admin

Author Archives

  • அயரா விழிப்புணர்வு – 5 / 7

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 5 / 7

    FFC – 38

    17-12-2014—புதன்

     (Constant Awareness)

    தன்னைத் திருத்திக் கொள்வது மிகவும் எளிது. யாரையும் யாரும் திருத்த முடியாது. அவரவர்களே திருந்தினால்தான் முடியும். எனவே பிறரைத் திருத்த முயல்வதை விட்டு விட்டு தன்குறையைத் திருத்திக் கொள்வதில் வெற்றி பெற்றால், ஒருவேளை அவர்களும் திருந்தலாம். “தன்குறையைக் காண்பதே ஞானம்” என்கிறார் அண்ணல் காந்தியடிகள். இது பற்றி நாம் ஏற்கனவே 11-11-2014 மற்றும் 12-11-2014 ஆகிய இரு தினங்களில் FFC-14-FFC-15 இல் சிந்தித்துள்ளோம். மீண்டும் வேண்டுமென்றால் பெட்டகத்திற்குச் சென்று பார்க்கலாமே.

    இத்தருணத்தில் கவிதை வடிவிலே மகரிஷி அவர்கள் கூறியுள்ளதை அறிந்து மகிழ்வுறுவோம்.

    தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம் (02-12-1983)

    தன் குற்றம் குறைகள்தமைத் தன்னுள் ஆய்ந்து,
    தான்கண்டு தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
    ஏன் குற்றம் பிறர் பிறர் மீது சுமத்தக் கூடும்?

    ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்,

    மேன்மைக்கே மனம் உயரும்; பிறர் தவற்றால்
    மிகவருத்தம் துன்பமது வந்த போதும்,
    நன்மைக்கேயாம்; செய்த பாபம் போச்சு!
    நான் கண்ட தெளிவு இது. நலமே பெற்றேன்.” ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    என்று வாழ்த்தி வாழ்வோம் என்கிறார் வாழ்வியல் உண்மைகளைக்கூறும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம் என்கின்ற” வாழ்வியல் சூத்திரத்தை அறிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

    ஏனெனில் அறிவு தன்னைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதால் அதற்கு மகிழ்ச்சி உண்டாகின்றது. உள்ளம் பூரிக்கின்றது. ஆனால் அந்நல்வழி குணநலனைப் பெற்றிராத, ஏற்கனவே அதனைப் பழகாத மனம் அறிவிற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆரம்பத்தில் மனம் ஒத்துழைக்காமல் இருக்கலாம். “நான் ஏன் பிறர் குற்றங்களைப் பெரிது படுத்தாது மன்னிக்க வேண்டும்?” போன்ற பல வினாக்களை எழுப்பி, அறிவுடன் ஒத்துழைக்காமல் இருப்பதற்கு நம்மையே பல கேள்விகள் கேட்கும்.

    இதே போன்று எப்பொழுதெல்லாம் மனிதன் நல்வழிக்குத் திரும்ப முயற்சி செய்கின்றானோ அப்போதெல்லாம் மனம் ஒத்துழைக்காது. மனதைக் குறைகூறுவதில் பயனில்லை. பழக்கப்பட்ட உடல் செல்கள், பழகிவிட்ட மனம் மீண்டும் பழக்கத்தை மாற்றி விளக்க வழியே நல்வழிக்கு வருவதற்கு தடைகளாக உள்ளன. அதனால் எந்த ஒரு எண்ணத்திற்கோ, அல்லது எந்த ஒரு பழக்கத்திற்கோ, ஆராய்ச்சி செய்யாது, சிந்திக்காமல் ஆளாகிவிடக்கூடாது. அடிமையாகிவிடக்கூடாது. ஏனெனில் மனம் பழகிவிட்டது. அதனால் சில சமயங்களில் உடல் செல்கள் கூட ஒத்துழைக்காது. மனம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் அதற்கு உகந்த பதிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உலகமாந்தரை நினைத்து மகரிஷி அவா்கள் மொழிந்துள்ளதை இங்கே நினைவு கூர்வது நல்லது.
    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார் – Man is struggling between habit and wisdom.” மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. Man is a bundle of thoughts. Man is a social animal. மகரிஷி அவர்கள் மனிதனுடைய மற்றொரு வரையறையாக கூறுவது:- “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். வேறு எந்த சீவனுக்கும் இந்த வரையறை பொருந்தாது மனிதனுக்கு மட்டுமே பொருந்துகின்ற வரையறை இது.
    ஏனெனில் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மற்ற சீவன்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் அவை அதற்கென அன்று இயற்கை வைத்துள்ள வழியே வாழ்ந்து வருகின்றன. தங்கள் வாழ்க்கை நெறிகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மேலும் மற்ற சீவன்கள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழ் நிலையில்தான் உள்ளன. ஆனால் மனிதனின் ஆறாம் அறிவு ஐந்தறிவு நிலையிலிருந்து உயர்ந்துள்ளது. ஆதி மனிதன் தோன்றியபோது வாழ்ந்த நிலையிலேயே மனிதன் இன்று வாழவில்லை. நெறிகளை மாற்றிக் கொண்டான். ஆகவே மனிதன் இயற்கை வகுத்துள்ள வழியே வாழவில்லை. அங்கேதான் மனிதனுக்கு இயற்கை வழி வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் அறிவுரை விளங்கங்கள் தேவைப்படுகின்றன. அந்த விளக்கங்கள் மனிதன் பெற்றாலும் விளக்கங்கள் வழியே வாழமுடியாமல் பழைய தீமையளிக்கக் கூடிய பழக்கங்கள் வழியே வாழ்ந்து வருவதை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.
    இந்நிலைதான், இது வரை எவ்வளவோ அறநூல்களை இயற்கை அளித்திருந்தாலும், மனிதகுலத்தால் இன்னும் அவலநிலையிலிருந்து மீண்டு வரமுடியாதற்குக் காரணமாக உள்ளது. விளக்கத்தையும் மனிதன் விட முடியவில்லை. காரணம் அவன் ஆறாம் அறிவுடையவனாயிற்றே! விளக்கம் பெறுவதற்கும் அவனுக்கு பெரும் ஆசையுள்ளது. ஆனால் பல்லாயிரம் பிறவிகளாக அவனது கருமையம்(ஆன்மா) சுமந்து வந்த விளக்கமில்லாதப் பதிவுகளை இறக்கி வைக்கவோ அல்லது துடைக்கவோ முடியவில்லை. வேதாத்திரியம் கல்வி, எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு. இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூறியது, இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை ஒழுக்கப் பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவும் மணித மாண்புக்கல்வியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது,

    எனவே விளக்கங்களும், சத்சங்கமும் தான் மனதிற்கு விழிப்பு நிலையில் பழகுவதற்கு பெரும் துணையாக இருக்கும். தன்குற்றம் உணர்வதிலும், பிறர் குற்றம் மன்னிப்பதிலும் அயராத விழிப்பு தேவை. அப்படி விழிப்புடன் இருந்து இருந்துப் பழகி, சில நேரங்களில் தவறினாலும், தொய்வு ஏற்படாது முயற்சி செய்து, செய்து பழகப்பழக, பின்னர் அந்நல்வழிக் குணநலன் கைவல்யாமாகும். சித்திரமும் கைப்பழக்கம் என அவ்வைத் தாய் கூறியுள்ளது போல் எந்த தீய பழக்கத்தையும் நற்பழக்கமாக மாற்றி அமைத்திட பழகவேண்டும். அதோடு அவ்வைத்தாய் கூறுவது போன்று அறிவினரைச் (அறிவை அறிந்த குருவைச்) சேர வேண்டும். அடுத்த ஞாயிறன்று சந்திப்போம். வாழ்க வளமுடன். 

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 20

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    15-12-2014

    பிறவியின் நோக்கத்தை அடைந்ததில் எத்தனைப் படிகளை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் கடந்ததாகக் கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • அயரா விழிப்புணர்வு – 4 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 4 / ?

    FFC – 37

    (Constant Awareness)

    14-12-2014–ஞாயிறு

    சென்ற வாரம் புதனன்று மனவளக்கலையின் மூன்று வளர்நிலைகளில் முதல் இரண்டு நிலைகளான “மனம் விரிவு பெறுதல் மற்றும் இயற்கை விதி அறிதல் ஆகியவைப்பற்றிச் சிந்தித்தோம். இன்று மூன்றாவதான வளர்நிலையிலிருந்து சிந்தனையைத் தொடங்குவோம். மூன்றாவது வளர்நிலை ‘எண்ணம், சொல், செயல்’ ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல். எவ்வாறு விழிப்பில்(விழிப்பு நிலையில்) விழிப்பாக இருப்பது பற்றிச் சிந்திப்போம்.

    1) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

    இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

    அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார்.(It is this; state of constant Awareness. that is wisdom). அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

    ஒன்று materialistic awarness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness” என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மகரிஷி அவர்கள் கூறுவது “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” தரும் Esoteric Awareness பற்றி. வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ IN Awakened Consciousness, Awareness is at its Zenith.” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம். இதுபற்றி வேறொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

    இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது. ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்துள்ள மகரிஷி அவர்களை (அறிவு+இயல்=அறிவியல்) அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானம் (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

    விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த புதன் கிழமையன்று நினைவு கூர்வோம். புதன்கிழமை மீண்டும் சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    Loading