக மந்திரம் வலிவு பெறுவதற்கு பேருதவியாக இருக்கும். ‘உணர்ந்து ஓதுவது’ என்பது சிறப்புடையது என்று மகரிஷி அவர்கள் வலியுறுத்துவதால் மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக அமைதியை, நாமும் கனவு காண்கிறோம் என்பதால் உலக அமைதிக்கு’ அச்சாரமான ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு’ என்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் உணர்ந்தவாறு நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை உறுதி செய்ய அவரவர்களின் சுயசிந்தனைஅவசியமாக உள்ளதால் சிந்தனையின் அருமை பெருமைகளைப் பற்றி இதுவரை ஆராய்ந்தோம். சிந்தனையைப் பற்றிச் சிந்தனையுடன் சிந்தித்தோம். இத்துடன் இச்சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(11-09-2016-ஞாயிறு) பேரின்பத்தின் மூன்றாவது படியினையும், நான்காவது படியினையும் சிந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-208

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    05-09-2016 – திங்கள்.

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    எப்போதும் ————- சிந்தித்து ஆற்றும் செயல்களினால் —- ——— தீமையும் தடுக்கப்படும்.      ———-    இனிமையாக இருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • 223-பிறவிப் பயனை நல்கும்!7/?

    வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்!7/?

    அறிவிற்கு விருந்து—223

               04-09-2016—ஞாயிறு

    Swamiji

        இன்று ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான மூன்று பொருட்களை(meaning) அறிய இருக்கிறோம்.  அந்த மூன்று பொருட்களை(அர்த்தங்கள்)  மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்.

     பொறுப்பு’ என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன.  அவையாவன:

     1)   விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்று பொருள். 

    2)   இரண்டாவது  பொருள்—விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி.

    3)   மூன்றாவது பொருள்—ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility).

          ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான முதல் பொருளான-

             1) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்பதனை எடுத்துக் கொள்வோம். 

         மனிதனின் துன்பங்களுக்கான காரணம் விளைவுகளை அறிந்து செயல் புரியாமையே. எனவே செயல் செய்த பிறகு விளைவு வரும்போது இரண்டு விதமாகவும் வரலாம்.  அதாவது இன்பமாகவும் இருக்கலாம்.  அல்லது துன்பமாகவும் இருக்கலாம்.  பெரும்பாலும் மனிதன் உணாச்சிவயப்பட்ட நிலையிலேயே (மனஅலைச் சுழல் அதிகமாக உள்ள நிலையில்) செயல்களைச் செய்கிறான்.  மனிதன் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே, சிந்திக்காமலேயே  செய்கின்ற செயல்களின் விளைவு துன்பமாகவேதான் இருக்கும்.  அறிவு நுண்மாண் நுழைபுலன் நிலையினை அடையாமல் இருப்பதுவே இதற்குக் காரணம்.  நுண்மாண் நுழைபுலன் நிலை என்பது உணர்ச்சிவயப்பட்ட, மனஅலைச் சுழல் அதிகமாக இருக்கும்போது எவ்வாறு கிட்டும்?  எனவே விளைவுகளை அறிந்து செயல்படுவது மனிதனின் பொறுப்பாகும்.

     பொறுப்பு என்பதற்கு இரண்டாவது பொருள்—

      2) விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி. விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி என்பது என்ன?  உதாரணத்திற்கு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம்.  அதில் பலர் பணிபுரிகின்றனர். அவர்கள்  ஒவ்வொருவருக்கும், அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பொறுப்புகள் உண்டு.  ஒவ்வொருவருக்கும்  விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து அவரவர் பதவிக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதனை அலுவலக நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.  யாராவது ஒருவர் பொறுப்பை உணர்ந்து தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில் அவர் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்.  அப்போதும் அவர் பொறுப்பை உணர்ந்து கடமையை சரிவர ஆற்றவில்லை எனில் அவ்வலுவலகச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை(punishment) வழங்கப்படும்.   

          அதேபோன்றுதான் கோடிக்கான உயிர்கள் இருக்கும்போது, இயற்கையின்/இறையின் தன்மாற்றத் தொழிற்சாலையில், இந்த உயிருக்கு(மனிதனுக்கு) பொறுப்பான மனிதப்பிறவி கிடைத்துள்ளது.   அதனால்தான் அவ்வைத்தாய் மானுடப்பிறவியினை ‘அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது’ என்கிறாள்.  எனவே இந்த ஆன்மாவிற்கு(individual concerned)  மனிதப்பிறவி கிடைத்தது என்பது இயற்கை/இறை கொடுத்துள்ள உயர் பதவியாகும்.  நிர்வாகத்தில் எதற்காக ஒரு பதவி ஏற்படுத்தப்படுகின்றது?  பொறுப்பையும் கொடுத்து கடமையை சீராகச் செய்ய(Duties and responsibilities) நிர்வாகத்தில் பதவி ஏற்படுத்தப்படுகின்றது.  அதுபோல் தன்னுடையத் தன்மாற்ற தொழிற்சாலையில்(self transformation industry) இயற்கை/இறை கொடுத்துள்ள உயர்பதவிதான் மனிதப்பிறவி என்பது.  மனிதப்பிறவி என்பது  மிக மிகப்  பொறுப்புள்ள பதவி.  இறைவனுக்கு அடுத்த பதவி மனிதப் பதவி(பிறவி). எனவே  இறைவனுக்கு அடுத்த மனிதப்பதவியின்(பிறவியின்) மிகுந்த பொறுப்புகளை சரிவர அறிந்து ( just like knowing the fundamental and conduct rules  Framed By the office in which he serves)கடமைகளை ஆற்றவேண்டும் மனிதன்.   

     மூன்றாவது பொருள் — ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility):

        அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் கடமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும்  அப்பதவியை வகிப்பவர் அப்பதவிக்கான கடமையைச் செவ்வனே ஆற்ற நிர்வாகம் எதிர்பார்க்கும்.  பதவியில் இருப்பவர், கடமையை சரிவரச் செய்யவில்லை என்றாலும் கடமையைச் செய்யாமல் இருந்தாலும் நிர்வாகம் அதற்குரிய தண்டனையை அவருக்கு அளிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது என்றும் பார்த்தோம். அதுபோல், இயற்கையின்/இறையின்/பேரறிவின் மனிதஇனத் தன்மாற்ற தொழிற்சாலையில் மனிதப்பதவிக்கு(மனிதப்பிறவிக்கு) அளிக்கப்பட்டுள்ள கடமையை தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும்(கல்லார்), தெரிந்து கொண்டுச்(கற்றார்) செய்யாமல் இருந்தாலும் அதற்குரிய விளைவை துன்பமாக  மனிதன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

         கடமை என்பது என்ன?  கடமையை எவ்வாறு ஆற்றமுடியும்? செயலைச் செய்துதான் கடமையை ஆற்றமுடியும்.  எனவே செயலாற்றுவது  கடமை.  ஒப்படைக்கப்பட்ட கடமையை  நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றம்.  எனவே கடமையை உணர்ந்து  சரிவரச் செய்ய வேண்டும். இல்லை எனில் விளைவு துன்பம்தான். கடமையை(செயலை) உணர்ந்து சரியாக ஆற்றாமல் போனாலும் அல்லது கடமையை உணராமல் போனாலும் விளைவு துன்பமே. இதனை யார் அனுபவிப்பது? நேரிடையாகச் சொல்வதென்றால் கடமையை ஆற்றத் தவறியவர் எனலாம்.  ஆனால் நிர்வாகத்தின் உறுப்பினரான ஒருவருக்கு  நிர்வாகத்தால் கடமை ஒப்படைக்கப்பட்டு, அதனை அவர் உணர்ந்து சரியாகச் செய்யவில்லை எனில் அதனால் வரும் நட்டம் நிர்வாகத்திற்கேதான் போய்ச்சேரும். எனவே மனிதன் விளைவை உணர்ந்து செயல்புரிய வேண்டும் வாழ்க்கையில். இவ்வுண்மையினை இறைவணக்க முதல்பாடலிலேயே  ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பம் துன்பமவன்’ என்று சுத்த அத்வைதத்தில் வலியுறுத்தி இயம்புகின்றார் மகரிஷி அவர்கள்.  காணும் இன்பம் துன்பமவன் யார்?  எவ்வாறு மனிதன் ஏற்படுத்திய தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில், அதனால் ஏற்படும் நட்டம் நிர்வாகத்திற்கே போய்ச் சேர்வதுபோல், இயற்கையின்/இறையின் மனித இனத் தன்மாற்றத் தொழிற்சாலையின் பங்குதாரர்களான மனிதர்கள் தங்களின்  கடமையைச்(செயலை) சரிவரச் செய்யவில்லை எனில் அதனால் வருகின்ற துன்பத்தை அதிபரான இறைவனே(இறையே) ஏற்க நேரிடுகின்றது.

     என்ன கடமை இயற்கை/இறை மனிதனுக்கு அளித்துள்ளது?

           தானும் இன்பமாக வாழ்ந்து அதேபோல் தன்னுடன் வாழ்கின்ற  சமுதாயத்தில் உள்ள பிறரும் இன்பமாக வாழ்வதற்கு இடையூறு செய்யாமலும், தேவையிருந்தால், தன்னால் முடிந்தால், அவர்களும் இன்பமாக வாழ்வதற்கு,  உதவிசெய்யக்கூடியக் கடமையை இயற்கை/இறை வைத்துள்ளது,    மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவைத் தருவது இயற்கை/இறை நீதி.  மனிதன் விளைவுகளைத்தான் இன்பமாகவோ, துன்பமாகவோ  அனுபவிக்கிறான்.  இன்பமே விரும்பும் மனிதன், அதற்கேற்ற  செயல்களைக் கடமையாகச் செய்ய வேண்டும்.  இல்லை எனில் மனிதன் துன்பங்களைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.  பிறரையும் வாழவைத்து தானும்  இன்பமாக வாழ மனிதன் செய்ய வேண்டியது என்ன?  இரண்டே இரண்டுதான்.

     இரண்டொழுக்க பண்பாடே  இயற்கை/இறை மனிதனுக்கு வைத்துள்ள கடமை:

       சுருங்கச் சொல்வதென்றால் இயற்கை/இறை மனிதனுக்கு வைத்துள்ள கடமைகள் இரண்டு.  என்ன அவை?  தன்னிலிருந்த(இறையிலிருந்து) தன்மாற்றடைந்து வந்துள்ள மனிதன் தனது(இறையின்) தன்மையை  அவனில்(மனிதனில்) ஒளிரச் செய்ய வேண்டிய பொறுப்பை மனிதனுக்கு வைத்துள்ளது இயற்கை/இறை.  அதற்கு இரண்டு கடமைகளை ஆற்றவேண்டியுள்ளது.  ஒன்று இயற்கையின்/இறையின் தன்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டும்.  மற்றொன்று  கருணையோடு இருக்க  வேண்டும்.  அதனை வெளிக் கொண்டுவர மகரிஷி அவர்கள் மனவளக்கலையை வடிவமைத்து சீரமைக்கும்போது ஒருயுக்தியினைக் கையாண்டிருக்கிறார்.  அதுதான் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பம்.

    ஒன்று, தான் வாழ்கின்ற வரை யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரக்கூடாது.

    மற்றொன்று துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

    முதலாமது அன்பை வெளிப்படுத்துவது.  சீவனில் சிவனைக் காண்கின்ற அன்பு மனம் எவ்வாறு பிறருக்கு துன்பம் விளைவிக்கும்?

    இரண்டாமது கருணையை வெளிப்படுத்துவது.  சிவத்தை அறிந்ததால்(துரியாதீத நிலையில் வெற்றி கொள்வது) அன்பு மலர்கின்றது.  அப்பேறு பெற்ற அறிவு கருணையைத்தான் வெளிப்படுத்தும்.  தவமுறையை இயற்றும்போது, ஆரம்பத்தில் மனிதனுக்கு வேண்டிய ஐந்து வள சங்கல்பத்தை(உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம்) தவத்தின் முடிவில் இயற்றச் சொன்ன மகரிஷி அவர்கள், பிறகு இரண்டொழுக்க பண்பாட்டினையும் சங்கல்பமாக சேர்த்துள்ளார்.  காரணம் என்ன? 

       இரண்டொழுக்கப் பண்பாடில்லாமல் வாழ்க்கை வள சங்கல்பத்தில் உள்ள நான்காவதான உயர்புகழ் மற்றும் ஐந்தாவதான மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் சாத்தியமில்லை. உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய வளங்களை விரும்பும் சாதகன்  வெளியிலிருந்து அறிவுறுத்தல் இல்லாமலேயே தானாகவே இரண்டொழுக்கப் பண்பாட்டில் சிறந்தே விளங்குவார்.  உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டு வளங்களிலும் இரண்டொழுக்க பண்பாடு   சங்கல்பம் மறைந்து (Hidden).  இருப்பினும், என்ன வேண்டுமோ அதனை சங்கல்பமாக இயற்றுவதில் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பின்னர் தவமுறையை சீரமைக்கும்போது இரண்டொழுக்கப் பண்பாட்டினையும் தவமுறையில் இணைத்துள்ளார்.

        சமுதாயத்திற்கு  மனிதர்களால் என்ன தேவை?  அன்பும் கருணையுமேதான்.  முதல்  சங்கல்பத்தில் தனிமனிதனுக்கு தேவையானவைகள் உள்ளன.  இரண்டாவது  சங்கல்பத்தில் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்கு தேவையானது உள்ளது. எனவே சமுதாயத்தில் மனிதர்களிடம் அன்பும் கருணையும் மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டு சங்கல்பத்தை இயற்றச் சொல்லி வான்காந்தத்தில்  பரவவிடச் செய்துள்ளார்.  இது திணிவு பெற பெற ‘when fraction demands, Totality supplies” என்பதற்கிணங்க சமுதாயத்தில் பண்பேற்றத்தில் சிறந்துவிளங்கும் குடிமக்கள் உருவாவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் இயற்கை/இறை.

     இறை உணர்வு என்பது இறையின் தன்மை சாதகனில் ஒளிர்தலே:

        பிறவியின் நோக்கம் என்பது

        இறை உணர்வு பெறுவது என்றும்,

        இறை உணர்வு என்பது   இறையின் தன்மை சாதகனிடம் ஒளிர்ந்து  

        சாதகனின் உள்ளம் தூய்மை பெறுவதே

    என்பதற்கேற்ப தானும் அவ்வாறே  இறை உணர்வு   பெறுவதற்கு  விழிப்போடு பொறுப்புடன் திட்டமிட்டு

    செயல்கள் ஆற்றி  பேரின்ப ஊற்றின் அனுபவத்தை அடைந்ததை தனது  மாணர்வகளுக்கு தெரிவிக்க  மகரிஷி அவர்கள், பின்னாளில்  பேரின்ப ஊற்று என்கின்ற பாடலிலே அதனை இயம்பியுள்ளார்,

        இதுவரை மகரிஷி அவர்கள் மனம் செயல் ஆகிய இரண்டிலும்  தூய்மை பெற எவ்வாறு பொறுப்புடன் செயல்கள் ஆற்றினார் என்பதனை அறிய, ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தை ஏற்கனவே நமக்குத் தெரிந்த வார்த்தையாக இருந்தாலும்,  நாமும் அவர் கூறும் அந்த பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம், செயல் ஆகிய இரண்டில் தூய்மை பெற்று இன்பமுறுவதில் அழுத்தம் பெற,  ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான பொருளை மூன்று கோணங்களில் அறிந்து கொண்டோம்.

        இப்போது பாடல் வரிகளுக்குள் செல்வோம்

     அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து,

      ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்,

    •  பிறவியின் நோக்கத்தை அறிந்துவிட்டார். 
    • பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும் தனக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளந்து பார்க்கிறார். 
    • அதாவது பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும், பிறவியின் நோக்கத்தை அறிகின்றபோது தான்  இருந்த நிலைக்கும் உள்ள இடைவெளியைக் கணக்கிடும்போது, அதன் எல்லையினை உணர்கிறார்  மகரிஷி அவர்கள். 
    • அந்த எல்லையினை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என முடிவு  செய்கிறார். 
    • பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு, பின்னாளில்  ‘செயலிலே விளைவாக    வருபவன் இறைவன்’ என்கின்ற பொன்னான பொன்மொழியை அருளிய மகரிஷி அவர்கள், 

                  ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டு அறநெறிவாழ்க்கை     

                  வாழவேண்டும்   என அறிந்து முடிவுசெய்து, அவ்வாறே வாழ்ந்து அறநெறி வாழ்க்கையில்     வெற்றி பெறுகிறார்.

         அந்த முடிவுதான் அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து செயல்களை ஆற்றி மனம், செயல் ஆகியவற்றை தூய்மையாக்கிக் கொள்வது.   அறநெறியில் விழிப்போடு பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம் தூய்மை ஆன ஆனந்த அனுபவத்தை மற்றொரு பாடலின் வாயிலாக சமுதாயத்திற்கு அறிவிக்கிறார்.  அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

     பேரின்ப ஊற்று

     உன்னிலே நானடங்க*, என்னுளே நீ விளங்க,

    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.

    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?

    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.

                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          * நானடங்க – நான் அடங்க.  அடங்க’ என்பதற்கான ஆழ்ந்த பொருள் கொண்ட இறை அனுபவத்தை அறிய மகரிஷி அவர்கள் அருளிய திருக்குறள் உட்பொருள் விளக்கம் – பக்கம் 72 இல் காண்க.   அப்பக்கத்தில்

    ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

    ஆரிருள் உய்த்து விடும்.’

    என்கின்ற குறளுக்கான உட்பொருள் அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    பேரின்பப்படிகளில் இரண்டாவது படியான  ‘உள்ளம் தூய்மை பெற்று பேரின்பத்தை அனுபவிப்பதற்கு’, சுத்த அத்வைத உண்மைக்கேற்ப, இறைவனுள்ளே(உன்னுள்ளே-பேரறிவில்) ஆத்மசாதகன்(சாதகனின் அறிவு)  அடங்க, இறைவனின்(பேரறிவின்) தன்மை ஆத்மசாதகனிடம் ஒளிர, ஆத்மசாதகனின் உள்ளம் தூய்மை பெறும் பேற்றினை பெற்ற பிறகு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்?  எடுத்த மனிதப் பிறவி முழுமை அடைந்து விடுகின்றது. அதாவது இறைவனுள் ஆத்மசாதகன் அடங்குவது என்பது இறைவனையும் சாதகனையும்  பிரித்துவைத்துள்ள தன்முனைப்புத் திறை நீங்குவது என்று பொருள்.  இறைவனும் மனிதனும் இரண்டறக்கலப்பது என்று பொருள்.  இரண்டாவது படியுடன் பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவது முடிவடைந்து  விடுகின்றது.  வீடுபேறு கிட்டுகின்றது.  அத்துடன் இறைஉணர்வு பெறுவது முடிந்துவிடுகின்றதல்லவா?  பின்னர் அதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு படிகளைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஏன்? சிந்திப்போம்! 

        மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து, மகரிஷி அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியான ‘யாரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருவின் உயர்வு மதிப்பவரைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்’ என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  உறுதிமொழியின் பிற்பகுதியை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தித்து வருகிறோம்.  அச்சிந்தனை இன்னும் முடிவு பெறவில்லை.  பிற்பகுதியை  சிந்திப்பதன் விளைவால் ஏற்படுகின்றத்  தெளிவு

    •  எதற்காக பிறவிப்பயன் அடையவேண்டும் என்றும், 
    • பிறவிப்பயன் அடைதல் என்பது மீண்டும் பிறப்பு-இறப்பு சுழற்சியிலே சிக்கித் தவித்து, இன்ப-துன்பத்தை அனுபவிக்காமல் இருப்பதற்கே என்று அறியவும்
    • அதற்கு எவ்வாறு  குருவை மதித்து ஒழுகி தரத்தில் உயர்வது பற்றி அறியவும்,
    • பிறவிப்பயன் என்பது இறையாட்சியில் இறைக்கு அடுத்த பதவி கொடுக்கப்பட்டிருக்கும்  மனிதன் அதற்கேற்ற தரத்திற்கு  உயர்வது என்பதனை அறியவும் வைக்கும்.

        இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். பிறவிப்பயனை அடையும் நான்கு படிகளில் கடைசி இரண்டு படிகளான உறவுகளில் உண்மை நிலை துறவு என்பதனை அறிந்தபோதும்,  முடிவாகத் அத்துறவு நிலை எய்தியது மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு பேரின்பத்தை அளித்தது என அறிந்துகொள்ள  இனிவரும் விருந்துகளில் சிந்திக்க இருக்கிறோம்.

     இன்றையச் சிந்தனையின் சாரம்: 

    1)    பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு எவ்வாறு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றைக் கொண்ட அறநெறியில்

    2)    அயரா விழிப்போடு பொறுப்பை உணர்ந்து

    3)    எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தூய்மை அடைவது பற்றி
    யும்

    4)    இறை உணர்வு பெறுவது என்பது மனம் தூய்மை அடைவதே என்றும், அதற்கு  பழிச்செயல் பதிவுகளின் ஆணிவேரான இறையையும் மனிதனையும் பிரித்து வைத்திருக்கின்ற  தன்முனைப்புத் திரையை விலக்கி ஆத்ம தரிசனம் பெறுவதே  என்றும் அறிந்து .கொண்டோம். 

    5)   இயற்கை/இறை மனிதப்பதவிக்கு (பிறவி) வைத்துள்ள கடமை இரண்டொழுக்க பண்பாடே என்பதனையும் அறிந்து கொண்டோம்.

     

      வாழ்கஅறிவுச் செல்வம்                                                       வளர்க அறிவுச் செல்வம்.


     

     

    Loading