admin

Author Archives

  • அயரா விழிப்புணர்வு – 3 / ?

     

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 3 / ?

    FFC – 36

                                                                                                 10-12-2014–புதன்

    (Constant Awareness)

    குறிப்பு: சென்ற விருந்தில்(FFC-35, 07-12-2014) சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனையும் படித்துப் பயன் பெறவும். புதிதாக சேர்க்கப்பட்டவை ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். வாழ்க வளமுடன். இப்போது இன்றைய விருந்திற்குச் செல்வோம்.
    நான் யார் என்கின்ற வினாவிற்கு பதிலைக் கருத்தியலாகவும், அதற்கான பயிற்சியினை செய்முறையாகவும் கொடுத்து வருகின்றது மனவளக்கலை. அறிவிற்கு வேண்டிய மூன்று வளர் நிலைகளை ஏற்படுத்தும்படியாக மனவளக்கலையை வடிவமைத்திருக்கிறார் வாழ்வியல் விஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவையாவன:

    1) மனம் விரிவு பெறுதல்.

    மனம் விரிவு பெற வேண்டும். அப்படியென்றால் என்ன? மனம் என்பது விரிவடையக்கூடிய Elastic பொருளா? தற்போது மனம் குறுகியுள்ளது. தான் தன் குடும்பம் என்கின்ற அளவிலேதான் உள்ளது மனதின் நிலை. ஆனால் வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ளும் அளவிற்கு மனம் இன்னும் விரியவில்லை இது வரை. ஆனால் மனவளக்கலையின் வாயிலாக, மனதை, அதனுடைய மூலம் (origin) வரை விரியச் செய்து அந்த மூலத்திற்குள் இருக்கும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இயற்கை இப்போது வழிவகை செய்து வருகின்றது.

    மனம் குறுகியுள்ளது என்றால், தன்முனைப்பால், “தான்”. “தனது” என்கின்ற இரு எண்ண கோடுகளைக் உருவாக்கிக் கொண்டது என்கிறார் மகரிஷி அவர்கள். “தான்” “தனது” என்பது வெறும் எண்ணக் கோடுகள் தானே தவிர, உண்மையில்  –இயற்கையில் அவ்வாறு இல்லை. மனிதனைத்தவிர மற்றவைகள் பிறர்க்காகத்தான் வாழ்கின்றன.

    மரம் தனக்கென கனிகளை வைத்துக் கொள்வதில்லை.  வைத்துக்கொண்டால் பழம் அழுகிவிடும்.  பசுவை எடுத்துக்கொள்வோம். பசு தனக்காக பாலை உற்பத்தி செய்துகொள்வதில்லை.தன் கன்றிற்கு கொடுப்பதுடன் மனிதனுக்கும் கொடுக்கிறது.  பசுவின் மடியிலுள்ள பாலை அளவுக்கு அதிகமாக கன்று மட்டுமே பருகினாலும்   கன்றிற்கு பேதியாகும்.  பசு மடியில் பாலை கரக்காமல் விட்டு விட்டாலும் பசுவிற்குத் துன்ப உணர்வு ஏற்படும்.

    இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் “தான்”, “தனது” என்கின்ற எண்ணக்கோடுகள் இல்லாமையால் துன்பங்கள் இல்லை. இப்படி இயற்கை அமைப்பு இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையைப் பற்றி  அறியாத நிலையில்  தன்முனைப்புடன், “தான்” “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளுடன் இருப்பதால் அந்த இரண்டு தம்பதிகளுக்குப் பிறக்கும் ஆறு அவலக்குழந்தைகள் தான் பேராசை, சினம். கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவையாகும் என்கிறார் இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வேதாத்திரியம் ௬றும் ”தான்“ “தனது“ என்கின்ற தன்முனைப்பு விஞ்ஞானத்தில் (Science of Ego) இயற்கையைப் பற்றியும் உள்ளது. மனித வாழ்க்கையைப் பற்றியும் உள்ளது. இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவின் தன்மாற்ற நிகழ்ச்சியைப்பற்றிய விஞ்ஞான உண்மையும் உள்ளது.

    அதே நேரத்தில் மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்குக்கான அறிவு பூர்வமானக் காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஆகவே மகரிஷி அவர்களை இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானி என அழைத்து மகிழ்வதோடு மட்டமல்லாது, அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி இந்த வாழ்வியல் கல்வி, உலக மக்களிடையே பரவிட ஊக்கத்தையும் அக்கறையையும் நமக்கு அளிக்குமாக. உலக மக்கள் அனைவரும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்து வளமுடன் வாழட்டும்.

    சிந்திக்கவும் கீதாசாரம் கூறுவதை.

    ”எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையதாகின்றது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்” இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.)

    விளக்கம்:- தந்தைக் கட்டிய வீடு தந்தைக்குப் பிறகு மகனுக்கு சென்று விடுகின்றது. மகனுக்குப்பிறகு பேரனுக்குச் சென்று விடுகின்றது. தந்தைக் கட்டிய வீட்டினை, இப்பூவுலகத்தைவிட்டுப் போகும் போது தந்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் தந்தை முயற்சி செய்தால் வீட்டிற்கெல்லாம் வீடாகிய வீடு பேற்றினை மனவளக்கலையால் அறம். பொருள். இன்பம் ஆகிய மூன்றினையும் அனுபவித்து பெறுதற்கெல்லாம் அரிய பேறான வீடு பேற்றினை அடையாலாம். வாழ்க மனவளக்கலை. வளா்க மனவளக்கலை. வாழ்க மனவளக் கலைஞர்கள். வளர்க மனவளக் கலைஞர்கள்.

    இந்த உண்மையை அறிவு அறியாததால் மனம் குறுகி நிற்கின்றது. பாவம் அறிவு என்ன செய்யும்? பரிணாமக் கசட்டினை அகற்றுவதற்கே அதற்குப் பல பிறவிகள் தேவையிருக்கின்றது. பரிணாமக் கசடு அகன்றால்தான் புலன்மயக்கம் தீரும். அந்த நிலையில்தான் கீதாசாரம் விளங்க ஆரம்பிக்கின்றது. தின்றுத் திரிந்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அறிவை விழித்தெழச் செய்திருக்கின்றது வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக இயற்கை. பரிணாமக் கசடாலும், புலன்மயக்கத்தால் மனதிற்கு, அறவே வேண்டா குணங்களானப் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்கள் ஏற்பட்டுவிட்டன.

    இதன் விளைவு செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதிப்படி விளைவு தனக்கேத் துன்பங்கள் வரும். பிறர்க்கும் துன்பம் வரும். ஆகவே மனதை விரிவு பெறச் செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியாக உயிர் மீது தவம் இயற்றும் தவமுறை வகுத்துக் கொடுத்து, உடலளவிலே குறுகியிருக்கும் மனதை இப்பிரபஞ்சம் வரையும், அதற்கும் மேலாக எங்கிருந்து மனம் உருவாகியதோ அந்த எல்லையில்லாப் பெருவெளி வரை மனதை விரித்து பழுகுவதற்கானப் பயிற்சியினைத் அளித்துள்ளார். மகரிஷி அவர்கள்.

    2) இயற்கை விதி அறிதல்.

    மேலும் மனிதன் பெரும்பாலும் தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். அவன் செய்யும் தவறுகள் சொல் மற்றும் செயல் வடிவில் இல்லையாயினும் அது எண்ண வடிவில் இருந்து கொண்டுதான் உள்ளது. தவறுகள் எண்ண வடிவில் இருந்தாலும் அதற்கும் விளைவுகள் உண்டு. அதனால்தான் மனதை சரி செய்யக்கூடிய, செம்மைப்படுத்தக் கூடிய கலையை உருவாக்கி அதற்கு மன+வளக்கலை எனப் பெயரிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல் அதனை ஒரு அளவு கோலால் சரிபார்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அதுதான் அறிவிற்கான மூன்றாவது வளர் நிலை. அதனை சத்சங்க நிகழ்வுப்படி ஞாயிறன்று சத்சங்கத்தில் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

                              வாழ்க மனித அறிவு                                                             வளர்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 18

    வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

    08-12-2014

    இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்கின்றது அத்வைதம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கின்றது அத்வைதம். எல்லாமே இறைவன் என்கின்ற போது அறிவும் தெய்வம் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் அறிவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • அயரா விழிப்புணர்வு-2/?

    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு-2/?

    FFC – 35

    07-12-2014-ஞாயிறு

    (Constant Awareness)

    இப்போது திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதைக் கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

    ”பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

    புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். அவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை (புலன்களை) அகப்படுத்தும்(trap) கருவியாகத்தான் கருதுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். (எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது.) ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

    இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனி்த சமுதாயம், இன்பம் அனுபவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது.  தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது. புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலனின்பம். இதில் சலிப்பும், துன்பமும் ஏற்படலாம். அளவு மீறும்போதும். முறை மாறும்போதும் இன்பமே துன்பமாகிவிடும். ஆனால் புலன் கருவிகள் இல்லாமல் உணரும் இன்பம் ஒன்று இருக்கின்றது, அதுதான் பேரின்பமாகும். இதில் சலிப்பும் இராது. துன்பமும் வராது. தெய்வீகப் போதைதான் வரும்.

    அயரா விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? உறங்கும்போது உணர்வு கிடையாது. விழித்திருக்கும் போது உணர்வு உண்டு. ஏற்கனவே உணர்வு இருக்கும் விழிப்பு நிலைக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? அதுவும் அயரா விழிப்புணர்வு வேண்டும் எனப்படுகின்றது. விழிப்பில் இருக்கும் போது உணர்வு இருக்கின்றது என்பது சரிதான். புலன்கள் வழியாக அறிவு உணர்ந்து கொண்டிருக்கின்றது. விழித்துக் கொண்டிருக்கின்ற போது மனிதன் எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்கிறான். அப்போது மனிதன் விழிப்புடன் இருக்க வேண்டும். அதனைத்தான் நாம் அயரா விழிப்புணர்வு” என்கின்ற தலைப்பில் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம். சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் இருக்க வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

    குருவை அடைவதற்கு முன்னர் ”அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

    தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்.

    அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கை அன்னையின் குழந்தைகள்தான் மனிதன். மனிதன் அந்த பரிபக்குவத்திற்கு வரவேண்டுமே.! வந்தால்தானே அதற்கான கனிந்த நேரம் வரும். இப்போது வந்துள்ளது.

    அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவுச் சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்திருக்க வேண்டும்” என்று. இங்கே இயற்கையியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் இயற்கையின் நிகழ்வை ”When fraction demands Totality Supplies” என்கின்ற உண்மையைச் சிந்தித்து நாமும் அவ்வுண்மை மக்களிடம் பரவ வலுசேர்ப்போம். இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் ”எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் உய்ந்து வரும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, ”நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என வினா எழுந்து, தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். பரிணாமத்தில் இப்போதுதான் மனவளக்கலை வழியாக அந்த தருணத்தை உருவாக்கியுள்ளது இயற்கை.

    இங்கே மற்றொரு  உண்மையினை கூடவே அறிந்து கொள்ள வேண்டும்.   தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை.  இது சரிதானே?  அப்படியானால் கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை என்றாகின்றதல்லவா?  இதுவும் சரிதானே? தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன்.  அரூபமான கடவுளை உணர்வதற்கு அரூப வழிபாட்டின் மூலமாகத்தான் சாத்தியம் என்றாகின்றதல்லவா?  இதுவரை பரவலாக இல்லாத அரூப வழிபாட்டினைத்தான் மனவளக்கலை ஏற்படுத்தி வருகின்றது.     புதனன்று தொடா்வோம்.

    வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
           வாழ்க அறிவுச் செல்வம்.   வளா்க அறிவுச் செல்வம்.

    Loading