admin

Author Archives

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்.1/?

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

     

    FFC – 168

    02-03-2016—புதன்.

    FFC-168- மகரிஷி படம்

    வாழ்க வளமுடன். நம்முடைய குருநாதரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால்,

    இவ்வுலகம் எவ்வாறு/எவ்விதங்களில் எல்லாம் உய்ய வேண்டும் என தான் விரும்பியதை/ஆவல்கொண்டதை,

    உலக மக்களும் விளங்கி விரும்பி ஏற்றுக்கொண்டு,

    உலகநல விருப்பம் மக்களிடம் வெகு விரைவில் பரவிட,

    எண்ணங்கள்தான் பரிணாமப் பயணத்திற்கு வாகனமாக இருப்பதனை அறிந்து,

    தினந்தோறும் தவத்தின் முடிவில், மிக நுண்ணிய மனஅலைச்சுழலில்,

    எண்ண அலைகளை பரப்பிட,

    உலக நல மகா மந்திரமான ‘வாழ்க வையகம்’ என்கின்ற மந்திரத்தை உருவாக்கியதோடு.

    அம்மந்திரம் விரைவில் செயல்பட்டு உலக மக்கள் அனைவரும் தங்களது பூர்வீக சொத்தான பூரணஅமைதியினை நிரந்தரமாக அனுபவிக்க,

    உலக நல மகா மந்திரத்திற்கு துணை மந்திரங்களாக மூன்று பாடல்களை இயற்றியுள்ளார்.

    இதனை மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

    உலகம் எவ்வாறு நலத்துடன் வாழவேண்டும் என்று தான் சிந்தித்து மனத்தோற்றத்தில் மகிழ்ந்ததன் வாயிலாக, முடிவாக, உறுதியாக எண்ணிய எண்ணங்களை காரணத்தோடு ஒரே பாடலில் கூறாமல் முறைப்படுத்தி, மூன்று தலைப்புகளில் கூறியிருக்கிறார்.

    ஒன்று உலகநல வேட்பு,
    இரண்டாவது உலக நலவாழ்த்து,
    மூன்றாவது உலக நல நாட்டம்–எழுவகை திட்டம்.

    உலக நல வாழ்த்துப் பாடலில் வருகின்ற வரிகளில் ஒன்றான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்து விரிந்து சிந்திக்கவே இன்றைய சத்சங்கத்திற்கு கூடியிருக்கிறோம். வாழ்க வளமுடன்.

    எனவே பொன் வரிகளுக்கெல்லாம் பொன்னான வரி மற்றும் அறிவை ஈா்த்த ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரி இடம் பெற்றுள்ள உலக வாழ்த்துப் பாடலை இப்போது நினைவு கூர்வதன் வாயிலாக மகரிஷி அவர்களை சூக்குமமாக எழுந்தருளி இச்சத்சங்கத்தை நடத்தித் தர வணங்கி வேண்டுகிறோம். ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து அவரிடம் மந்திர எழுத்துக்களாக மலர்ந்ததற்குக் காரணமான அவரது சிந்தனைகள் நமக்கும் உதிக்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

    இப்பாடலில் எட்டு வைர வரிகள் உள்ளன. ஒவ்வொரு வைர வரியிலும், இவ்வுலகம் உய்வு பெறவேண்டி வெவ்வேறு வகையில் வாழ்த்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளார். ‘வாழ்க வையகம்’ என்கின்ற உலகநல மகா மந்திரம், இந்த எட்டு வாழ்த்துக்களையும் மற்றும் இரண்டு பாடல்களிலுள்ள வேட்புகள் மற்றும் நாட்டங்களை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே மகா மந்திரம்.

    மந்திரங்களின் பொருள் தெரிந்து உச்சரிப்பதற்கான விசேஷ பலன் உண்டு என்பதால், உலகத்தை வாழ்த்துகின்றவர் இந்த மூன்று பாடல்களின் ஒவ்வொரு தனித்தனி வாழ்த்துக்கள், வேட்புகள், நாட்டங்கள் ஆகியவற்றின் ஆழ்ந்த விரிந்த பொருளை மகரிஷி அவர்கள் கொண்டிருந்ததுபோல், அறிந்திருத்தல் நலம் பயக்கும். அவ்வாழ்த்துக்களோ வேட்புகளோ, நாட்டங்களோ நிறைவேறினால் இவ்வுலகம் எவ்வாறு அமைதியோடு வாழும், வாழலாம் என்பதனை மனக்கண்ணால் பார்த்து மகிழ வேண்டும். அதாவது கனவு காண வேண்டும்.

    இன்று உலக நல வாழ்த்துப் பாடலில் நான்காவது வாழ்த்தாகிய ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை சிந்தனைக்காக எடுத்துக் கொண்டுள்ளோம்.

    உலக நல வாழ்த்துப் பாடலில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தை தவிர்த்து மற்ற ஏழு வாழ்த்துகளாவன

    1. உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
    2. உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
    3. பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
    4. கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
    5. கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
    6. நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞனாஒளி வீசட்டும்
    7. நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.

    என்பனவற்றிற்கு பொருள் தெரிந்ததே.

    ஆனால் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது மட்டும் சற்று ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இம்மந்திர வார்த்தையில் மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ள இயற்கையியல்/இறையியல் சாராம்சமே அடங்கியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து மந்திரத்தில் நான்கு சொற்கள் இடம் பெற்றுள்ளன.

    1. பகுத்துணர்வு,
    2. தொகுத்துணர்வு,
    3. பண்பாடு,
    4. உயர்வது

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரத்தில் உள்ளது ஒரு வாழ்த்தா அல்லது இரண்டு வாழ்த்துக்களா? முதலில் அதனை அறிவோம். சந்தேகமின்றி இவ்வரியில் இரண்டு வாழ்த்துக்கள் உள்ளன. ஏன்? ‘பண்பாடு உயரட்டும்’ என்று மட்டும் வாழ்த்தாமல், ‘பகுத்தணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். அவ்விரண்டு வாழ்த்துக்களில்

    ஒன்று‘ பகுத்துணர்வில் தொகுத்துணர்வும்’ பெறவேண்டும்.
    மற்றொன்று, அதன் பயனாக பண்பாடு உயர வேண்டும் என்பது.

    பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் பண்பாட்டை உயர்த்த முடியும் என்பதனைக் கண்டுபிடித்து அம்மந்திர வரியினை அமைத்துள்ளார். மேலும் அவரது இயற்கைவியல்/இறையியல் சாராம்சமே அமையும்படி ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற மந்திர சொற்றொடரை அமைத்ததிலிருந்து மகரிஷி அவர்களின் ஆழ்ந்த விரிந்த சிந்தனைத் திறனை அறிந்து போற்றி மகிழ வேண்டும். இயல்பாகவே அவ்வாறு செய்வதன் வாயிலாக, இப்போது இங்கே இயற்கை/இறை நமக்கு இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளவும், அதன் கிளைத்தேற்றத்தைக் கொண்டு, நம் நிலையை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் அளித்துள்ளது எனலாம்.

    அப்படியானால் மகரிஷி அவர்கள் எதிர்பார்க்கின்ற,

    1. இயற்கைக்கோ/இறைக்கோ இசைவோடும் இணக்கத்தோடும் இருக்கும்படியான மனிதபண்பாடு என்ன என்பதனையும்,

    2. அப்பண்பாடு உயர்வதற்கு எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ தான் தேவை என்பதனையும் அறிய வேண்டும்.

    பகுத்துணர்வு, தொகுத்துணர்வு இரண்டு சொற்களுக்கும் பொருள் தெரிந்து கொண்டால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வது சுலபமாக இருக்கும். ஆகவே நமது வழக்கப்படி முதலில் வார்த்தை விளக்கம் காண்போம்.

    பகுத்துணர்வு(Perspective view) :

    ‘பகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘பகு’ மற்றும் ‘உணர்வு’ என்கின்ற இரண்டு சொற்கள் உள்ளன. ‘பகு’ என்றால் என்ன பொருள்? பிரித்தல் என்று பொருள். உணர்வு என்றால் அறிதல் என்று பொருள். ஆகவே ‘பகு’ வையும் ‘உணா்வையும்’ சேர்த்தால் ‘பகுத்துணர்வு’ ஆகின்றது.

     பகுத்துணர்வு என்றால் என்ன பொருள்?
     அதாவது பிரித்து உணர்வது பகுத்துணர்வு ஆகின்றது.

     பிரித்து உணர்வது என்றால் என்ன?
     பிரித்து பிரித்து உணர்வது பிரித்துணர்வு.

     பிரித்து என்றால் என்ன?
     முழுமையாக இருப்பதை பகுதிகளாக்குதல்.

    பகுத்துணர்வு என்பது புலனறிவுதான். (அதாவது புலன்களால் அறிவது, புலன்களால் அறிவது என்றால் புலன்கள் இல்லாமலும் அறிவது இருக்கின்றதா என ஐயம் எழலாம். ஆம் உள்ளது அதுதான் மெய்யுணர்வு. மெய்யுணர்விற்கு புலன் ஏதும் அவசியம் இல்லை. அறிவால் அறிவை அறிவது. எனவே இதுதான் தன்னிலை அறிதல்(Self Realisation)

     அது இது, அது. இது என்று பிரித்துப் பிரித்துப் அதன் தன்மையை உணர்ந்து கொண்டே போனால் அது பகுத்துணர்வு(Perspective view).

    தொகுத்துணர்வு (Holistic View):

    ‘தொகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘தொகு’ மற்றும் ‘உணர்வு’ ஆகிய இரு சொற்கள் உள்ளன.

    o ‘தொகு’ என்றால் என்ன? ஒன்று படுத்துதல் என்று பொருள்.
    o தொகுத்துணர்வு என்றால் எல்லாவற்றையும் ஒன்று படுத்தி உணர்தல் ஆகும்.

    o ஒன்று படுத்தி உணர்தல் என்றால் என்ன?
    o ஏன் ஒன்று படுத்திப் பார்க்க வேண்டும்?

    பகுத்துணர்வு என்ன என்பதனையும், தொகுத்துணர்வு என்ன என்பதனையும் அறிந்து கொண்டோம். இப்போது இவற்றில் எது சிறந்தது((Perspective view or Holistic View?) என அறிய வேண்டும். பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்கின்ற போதே தொகுத்துணர்வுதான் சிறந்தது என தெரியலாகின்றது. அப்படியிருக்கும்போது நேரிடையாகவே தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்றே மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கலாமன்றோ! பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என ஏன் சொல்ல வேண்டும்? காத்திருப்போம் அடுத்த அறிவிற்கு விருந்து வரை. வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் (06-03-2016—ஞாயிறு)
    1. இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,
    2. அறம் எப்போது தோன்றியது என்றும்,
    3. எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,
    4. அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-155

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-02-2016 – திங்கள்

     

    தான் பண்பில்–குணத்தில் உயர்ந்து வருவதனை, எதைக் கொண்டு சரியாக, துல்லியமாக தானாகவே கண்டுபிடிக்க முடியும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 167-வினா விடை – 16

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    வினா விடை – 16

     FFC – 167

    28-02-2016—ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-114
    (08-10-2015 – வியாழன்)

    (அ) தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) ஏன் ஆறாம் அறிவிற்கென்று புலன் ஏதும் உருவாகவில்லை?
    (ஆ) இதனால் அறியப்படுவது என்ன?

    விடை:

    அறிவியலில் ‘பரிணாமம்-Evolution) என்பது, திருவேதாத்திரியத்தில் தன்மாற்றம்(self transformation) எனப்படுகின்றது. ஏன்? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின், ‘விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணையவேண்டும்’ என்ற எண்ணத்தை அவருக்கு பின்னர் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார். மெய்ஞ்ஞானம் தன்னை, மனித குலத்தில் எளிதாக பரவவிட விஞ்ஞானம் உதவிடவேண்டும் என்றுதான் நினைக்கின்றது.

    திருவேதாத்திரியத்தின் பலதுறைகளில் ஒன்றான இயற்கையியல்/இறையியல், இப்பிரபஞ்ச தோற்றத்திற்கான மூலத்தை உறுதி படுத்திவிட்டது. பிரபஞ்சத்தின் மூலத்தை ஏற்றுக் கொண்டது, ஆகவே அதனைத் துணிந்தும் அறிவித்தும்விட்டது. இப்பிரபஞ்ச மூலத்தை ஏற்று அந்த மூலமே இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி/இறைநிலை/வெட்டவெளி என்கின்றது. அந்த மூலப்பொருளேதான் எல்லாமாகவும் மாற்றம்(transform) அடைந்துள்ளதால், பரிணாமம் என்று சுற்றி வளைத்து சொல்லாமல் நேரிடையாகவே, சுத்தவெளியே, தானாகவே, மாற்றம் அடைந்துள்ளதால் அந்த மாற்றத்தை (தன்னுடையமாற்றம்) தன்மாற்றம் (self transformation) என்கின்றது.

    மகரிஷி அவர்கள் கூறும் ‘பரிணாமம் என்பது இயற்கையினுடைய தன்மாற்றமே’ என்பதற்கு சான்றாக வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்டமரபில் வந்து உதிக்கின்ற மகான்கள் வரிசையில் ஒருமகானான மகா கவி பாரதியார் ஏற்கனவே கூறியுள்ளதனை எடுத்துக்கொள்ளலாம்.

    எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ?’ எனக் கேட்கின்றார் மகான் மகா கவி பாரதியார். இதற்கும், பரிணாமம் என்பது இயற்கையின் தன்மாற்றமே என்பதற்கும் என்ன தொடர்பு என ஐயம் எழலாம். ‘எதனூடும்(எதன் ஊடும்)’ என்றால் ‘எந்தப் பொருட்களில் உள்ளும்’ என்று பொருள். எந்தப்பொருளும்-எல்லாப்பொருளும் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கியதுதானே! எந்தப் பொருட்களுக்குள்ளும்/எல்லாப் பொருட்களுக்குள்ளும் அறிவேதான் பொதுவாக உள்ளது, அதுவே தெய்வம் என்கிறார், மகான் மகா கவி பாரதியார்.

    FFC_167-பாரதியார் படம்

    அரூபமாக உள்ள அறிவே எல்லாப்பொருட்களிலும் பொதுவாக இருப்பதால், அரூபத்தில் பல இருக்க முடியாது. என்பதாலும் அறிவு-இயற்கை-இறை ஒன்றே பலவாக மாற்றமாகியது என்றுதானே பொருள். ஆகவே மகரிஷி அவர்கள் இப்போது கூறும் இயற்கையின் ஆதிநிலையே தன்மாற்றமாகியுள்ளது என்பதனை மகான் மகா கவி பாரதியாரின் அப்போது கூறிய கூற்றிலிருந்து உறுதியாகின்றது. தன்மாற்றம் என்பது என்ன என்பதனை உறுதிபடுத்திவிட்டோம்.

    இப்போது ‘சிந்தனைப்பயிற்சிக்கு எடுத்துக்கொண்ட வினாவிற்குள்’ செல்வோம்.
    வினா ஆறாம் அறிவு பற்றியது. எனவே இப்பிரபஞ்சத்தில் ஏன் உயிரினங்கள் தோன்றின என்கின்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண வேண்டும். உயிரினங்கள் என்பது என்ன? சடப்பொருட்களுக்கு உணர்வு கிடையாது. உயிரினங்களுக்கு உணர்வு உண்டு. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னர் சடப்பொருட்களாகிய பஞ்சபூதங்கள் மட்டுமே இருந்தன. அவற்றிலிருந்து காந்தம் உருவாகிக்கொண்டிருந்தது. அந்த காந்தம், அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளாக தன்மாற்றம் அடைந்து கொண்டிருந்தன.

    எனவே ஆதிநிலையிலிருந்த அறிவு இவற்றை உணா்வதற்கான உந்துதலின் (urge) விளைவே உயிரினங்களாகின. அவையே ஒரறிவு முதல் ஐயறிவு சீவராசிகள். மகான் மகா கவி பாரதியார் அவர்களின் கண்டுபிடிப்பான ‘எங்கும், எதிலும் அறிவு இருக்கின்றது’ என்பதால், பஞ்சபூதங்களிலிருந்த அறிவு, தனக்கே உரிய (அதாவது அறிவிற்கே உரிய) இயல்பாகிய உணருதல்-அறிதல் என்கின்ற உந்துதலால் ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை உணர்வதற்கு கருவி தேவை. அந்த தேவைக்காக உருவானதே புலன்கள்(five senses) ஐந்தும்.

    புலப்படுத்துதல் என்றால் தெரியாமல் இருக்கின்ற ஒன்றை தெரியப்படுத்துதல். அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து புறநிகழ்ச்சிகள் வெளியே (உடலுக்கு வெளியே நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அதனை உடலுக்குள் இருக்கின்ற கருமையத்தில் இருக்கும் அறிவு தானாகவே உணரவோ/அறியவோ முடியாது. ஆகவே எல்லை கட்டிய உடலுக்கு வெளியே நடக்கும் புறநிகழ்ச்சிகளை அறிவு (Nature-இறை) தெரிந்து கொள்வதற்காக சர்வ வல்லமையுடைய இயற்கையின் நிறைநிலையும் மற்றும் பொருண்மையும்-‘Entelechy’ ( kindly try to understand here, this ability of Nature in the light of the meaning of English word ‘Entelechy’ found in the dictionary. Already we have discussed ‘Entelechy’ in our Satsang) அமைத்துக் கொண்டதுதான் ஐந்து புலன்களும்.

    கண் என்கின்ற புலன் இல்லையானால் ஒளி இருப்பதை உணர முடியாது. கண் என்கின்ற புலன் இருந்தால் ஒளியை உணரமுடியும். ஒளி இருப்பதை கண் என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘கண்’ புலன் என்று பெயர் பெறுகின்றது. காது என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘காது’ புலன் என்று பெயர் பெறுகின்றது. ஆகவே ஐந்து புலன்களுமே உடலுக்குப் வெளியே-புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை, உடலுக்கு உள்ளே உள்ள கருமையத்தில் உள்ள அறிவு உணர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உணர் கருவிகள்.

    இயற்கையின் ஆதிநிலையே ஐம்பூதங்களாகி தன்மாற்றம் அடைந்தது. ஒவ்வொரு பூதம் உருவாகி வரும்போதும் அததற்குரிய காந்த தன்மாற்றமும் ஏற்பட்டு வந்தன. அவையே விண்ணில் அழுத்தம், காற்றில் ஒலி, நெருப்பில் ஒளி, நீரில் சுவை, மண்ணில் வாசனை. ஆகவே பஞ்சபூதங்களாகிய பிறகு இயற்கையின் ஆதிநிலையாகிய அறிவு பிரபஞ்ச நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக உணர்வதற்காக ஒவ்வொரு புலன்களைக் கொண்ட உயிரினங்களாகியது. அவையே முதலில் ஒர் அறிவு சீவனான தாவரம்(ஒர் அறிவு – தொடுஉணர்வு), அடுத்ததாக இரண்டு அறிவு சீவனான புழு, அடுத்ததாக மூன்றாவது அறிவு சீவனான எறும்பு, அதற்கடுத்ததாக நான்காவது அறிவு சீவனான பாம்பு, ஐந்தாவதாக ஐயறிவு சீவன்களான பசு, புலி ஆகிய தோன்றின.

    அதன் பிறகு மனித இனம் தோன்றியுள்ளது. மனிதன் தன்னை ஆறாம் அறிவுடையவன் என வகைப்படுத்திக் கொண்டான். ஆனால் மனிதஇன தன்மாற்றத்தின்போது மனிதனுக்கு ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களைத் தவிர, ஆறாம் அறிவிற்காக கூடுதலாக புலன் ஏதும் உருவாகவில்லை. ஏன் என்று அறிவதே இன்றறைய அறிவிற்கு விருந்து.

    பொதுவாக உணர்தல்/அறிதல் என்பது அறிவின் இயல்பு என்பதால், பிரபஞ்சத்தின் ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்துவிட்டான பிறகு இயற்கை எதனை உணர்வதற்காக ஆறாம் அறிவுடைய சீவனான மனிதவடிவில் தன்மாற்றம் அடைந்தது? இதற்கானக் காரணம் என்ன?

    காரணத்தை அறிய விலங்கினங்களுக்கும் மனிதஇனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டு அறியலாம். அந்த வித்தியாசங்கள் என்னென்ன? மனிதன் கல்வி கற்கிறான். அதனால் எழுதப் படிக்கத் தெரியும், இதற்கு கண்களும், காதுகளும், நாவும், கைவிரல்களுமே போதும். மேலும் பேசுகிறான் எண்ணங்களை சொல்லாக வெளிப்படுத்துகிறான். தொழிலறிவு கற்கிறான். சிரிக்கிறான். நாணமுடையவனாக இருக்கிறான். நாகரீகமாக வாழ்கிறான். பண்புடையவனாக இருக்கிறான். இதற்காக ஆறாம் அறிவிற்கு என பிரத்யேகப் புலன் ஏதும் அவசியமில்லை மனிதனுக்கு.

    எழுதவும், படிக்கவும், பேசவும் என்பதற்காகமட்டுமேவா இயற்கை ஐந்தறிவு சீவனிலிருந்து ஆறறிவுசீவனான மனிதனாக தன்மாற்றம் அடைந்திருக்கும்!?
    கல்வி கற்க முடிகின்றது மனிதனால் என்கின்றபோதே ஆறாம்அறிவின் முதன்மையான பயன் சிந்திக்க முடியும் என்பதாகின்றது. சிந்தித்தலின் பயன் என்ன? சிந்தித்தலின் பயனாகத்தான் ஆதிமனிதனிலிருந்து, இன்றுள்ள நாகரீக மனிதன் வரை தன்மாற்றம் முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது.

    சிந்திப்பது என்பது என்ன, ஏன், எதற்கு என்கின்ற மூன்று வினாக்களை எழுப்பி விடைகாண்பதேயாகும். அப்படிப்பார்க்கும்போது ஆறாம் அறிவின் பயன் ஐயுணர்வுகளை அறிவதோடு, கூடவே ஐயுணா்வை உணர்கின்ற நான் யார், நான் ஏன் பிறந்தேன், முடிவில் எங்கு செல்லப்போகிறேன், நான் உணா்கின்ற ஐவகைநிகழ்ச்சிகளுக்கும் மூலம் எது, இந்நிகழ்ச்சிகள் ஏன், எவ்வாறு நடக்கின்றன என சிந்தித்து தன்னையே அறிந்துகொள்ளும் பயனை ஆறாவது அறிவு அடைய வேண்டும் என்பதே இயற்கையின் உள்ளார்ந்திருக்கையாக(inherence) உள்ளது.

    ஆகவே சிந்தனையால் இக்கேள்விகளைக் கேட்டு விடையை பெறுவதற்கு ஆறாவது அறிவிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை. ஆகவே இயற்கை ஆறு அறிவுடைய மனிதஇனத்திற்கென பிரத்தியேகமாக புலன் எதனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களே போதுமானது. உடல் முழுவதும் தோல் என்கின்ற புலன் தொடுஉணர்வை அறிந்து கொள்கின்றது. மற்ற நான்கு புலன்களான கண்கள், காதுகள், மூக்கு. நாக்கு தலையின் முன்பக்கமான முகத்தில் இடம் பெறுமாறு வடிவமைத்துக் கொண்டது இயற்கை. இந்த நான்கு புலன்களைக் கொண்டே மனிதனின் முகம் அழகுடன் உள்ளது. வேறு புலன்களுக்கு முகத்தில் இடமில்லை. இவ்வாறு கூறுவதனால் முகத்தில் இடமில்லை என்பதற்காக ஆறாம் அறிவிற்காக புலன் ஏதும் ஏற்படுத்திக் கொள்வில்லை என்று பொருளாகா!

    ஆறாம் அறிவின் சிறப்பான சிந்தனையின் விளைவு, அறிவு முடிவில் தன்னையே உணர்ந்து கொள்ளுதலாகும். தன்னையே உணர்ந்து கொள்ளும் உணர்வு அகஉணர்வு. ஐம்புலன்கள் வழியாக உணர்ந்து கொள்ளும் உணர்வு புறஉணர்வு. புறஉணர்விற்குத்தான் அறிவிற்கு புலன்கள் என்கின்ற கருவிகள் தேவை.
    ஆனால் அகமாக இருக்கின்ற அறிவை/இறையை நானே என உணர்வது அக உணர்வு. எனவே தன்னையே யார் என்கின்ற உணர்வதற்கு தனியாக புலன் ஏதும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் அருளாளர்கள் வழிநடந்து சிந்திப்பதே ஆகும். அந்த வழியில் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபில் வந்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழிநடந்து, மகரிஷி அவர்கள், நம்மிடம் இதுவரை ஏற்றப்படாமல் இருந்துவந்த சிந்தனை விளக்கை ஏற்றி வைத்துள்ளார்.
    சாதாரணமாக விளக்கு சுடர் விட்டு தொடர்ந்து பிரகாசமாக எரிவதற்கு அதற்கு வேண்டிய எண்ணெய் ஊற்றியும், திரியின் முனையை நிமிண்டியும், அவ்வப்போது புது திரியை மாற்றிக் கொண்டும் இருப்பதுபோல் மகரிஷி அவர்கள் ஏற்றி வைத்துள்ள சிந்தனை விளக்கை தொடர்ந்து சுடர்விட, அருளாளர்கள் அருளியுள்ள நூல்களை படிப்பது (அவற்றில் மகரிஷி அவர்களின் நூல்களும் இடம் பெறவேண்டும்) சத்சங்கங்களில் கலந்து கொள்வது. நமக்குள்ளே சிந்தனையின் மூலம் சத்சங்கம் நடத்துவதும் பேருதவியாக இருக்கும். சிந்தனை விளக்கு சுடர்விட, ,ஆன்மபேரொளி அருளொளியை வீசச்செய்கின்ற வாழ்வை கடமையாக ஆற்ற வேண்டும்.

    துணைக்கேள்விக்கான பதில் என்ன? ஆறாம் அறிவின் நோக்கம்/பயன் இயற்கையின் ஆதிநிலையை/இறையை/தன்னை அறிதலாகும். இது அகஉணர்வு என்பதால் ஆறாம் அறிவிற்கு இதற்காக வழக்கத்தில் உள்ளது போன்ற உருவமுள்ள புலன்(conventional sense with physical appearance) ஏதும் தேவையில்லை என அறிந்து கொண்டோம். ஆனால் உருவமில்லாததை உணர, உருவமில்லா கருவியான சிறந்த–சிந்தனை ஒன்றே போதும். இயற்கையின் ஆதிநிலை/இறை அரூபமாக உள்ளதால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், அதனை உணா்வதற்கு அரூபமாக உள்ள அறிவால்தான் முடியும். ஆகவே இம்முறையான அகவழிபாட்டிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை.

    அறிவாகிய இறையை உணர்வதற்கு அகத்தவத்தால் தான் சாத்தியம் என்றும் உறுதிபடுத்தியபிறகுதான் நாம் அறிவை அறியும் மனவளக்கலையை பயின்று வருகிறோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை. வாழ்க சிந்தனைச் செல்வம். வளர்க சிந்தனைச் செல்வம். வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading