admin

Author Archives

  • FFC – 156-வினா விடை 8

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    வினா விடை 8

    FFC – 156

    20-01-2016–புதன்

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 120
    (24-10-2015—சனி)

    முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.                   …ஸ்பானியப் பழமொழி.

    பயிற்சி—
    1) இப்பழமொழி எச்சரிப்பது என்ன?
    2) நம்மை ஏற்கனவே இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எச்சரித்திருப்பது என்ன?
    3) எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன?

    விடை:-

    வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பே ஆகும். அனுபவங்கள் என்பது மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்களாகும். இந்த ஸ்பானியப் பழமொழியின் வாயிலாக வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள பழக்கங்களின் தன்மையைப் பற்றி அறிய இருக்கிறோம். பழக்கங்கள் பற்றி … ஸ்பானியப் பழமொழி இரண்டு உவமானங்களைக் கொண்டு புரியவைக்க விரும்புவது என்ன? சாதாரணமாக தெரியாத ஒன்று, தெரிந்த ஒன்றுடன் உவமானம் காட்டி விளக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு உவமானங்கள் காட்டப்பட்டுள்ளன இங்கே. எனவே இப்பழமொழி சொல்கின்ற அறிவுரை மிக முக்கியமானது எனத் தெரிகின்றது. ஏனெனில் பழக்கங்களின் இரு நிலைகளை அறிவுறுத்தி எச்சரிக்க வேண்டியிருப்பதால், வலிமையற்ற சிலந்தி வலையையும், வலிமையில் அதற்கு நேர் எதிரான தேர்வடத்தையும் உவமானங்களாக சொல்ல வேண்டியுள்ளது.
    முதலில் பழக்கம்(Habit) என்பது என்ன என்று பார்ப்போம். பொதுவாக எந்த ஒன்றிலும் திறமை பெற அதனை முதல் முறையிலேயே செய்து அதில் திறமை பெறமுடியாது. பலமுறை செய்துதான் திறமை அடையமுடியும். ஆர்வத்திற்கேற்ப தொடர்ந்து பலமுறை செய்யப்படுவதும் உண்டு. இங்கேதான் பழக்கம் உள்ளே நுழைகின்றது. இந்த பழக்கத்தின் இருநிலைகளை பற்றி ஸ்பானியப் பழமொழி எச்சரிக்கின்றது.
    ‘எந்த ஒன்று’ நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அது தீயதாக இருந்தால் எச்சரிக்கை வேண்டும். அதனை ஆரம்பிக்கவே கூடாது. நல்லது, தீயது என்பது அந்த ஒன்றை ஆரம்பிக்கும் முன் எவ்வாறு முடிவு செய்வது? அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பாயிற்றே!

    1) ஒன்று, ‘மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்’ என்பதால் மூத்தோர்கள் ஏற்கனவே சொல்லியுள்ளதை மதித்து, கவனத்தில் கொண்டு நடப்பதனை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
    2) திருவள்ளுவர் கூறுவதுபோல் பெரியோரை துணை கொள்ளல் வேண்டும்.
    3) புத்தர் கூறுவதுபோல் எப்படி பிணத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் கடல் தள்ளி கரையோரம் தள்ளிவிடுகின்றதோ அதுபோல் தீயநட்பை தள்ளிவிடவேண்டும்.
    4) ஆதிசங்கரர் பஜகோவிந்த்தில் அறிவுறுத்துவதுபோல் சத்சங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    5) தினந்தோறும் அறிஞர்களின் அறவுரைகளை தாங்கிய நன்னூல்களை வாசிக்க வேண்டும்.
    6) விழிப்புணர்வை வளர்த்து அதனை அயராத விழிப்புணர்வாக்கிக் கொள்ள வேண்டும்.
    7) அறிவினரோடு சேர்வதில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
    8) அறிவினர்களை கனவிலும், நனவிலும் கண்டு இன்பம் காணப் பழகிக் கொள்ள வேண்டும்.
    9) நேரிடையாக அறிவினரின் தொடர்பு கிடைக்கவில்லை எனில் அவர்கள் அருளிய நூல்கள் வாயிலாக அவர்களுடன் தொடர்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இராமலிங்க வள்ளலாரைத் தவிர மற்ற அருளாளர்களான தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவா்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யுக்தி நாம் அறியாததா என்ன?
    ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்கின்றது தமிழ்ப் பழமொழி ஒன்று. ஏனெனில் பழக்கம் ஆரம்பத்தில் சிலந்தி வலைபோல் வலியமையற்று இருக்கும். அதனால் பழக்கம் தீயபழக்கமாக இருந்தால் அதனை அழித்துவிடுவது எளிது. ஆனால் பழக்கங்கள் நாளாக நாளாக வழக்கமாகி அது வலிமையுற்று தேர்வடமாக ஆகிவிடும் என்கிறது ஸ்பானியப் பழமொழி. சிலந்தி வலையை ஒரு சுண்டு விரலாலேயே அழித்துவிடலாம் ஆனால் தேரை இழுக்கும் கயிறு(தேர்வடம்) எவ்வளவு வலிமையாக இருக்கும். அதை இரண்டு கைகளால் அறுக்க முடியுமா?

    பழக்கம் என்பது என்ன? எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது கருமையத்தில் பதிகின்றது. இன்று ஒரு செயல் முதல் முறையாக செய்யப்படுகின்றது. அது இயற்கையின்/இறையின் அருமையான, மிக, மிகச்சிறந்த பதிவுசெய்யும் ஏற்பாடான(Excellent Recording System) கருமையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. நாளை அச்செயல் மீண்டும் இரண்டாவது முறையாக செய்யப்படுகின்றது. இதற்கிடையில் அச்செயலின் பதிவு, செயல் செய்யாத போதும் எண்ணங்களாக வந்து அச்செயலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும், அச்செயலை செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றது.
    இவ்வாறு அந்த ஒரு செயல் பலநாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள் ரசித்து, ருசித்து, ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அச்செயல் பதிவு, பதிவு மேல் பதிந்து, பதிந்து அழுத்தம் பெறுகின்றது. அந்த ஒன்று நல்ல செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கது, ஆனால்

    அந்த ஒன்று தீயதாக இருந்து, பிறகு நமக்கே தெரிந்து,
    அல்லது ‘அது தீயது’, என பெரியோர்களின் இணைப்பு ஏற்பட்டு அவர்கள் வழியாக
    விளக்கம் கிடைக்கப்பெற,
    இறை அருளால் ஏற்பாடு செய்யப்பட்டாலும்,
    அப்பழக்கத்திலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கும்.

    இருந்தாலும் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு விளக்க வழியே வாழ்ந்து வெற்றிகண்டவர்களும் உண்டு. ஆனால் கடுமையாக தொடர் விடாமுயற்சி செய்ய வேண்டும் அதற்கு நாம் இந்த சத்சங்கத்தில்(Click here) ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’– என்கின்ற தலைப்பில் 27-05-2015—புதன்று சிந்திக்க ஆரம்பித்து 17-06-2015—புதனன்று (FFC – 86 — FFC-92) சிந்தனையை விரிவாக முடித்திருக்கிறோம். அதில் கருப்பொருளாக அறிஞர் ரூஸோ அவர்களின் “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கின்ற அமுத மொழியை எடுத்துக் கொண்டோம். அது பெட்டகத்தில்தான் உள்ளது. அதனை மீண்டும் பெட்டகத்திலிருந்து எடுத்து வாசித்துப்பார்க்கலாம்.

    நம்முடைய குருதேவர் அவர்கள் “பழக்கத்தி்ற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். இவ்வாறு மனிதனின் எதார்த்த நிலையைப்பற்றி கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளில் பழகிக் கொண்ட பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே கருமையத்தூய்மையால் செயலிழக்கச் செய்யலாம் எனவும் உறுதி அளிக்கின்றார். அதற்காக, .இயற்கை/இறை கருணையோடு வடிவமைத்துக் கொடுத்ததே இறையுணர் பாதையிலே விழிப்புடனே வாழ்வதற்கான அகத்தவம், அகத்தாய்வு ஆகியவற்றைக் கொண்ட தெய்வீகப்பயிற்சியாகிய மனவளக்கலை என்கிறார்.

    அடுத்த வினாவான ‘எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன? என்பதற்கு வருவோம்.

    ஏற்கனவே சத்சங்கத்தில் (Click here) அமுத மொழிகள் 86 இல் இதுபற்றி 27-06-2015 அன்று சிந்தித்திருக்கிறோம். அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அதில் இரண்டு அறிஞர்களின் அமுத மொழிகளை எடுத்துக்கொண்டோம்.

    “நல்ல குழந்தைகளாக உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.
    ……. ஆர்னால்ட் பென்னட்.

    “பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.“
    ……எம் கோர்க்கி.
    அதில் பயிற்சிக்காக கேட்கப்பட்ட கேள்விகளாவன.
    பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
    2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
    3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

    ஆகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு முன், பத்து வருடங்களாக பண்பேற்றத்தை கொடுக்கக் கூடிய மனவளக்கலை பயிற்சியினை பயின்று செயல்படுத்திக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது. மற்றும் அதுவே ஞானபரம்பரை உருவாவதை ஏற்படுத்தும். இது குழந்தை பெறுவதற்கு முன் செய்ய வேண்டியது. பெற்றோர்களே முதல் ஆசிரியர் என்பதால் பெற்றோர்கள் ஆவதற்கு முன்னரே வாழ்வியல் கற்று, பின்பற்றுகின்ற மனவளக்கலைஞர்கள்–பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவர். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்.

    அறிவிப்பு—

     வாழ்க வளமுடன்.

    23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

    மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்)  வள்ளலார் அவர்களிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-143

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    18-01-2016 – திங்கள்

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 155-வினா விடை 7

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    வினா விடை 7

    FFC – 155

    17-01-2016–ஞாயிறு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 119
    (23-10-2015—வெள்ளி)

    “செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

     

    விடை:-

    செழிப்பான வாழ்விற்கு செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும், அவசியம் என வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எல்லோருமே வாழ்வு செழிப்பானதாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். அதற்கு வேண்டிய செயல்களை செய்துதான் செழிப்பான வாழ்வு வாழமுடியும். அதாவது மகரிஷி அவர்கள் கூறுவதுபோல். ‘செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தையும் வாழ்வில் கொண்டு வந்தால்தான் வாழ்வு செழிப்பானதாக அமையும். எனவே ஐந்தைப்பற்றியும் விரிவாக அறிய வேண்டியுள்ளதால் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். எனவே இன்று சீர்திருத்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஐந்தில் செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சிக்னம் ஆகிய நான்கைப் பற்றியும் தனித்தனியாக வேறொரு நாள் அறியலாம்.
    செழிப்பு என்பது வளமுடன் காணப்படும் நிலை; வளத்துடனும், வளர்ச்சியுடனும் அமைந்த நிலை. வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால அனுபவங்கள். சீர்திருத்தம் செழிப்பான வாழ்க்கையை அளிக்கவல்லது என்றால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடைபெறும் அனுபவங்கள் வளத்துடனும், வளர்ச்சியுடனும் இருக்கும் என்று பொருளாகின்றது. அதாவது வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.
    அப்படியானால் சீர்திருத்தம் என்பது என்ன? சீர்திருத்தம் என்பது வாழ்வின் இனிமைக்கு வேண்டிய தகுந்த திருத்தங்களை செய்து கொள்வது. ‘சீர்திருத்தம்’ என்கின்ற வார்த்தை இரண்டு சொற்களைக் கொண்டது. ஒன்று ‘சீர்’. மற்றொன்று ‘திருத்தம்’. சீர் என்கின்ற சொல்லுக்கு ஒழுங்கு என்று பொருள். எனவே ஒழுங்குபடுத்துவதற்காக(சீர்) செய்யும் திருத்தம் சீர்திருத்தம். சீர்படுத்துவதற்காக செய்யும் திருத்தம் சீர்திருத்தம் எனப்படுகின்றது.
    நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முறையிலா (way of living) மனித குலம் இப்போது வாழ்ந்து வருகின்றது? இல்லையே விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப இப்போது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லையா? அவ்வப்போது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. விஞ்ஞனாம் என்பது .என்ன? இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றிக் கொள்ளும் கலை விஞ்ஞானம். இயற்கையில் மறைந்துள்ள வளங்களை(ஆற்றல்களை) கண்டுபிடித்து அதனை வாழ்வின் வளமாக மாற்றிக் கொடுக்கின்றது விஞ்ஞானம். அவ்வப்போது அவற்றை மனிதகுலம் அனுபவித்து வருகின்றது. புலன்களின் திறமையை விஞ்ஞானத்தால் அதிகரித்துக் கொள்கின்றது. உதாரணத்திற்கு, ஆரம்பத்தில், மனிதன் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதென்றால், அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நடந்தேதான் சென்றான். பிறகு மாட்டு வண்டியில் சென்றான். பிறகு மிதி வண்டியில் சென்றான். பிறகு வாகனங்களில் சென்றான். அதுபோல் அந்தந்த காலத்தில் ஒரு பழக்க வழக்கம் அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அது அந்த காலத்தில் பொருந்தியிருந்திருக்கும், அதுவே எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆகவே பழைய பழக்க வழக்கம் இக்காலத்திற்கு பொருந்தி வரவில்லை எனில் அதனை யாருக்கும் துன்பம் தராத வகையில் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் சீர்திருத்தம் எனப்படுகின்றது.

    சீர்திருத்தம் பற்றி சீர்திருத்தச் செம்மல் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிவோம். ஒன்பது பாடல்களில் சீர்திருத்தம் என்பதற்கு ஒரு பகுதியே ஒதுக்கி அதில் சீர்திருத்தம் என்பது என்ன, சீர்திருத்தத்தின் அவசியம் பற்றியும் விளக்கியுள்ளார். அவைகளாவன:

    1) சீர்திருத்தத்திற்கு முறை,
    2) சன்மார்க்க சங்கம் (03-07-1992),
    3) 15.09.1992 அன்று சீர்திருத்தம் சீர்பெருமை என்றும்,
    4) வயது வந்தவர்களிடம் சீர்திருத்தம் அரிது என்பது எதார்த்தம் என்றும்,
    5) ‘துயர்கலைய தூய்மைபெற நலம் காண்பீரே’ என்றும்,
    6) பண்பாடு என்பது என்ன என்றும்,
    7) விழிப்பு நிலை சீவன்முக்தி என்றும்,
    8) பண்பில் உயர்ந்த நாடு எது என்றும்,
    9) எந்த ஒர் மனவளக்கலை மூலம் பழிச்செயல் பதிவுகள் போகுமோ, அதனை அகத்தவம் என்று

    இவ்வாறாக ஒன்பது தலைப்புகளில் சீர்திருத்தம் பற்றி விளக்கியுள்ளார். (ஞ.க. பாடல் எண்642—650) . அவற்றில்  இரண்டு பாடல்களை மட்டும் இப்போது அறிவோம்.

    FFC-155-சீர்திருத்தத்திற்கு முறை-விவிடை

    சீர்திருத்தம் வாழ்வின் செழிப்பை அளிக்க வல்லது என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிடாமல், அந்த சீர்திருத்தம் என்பது என்ன, அந்த சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கே, சீர்திருத்த முறையைக் கூறுகிறார். என்னே அவரின் ஞானநிலை! என்னே அவரின் சமுதாய அக்கறை!

    ஏன் சீர்திருத்தங்களை சொல்லுகிறேன் என்று மற்றுமொரு பாடலில் 05.04.1988 அன்று கூறியுள்ளதையும் அறிவோம்.

    FFC-155-எந்எந்தக் காலத்தோ

    மற்ற பாடல்களை நேரம் கிடைக்கும்போது, வீட்டு அலமாரியில் அலங்கரித்துள்ள மகரிஷி அவர்களின் மூல நூல்களில் ஒன்றான ஞானக்களஞ்சியம்—1 இல் உள்ள அப்பாடல்களை கட்டாயம் ஓரிரு முறை வாசித்து இன்புறலாம். முடிந்தவரை மனனம் செய்யலாம். இதுவே அறிவினரை கனவிலும், நனவிலும் கண்டு இன்புறுவதாகும். இதன் வாயிலாக அவ்வையாரை நினைவு கூர்கிறோம்
    வேறொரு சமயத்தில் சீர்திருத்தம் பற்றி இன்னும் சற்று விரிவாக அறியலாம். கட்டுரை நீண்டு கொண்டே போவதால், இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொண்டு. அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-01-2016) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்’ என்கின்றஸ்பானியப் பழமொழியில் உள்ள பொருளை அறிந்து கொள்வோம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading