இன்றைய விருந்து

  • வாழ்வில் தேறிடுவோம்!

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     FFC/அ.வி.  201

    26-06-2016-ஞாயிறு

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியவை:

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

     

    பிறப்பு – இறப்பு என்கின்ற இரு நிகழ்சிகளுக்கு இடையில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை எனப்படுகின்றது. சிறுவனாக இருக்கும்போது பள்ளிப் படிப்பில் தேற்கிறோம். வாலிபனாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பில் தேற்கிறோம். பணிக்குச் சென்ற பின் அப்பணியிலும் தேற்கிறோம். ஆனால் வாழ்வில் தேறினோமா என்றால் சந்தேகமே. இல்லாவிட்டால் ‘ஒருவரேனும் தேறிலர்’ என்று ஆதங்கப்பட்டிருக்கமாட்டார் அருட்பிரகாச வள்ளலார். எனவே ‘அஞ்சவேண்டாம், திருத்திடுவோம்’ என்று பூதவுடலைவிட்டுச் சென்றபோது கூறிய அருட் செய்திக்கு இணங்க திருந்திடுவோம், தேறிடுவோம். இது காலத்தின் கட்டாயம்.

    வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 740 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 740 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 140 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.
    ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.

    FFC_46-geetha chaaram-

     இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.

    740 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 740 கோடி மக்களும் 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன் படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?
    பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.
    இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) சொத்தை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவதில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று ஏன் கூறப்படுகின்றதென்றால் அந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காததால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர், காரணம் என்ன? வாழ்வில் அறிய வேண்டியதை அறியவில்லை.
    தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.
    எதார்த்தம் என்றால் என்ன?
    எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி,
    நடைமுறைக்கு முரண்படாதது.
    அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள்.
    உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.
    சமுதாயம் இயற்கையின்/இறையின் மற்ற ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை.
    காரணம், மனித அறிவு, இதுவரை வாழ்வின் நோக்கத்தை விஞ்ஞானப் பூர்வமாக அறியவில்லை.
    இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன
    அறியாமை,
    அலட்சியம்,
    உணர்ச்சிவயம்.
    ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,
    அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அதாவது
    அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவின் பூர்வீகம் என்பது, மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.
    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும்.
    அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும்.
    அறிவின் இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். ஒழுங்காற்றலான அறிவை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தினால்தான் அறிவின் இருப்பிடம் அறிய முடியும்,
    அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதை எல்லாம் அறிந்துவிடும். மகாவீரர் கூறுவதனை நினைவு கூர்வோம்.
    “எவனொருவன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.”
    நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது,
    அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
    “தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”
    — சுவாமி சிவானந்த பரமஹம்சர்.
    மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.

    “எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”   — டால்ஸ்டாய்.

    வரும் புதனன்று(29-06-2016) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • தன்குறைகளை அறிவதே ஞானமா? ஆம்.

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு
     
    FFC – 200

     22-06-2016-புதன்

    தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்வதே ஞானம் என்கிறார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். குறைகளை அறிந்து கொள்வதே ஞானமா? தன் குறைகளைத் தானே அறிபவன் அத்துடன் இருந்து விடுவதில்லை. ஏனெனில், வள்ளுவர் கூறுவதுபோல் சான்றோர்களின் அணிகலான நாணம் அவனிடமும் உள்ளதால் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வான். தன்குறைகளை அறிந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்ளும் போதுதான் அவன் தன் குறைகளை அறிந்தவன் ஆகிறான். அவனே தான் பின்னர் சான்றோனாகிறார். ஞானியாகிறார்.
    தன்குறைகளை அறிந்து கொள்பவன், எந்த அளவிற்கு ஆழ்ந்து தீவிரமாகத் தன்னை திருத்திக் கொள்ள முயல்கின்றானோ அதற்கேற்ப திருந்துகின்ற சூழலும் வாய்ப்பும் ஏற்படும். அறிவினர்ச் சேர்க்கையும் உண்டாகும். தன்குறைகள் தனக்கே தெரிய ஆரம்பிப்பதும், தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதுமே அறிவிற்கு ஏற்படுகின்ற தெளிவினால்தான் சாத்தியமாகின்றது. இயற்கையே ஆதிநிலையில் பேரறிவாக உள்ளது. மனித அறிவாக தன்னையே உணர்ந்து கொண்டு மகிழ்வதற்காக மலர்ந்துள்ளது.
    ஆனால் தனது பயணத்தில் பரிணாமக் கசடுகளைச்(பரிணாமக் கசடுகள் பற்றித் தனித்தலைப்பில் வேறோரு நாள் அறிவிற்கு விருந்து படைப்போம்.) சுமந்து கொண்டு வந்துவிட்டது மனித அறிவு. அந்த பரிணாமக் கசடுகள்தான் மனிதனிடம் குற்றங்குறைகளாக உள்ளன. “எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற ஆதங்கப் புதிரை இன்னமும் கொண்டதாகவே உள்ளது மனித மனம்.
    ஆகவே மனிதனுக்கு தன் குறையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால் எல்லாம் வல்ல இயற்கையே திருந்துகின்ற சூழலையும், நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த இயற்கையின் ஏற்பாடுதான் — அவ்வையார் கூறும் அறிவினரின் அல்லது தன்னை உணர்ந்த குருவின் சேர்க்கையும், பிறகு அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதில் இன்பம் கண்டு பிறவிப் பயனை இப்பிறவியிலேயே அடைதலும்.
    பொதுவாக ஞானம் தேடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் ஞானம் தேடி ஞானியாகிவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கின்ற தவறானக் கருத்து நிலவி வருகின்றது. ஞானம், தேடிப் பெறுவதன்று. அறிவு தனக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற முழுமையானத் தெளிவே ஞானம். அறிவு மேலும் மேலும் தெளிவு அடையும்போது, அறிவின் குறைகள் படிப்படியாக நீங்குதல் ஏற்படும். எனவே ஞானம் என்பது குறைகள் நீங்கிய அறிவின் நிலை என்றுதானே பொருளாகின்றது. ஞானம் என்பது அறிவின் ஒளியாகும். எப்படி? இருட்டில் இருக்கும் அறிவிற்கு ஞானம் ஒளியைத் தருகின்றது. அறிவொளியே ஞானம்.
    ஞானம் என்கின்ற சொல்லின் பொருளென்ன?
    o ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை,
    o முழுமையான அறிவு என்பதனைக் குறிக்கின்றது.
    அனைத்தும் அறிந்த நிலை என்றால் அறிவிற்கு குழப்பம், சந்தேகம் முதலியவை நீங்கி ஏற்படும் துலக்கம் என்று பொருள். அதாவது ஞானம் எனில் தெளிவு என்று பொருள்.
    முழுமையான அறிவு என்றால் அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகிய குறைகள் நீங்கிய நிலை. மனித அறிவு ஞானம் ஏற்படுவதற்கு முன்னர் குறைவுடைய அறிவாக இருக்கின்றது. ஆதலால்தான் மனவளக்கலையின் இறுதிப்பயன் அறிவின் முழுமைப் பேறு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஞானம் என்பது பற்றி மகா கவி பாரதியார், மற்றும் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் ஞானம் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம்.
    மகா கவி பாரதியார் தெளிந்த நல்லறிவை ஞானம் என்கிறார். தெய்வப்பாடல்கள் வரிசையில், ஒருபாடலில் “தெளிந்த நல்லறிவு வேண்டும்“ என தெய்வத்தை வேண்டச் சொல்கிறார். அப்பாடலை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அன்னையை வேண்டுதல்

    ”எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
    தெளிந்தநல் லறிவு வேண்டும்;
    பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பனிபோல,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.”    . . .  மகா கவி பாரதியார்.

    எதற்காகத் தெளிந்த நல்லறிவை கேட்கச் சொல்கிறார் மகா கவி? பாவங்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ”என்னுடைய பாவங்களைப் போக்கிட வேண்டும்” என இறையை மீண்டும் மீண்டும் வேண்டுவது என்பது அறிவின் மடமையன்றோ. செய்த பாவத்திற்கான பாதிப்புகள் தனக்கும் சமுதாயத்திற்கும் வந்து கொண்டே இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத தெளிந்த நிலைக்கு அறிவு உயர்ந்து விட்டால், பாவத்தின் விளைவுகளான தீமைகள் தனக்கும் சமுதாயத்திற்கும் நிகழாமல் இருக்கு மல்லவா? பாவங்கள் செய்யாத நிலைக்கு உயர்ந்த அறிவு நல்லறிவுதானே. நல்லறிவில் தெளிவும் சேர்ந்து விட்டால் எவ்வளவு நலன் பயப்பதாக இருக்கும். எனவே தெளிந்த நல்லறிவை வேண்டச் சொல்கிறார் மகா கவி.
    நல்லவை எண்ணாததற்கு முன், தீயவைகளை எண்ணியபோது தான், பாவங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று அறிந்து கொள்வதற்கும், இனிமேல் நல்லவைகளையே எண்ண வேண்டும் என்று விரும்புவதற்கும், ஏற்கனவே செய்துள்ளப் பாவங்கள் நீங்க வேண்டும் என இறைவியை வேண்டுவது என்பது அறிவு தெளிந்தால்தான் சாத்தியமாகும். அந்த அறிவுத் தெளிதல் ஏற்பட்டு விட்டால் கெட்ட அறிவு நல்லறிவாக மாறிவிடும். தெளிதல் ஏற்பட்ட நல்லறிவுதான் தெளிந்த நல்லறிவு எனப்படும். அதாவது தன்னிடமுள்ள குறைகளை அறிந்து கொள்வதற்கு தெளிந்த நல்லறிவு வேண்டும். அதனால்தான் தெளிந்த நல்லறிவை இறைவியிடம் வேண்டச் சொல்கிறார் பாரதியார். அடுத்ததாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் பற்றிக் கூறுவதனைச் சிந்திப்போம்.
    வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்.
    அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.
    அழைப்புக் கவி
    அன்பர்களே, வாரீர்!
    அறிவின் இருப்பிடம்
    அறிந்து இன்பமுற
    அன்பர்களே வாரீர் …….. என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஞானம் என்கின்ற சொல்லிற்குத் பொதுவான அர்த்தம் ‘தெளிவு . தெளிவு என்பது யாருக்கு? எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம். வாழ்வது ஒரு கலை.
    எதற்காகப் பிறந்தோம்?
    கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?
    ஏன் துன்பம் வருகின்றது?
    வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
    துன்பமில்லாமல் வாழ முடியாதா?
    ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.
    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.
    அதற்கு, “நான் நான்” எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.
    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான்.
    மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன?
    1. தீய எண்ணங்கள்,
    2. தேவையில்லாத ஆசைகள்,
    3. சினங் கொள்வது,
    4. கவலையுறுதல் மற்றும்
    5. தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.
    பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது. ஆகவே தன் குறையை அக்கறையோடு எடுத்துப் பிறர் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்
    அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .
    ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு. அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.
    அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன்” . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது அநேகருடைய வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும், நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெறுக்கி ஞானபீடத்தை அடைவான்.
    மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும், அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும்.
    அடுத்த அறிவிற்கு விருந்தில் (26-06-2016-ஞாயிறு) சந்திப்போம்.

    வாழ்க வளமுடன்.
     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 5/5

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    FFC-199

                                          19-06-2015- ஞாயிறு

    FFC-199-SUB TITLE-

    இரண்டு வாரங்களாக, இறை, நீதி, இறைநீதி, கூர்தல், அறம், கூர்தலறம் என்றால் என்ன, ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்றும், பரிபாலனம், கருமையம், அதன் பாலங்கள் பற்றியும் சிந்தித்து வருகிறோம். நான்காவதாகிய தனிமனிதனுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள பாலத்தைப் பற்றியும் சிந்தித்து வருகிறோம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப குரு கிடைப்பார் என்பதனை அறிந்து கொண்டோம். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளது போல், ஆயிரத்தில் ஒருவர் இறையைத் தேடுகிறார்கள், அவ்வாறு தேடியவர்களில் யாரோ ஒருவா்தான் இறை உணர்வு பெறுகின்றனா் என்று கூறுவதனையும் அறிந்து கொண்டோம். அதற்கானக் காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே என்று அறிந்தோம். இன்றைய விருந்தில், முன்வினையை வென்று, முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தாலும் சீடர்களின் ஆன்மீக முன்னேற்றம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    அவ்வையாரும் ஞானத்தை பெறுதல் மிக அரிது என்று கூறுகின்றார்.

    “அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!
    ……………………………………………………………………………………
    …………………………………………………………………………………
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது”. என்கிறார்.

    மனிதராகப் பிறப்பது அரிது என்றும், அப்படியே கூன், குருடு, செவிடு நீங்கி மனிதராகப் பிறந்தாலும் ஞானத்தை விரும்புதல் அரிது என்று மனிதவாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து இயம்புகிறார். மனித வாழ்வின் எதார்த்தம் அவ்வாறாக இருந்தாலும், அதனை எடுத்துக் கூறி ‘அப்படியே இருந்து விடுங்கள்’ என்று கூறவில்லை. ‘நல்வழியில்’ அவ்வையாரே கூறும் உறுதியினைக் கவனிப்போம்.

    “வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய் நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க்[கு] இல்லை விதி.”

    பொருள்: முந்தைய பிறவிகளில் செய்த தீயசெயல்களின் விளைவை(பயனை) வெல்வதற்கு, வேதம், மற்றும் அதுபோன்ற நூல்களையும் கற்பதனால் பயனில்லை. “எனினும் கவலை கொள்ளாதே!” என்கிறாள் அவ்வைப்பாட்டி. மெய்யாகிய முக்தி நெறி நிற்பவருக்கு அவர் நினைப்பதுபோல் நடக்குமேயன்றி கவலை தரக்கூடியது ஒன்றும் இல்லை. பிறவிப் பயனை அடைய விதி என்று இல்லை என்கிறார் அவ்வையார். ஆர்வமும் முயற்சியும்தான் வேண்டும் என்கிறார் அவ்வையார். நெறியில்லாமல் முக்தி அடைய முடியாது. முக்தி நெறி அவசியம். முக்தி என்பது என்ன? “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்; அறிவு முழுமை அது முக்தி” என்கின்ற திருவேதாத்திரிய மந்திரம் 2 ன்படி அவன் நாம் ஒன்றாய் அறிந்த போது அறிவுமுழுமை அடைவதே முக்தி.

    அறிவுமுழுமை அடைய, முந்தைய வினையும் நீங்க வேண்டும். இப்பிறவியின் வினைகள் யாவும் நல்ல வினைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நெறி நின்று வாழ வேண்டும். ஒழுக்க நெறி, அறநெறி என்கிறோம். நெறி என்பது என்ன? மனித ஒழுக்கத்துக்காக மேற்கொள்ளவேண்டிய முறைகள். நெறி நின்று வாழாமையால் வந்துள்ள முந்தைய தலைமுறையின் வினையான முன்வினையை வெல்ல வேண்டுமென்றால் இப்பிறவியில் நெறியுடன் வாழ்ந்தே ஆக வேண்டும். கூடுதல் கவனத்துடன் நெறியுடன் வாழ்ந்தால் முன்வினை தீர்ந்து முக்திக்கு வழிவகுக்கும். அந்நிலையில்தான் ‘நினைப்பதுபோல் நடக்கும். கவலைத் தரக்கூடியது ஏதுமில்லை. முன்வினை விதி என்பதும் ஒன்றுமில்லாது போய் விடும்’ என்கிறார் அவ்வையார்.

    திருவேதாத்திரியம் கூறுகின்ற information, confirmation, transformation ஆகிய மூன்று நிலைகளில் வேதங்கள் ஆகிய அறநூல்களைப் படிப்பது முதல் இரண்டு நிலைகளின் பயனைமட்டுமே தரும். மூன்றாவது நிலைக்கு வரவேண்டும். பெற்ற தகவலை உறுதிப்படுத்துவதே முடிவாகாது. தான் அதுவாக மாறுவதுதான் முடிவு. வீடுகட்ட உரிய அனுமதியை பெற்று விட்டாலே வீடு கட்டியதாகிவிடுமா? வீடு கட்ட அனுமதி பெற்றபின் வீடுகட்டி முடித்தால்தான் அதனுள் குடி புகுந்து வசிக்க முடியும். ஆகவே இப்பிறவியில், முக்திஅடைய, முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் விளைவினை வெல்லவேண்டும். அதனை வேதங்களைப் படிப்பதால் மட்டுமே வெல்ல முடியாது. முக்தி அடையவேண்டும் என்கின்ற வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்து அதற்கான நெறியுடன் வாழ்ந்தால் மட்டுமே நினைப்பது நடக்கும். எனவே கவலை தரக்கூடியது ஒன்றுமில்லை. கவலைப்பட வேண்டாம் என்கிறார் அவ்வையார்.
    புலன்களாகிய பொறியின்(trap) வாயில் அகப்பட்டுக் கொண்டு இன்பதுன்ப சம்சாரக்கடலில் மூழ்கியிருப்பதால் புலன்களிருந்து விடுதலை அடைந்து ஞானம் பெறுவது என்பது அரிதாக உள்ளது சமுதாயத்தில். கருமைய தீயப்பதிவுகளே ஞானம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. நெறி நின்று வாழ்தல் கருமையப்பதிவுகள் தூய்மையடைந்து முக்திக்கு வழிவகுக்கும்.

    அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தவர்களில் மூன்று தரப்பினர்கள் இருப்பர்.

    1) பலர் குரு கிடைத்தும், பிறகு குருவையே மறந்துவிடுபவர்கள். இவர்கள் தற்செயலாகக் குரு கிடைக்கப்பெற்றவர்களாவார்கள். குருவைப்பற்றி பிறர் சொல்லியதாலே குருவிடம் வந்தவர்கள் இவர்கள். அவர்கள் ‘தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ தேடல் என்கின்ற விழைவுப் பதிவு’ கருமையத்தில் பெற்றில்லாதவர்கள். அதனால் தக்க குரு கிடைத்தும் குருகூறும் வழிப்படி நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ ‘தேடல்’ என்கின்ற விழைவுப் பதிவு கருமையத்தில் இருப்பவர்களுக்கு பிறர் சொல்லி குருவிடம் வந்தாலும், அவர்களிலும் பலர் சில நாட்கள் கழித்து குருகூறும் வழியில் நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். இதுவும் கருமையப்பதிவின் பிரதிபலிப்பேயாகும்.

    2) மற்றவர்களில் சிலர் குருவை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், தொடர்ந்தாலும் அறியாமையை நீக்குவதில் வெற்றி பெற முடிவதில்லை. காரணம் அவா்களின் கருமையப்பதிவுகளின் அழுத்தத்தால், தளராவிடாமுயற்சி செய்ய முடிவதில்லை.

    3) ஒரு சிலரே அறியாமையை நீக்குவதில் மிகுந்த உள்ளார்வம் (மனதின் மறுமுனையான உள்ளமே-இறையே ஆர்வம் கொண்டு) கொண்டு வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி அறியாமையை நீக்கி அறிவில் மாற்றம் காண்பவர்கள். அவர்களே குருவை நம்பி, மதித்து ஒழுகுபவர்கள். ஆதலால் அவர்களை, தப்பாமல் குருவின் உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை எய்தச்செய்கின்றது.

    குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்பதால் தக்க குரு கிடைப்பதை நிர்ணயம் செய்வது கருமையப்பதிவுகளே.

    அதுமட்டுமல்லாமல் தன்னிலை உணர்ந்து இறையால் குருவாக்கப்பட்டவரின் குடும்பத்திலேயேகூட அவருடன் பிறந்த உடன் பிறப்புகள் அனைவருக்குமே தன்னிலை உணர்கின்ற பாக்கியமும், புண்ணியமும் கிட்டுவதில்லை. இதெல்லாம் எதனைக் குறிக்கின்றது?

    ஆன்மீக நாட்டம் கொள்வது,
    இறைத் தேடல்,
    ஆன்மீகத்தில் தெளிவு பெற்று உச்ச நிலை அடைந்து, இறையே அவா்களை இறைத்தூதுவரான குருவாக்குவது என்பதெல்லாம்
    அவரவர் கருமையப் பதிவுகளைப் பொருத்துள்ளது.

    ஆக, கருமைய பதிவுகளுக்கு ஏற்ப இன்ப விளைவுகளல்லாது துன்ப விளைவுகளையும் தருவதற்கு மேல்கூறிய நான்கு வழிகள் (channels) காரணமாக அமைவதால், அந்நான்கு வழிகள் வாயிலாக இன்ப விளைவுகளையோ பேரின்ப விளைவுகளையோ தருவதற்கு அந்த வழிகளில் இனிமை காக்கப்படல் வேண்டும்.

    இன்பம் வந்தால் அதனை தக்கவைத்துக் கொண்டு பேரின்பமாக வளர்த்துக் கொள்ளவும், துன்பம் வந்தால் அதனை போக்கி இன்பமாக்கி, மேலும் பேரின்பமாக்கவும் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.

    எனவே நான்கு கருமையப்பாலங்கள் வழியாகவும் இன்பத்தையே பெற்று யோக வாழ்வு வாழத் தகுதியினைப் பெறுவதற்கு யோகம் பயில வேண்டும். யோகம் என்பது என்ன? ‘யோகம்’ என்கின்ற சொல்லை பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமனிதர் வசதியாகவும், அனைத்துச் செல்வச் செழிப்புடனும் இருந்தால் அவரை யோகக்காரகர் என்கிறோம்.
    யோகம் என்பதற்கு இரண்டுவிதமான பொருள் இருக்கின்றது. இரு பொருள் போல் தெரிந்தாலும் அது ஒருபொருளே. காரணம் என்னவென்றால், இரு பொருட்களிலும், இறுதி விளைவாக குறிப்பிடப்படுவது துன்பமற்ற நிலை ஒன்றையே. நல்லசெயல்களின் நல்விளைவுகளே யோகம் எனப்படுகின்றது. இருப்பினும் அந்த யோகம் என்பதற்கான இருபொருட்கள் என்ன?
    1) அதிர்ஷ்டம், good luck. உதாரணம்:–படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பலர் உள்ள நிலையில், படித்தவுடன் நல்ல வேலை கிடைத்தால், அதனை யோகத்துடன் இணைத்து அவனுடைய யோகம் அவனுக்கு படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது என்பார்கள்.

    2) யோகத்திற்கான மற்றொரு பொருள் — மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம், மற்றும் யோகப்பயிற்சிகள் (yoga).
    ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது ஒரு சில ஜாதகங்களைப் பார்த்த உடன் முதலில் சொல்வது ‘இந்த ஜாதகம் யோக ஜாதகம், இந்த ஜாதகருக்கு எல்லா யோகங்களும் உள்ளது’ என்பர். ஜோதிடம் என்பதே கருமையப்பதிவுகளை ஓரளவிற்குக் காட்டும் அட்டவணை தானே? (Chart). அப்படியிருக்கும் போது ‘யோக ஜாதகம்’ என்றாலே நல்லதைக் கொடுக்கும் என்பதால், அந்த நல்லதைக் கொடுக்கும் பதிவுகள் அவரது கருமையத்தில் உள்ளது என்றுதானே அர்த்தம்?!
    யோகம் என்பது உலகியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதையே கொடுக்கும். எனவே யோகம் பயில வேண்டும். யோகத்தின் வழியாக உடல்நலம், மனவளம் பெற்று பிறவிப்பயனை எய்துதல் வேண்டும். வேலை கிடைப்பது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் யோகமாக இருந்தாலும், இவைகளெல்லாம் தற்காலிகமானதே. நிரந்தர யோகம் என்பது பிறந்த நோக்கத்தை அறிதலும், முடிவாக அதனைத் தள்ளிப்போடாமல், அறிந்த பிறவியிலேயே அதனை அடைவதேயாகும். யோகத்தினால் கருமையப் பதிவுகள் தூய்மை அடையும். யோகத்தைப் பற்றி திருவேதாத்திரியம் கூறுவதென்ன? ‘யோகம்’ என்பதற்கு ‘இனிமை காத்தல்’ என்று பொருள். யோகம் நான்கு நெறிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
    1) உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் மனதிற்கும் இனிமை காக்க வேண்டும்.
    2) தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இனிமை காக்க வேண்டும்.
    3) தனக்கும் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஒன்று படுத்துவதில் இனிமைக் காக்க வேண்டும்.
    4) தனக்கும் இயற்கைக்கும்/இறைக்கும் இடையே இனிமை காத்திடல் வேண்டும்.
    கருமையப் பதிவுகளின் நான்கு பாலங்கள் வழியாக இன்ப துன்ப விளைவுகள் வருவதால் துன்ப விளைவுகளைத்தாங்கவும், போக்கவும், இன்ப விளைவுகளை தக்க வைத்துக்கொண்டு பேரின்பவிளைவினை அடையவும் நான்கு முறைகளில் இனிமை காக்க யோகம் பயில வேண்டும். ஒருகாலத்தில் யோகம் பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இப்போது சாதாரண மனிதனும் யோகம் பயிலுகின்றவகையில் யோகக்கலையானது, ‘மனவளக்கலை’ (SKY) என்கின்ற பெயரில் விரைவாக வளர்ந்து வருகின்றது.
    குருவை பூதவுடலில் பார்க்க முடியவில்லையே என்கின்ற ஏக்கம் தேவையில்லை. திருவள்ளுவரை, திருமூலரை, தாயுமானவரை மானசீகமாகவல்லவா குருவாக ஏற்றுக்கொண்டார் நம் குருதேவர் வேதாத்திரி மஹரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் அருளியுள்ள அறநூல்கள் எல்லாம் நம்மிடையே பேசிக் கொண்டிருக்கின்றன. மகரிஷி அவர்கள் அருளியுள்ள அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை பலமுறை வாசித்துப் பயன் பெறவும். பிறவிக்கடலை எவ்வாறு நீந்தமுடியும் என்று மகரிஷி அவர்கள் உறுதி அளித்துள்ளதை நினைவில் கொண்டு செயலாற்றுவதற்கு, மெய்விளக்கம், பிறவிக்கடல் நீந்தலாம் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்.

    மெய்விளக்கம்(02-07-1980)

    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே;
         நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்;
    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில், எல்லை
            உண்டாக்கி, வரையறுத்து வேறுபடுகின்றோம்;                                                                                  

    ஏனெங்கே? எப்போது? எவ்வளவு? எவ்வாறு?
          என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல,                           வானறிவோம்; உயிர் விளங்கும் வரைகடந்து நிற்கும்
          வழிதெரியும்; வளம் பெருவோம்; வாழ்வுநிறை வாகும்.”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மற்றுமொரு திருவேதாத்திரியத்தின் பாடலையும் நினைவு கூர்ந்து மகிழ்வோம்.

    பிறவிக்கடல் நீந்தலாம்(26-10-1994)

    பல ஆயிரம் பிறவி எடுத்தேற்றப் பாவப்
       பதிவுகளை, ஒருபிறவிக் காலத்துள் மாற்றி,                                                              நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
        நல்வாய்ப்பு ஆற்றல்இவை நமக்களித்து, இயற்கை                                               நிலஉலகில் மனிதரிடம் அமைந்துளன, உண்மை;
        நேர்முகமாய் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றிப்
     பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
         பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்.

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்வியலில் யோகமும் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும்.  வாழ்க மனவளக்கலை யோகா. வளர்க மனவளக்கலை யோகா. இத்துடன் இச்சிந்தனை முடிவுற்றது. அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பை எடுத்துக் கொள்வோம். தொடரும்  22-06-2016-புதன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 4/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     
    FFC-198

     15-06-2016-புதன்

    FFC-198-SUB TITLE-15-6-16

    சென்ற அறிவிற்கு விருந்தில் அறத்தை நிலைநாட்டுவதில், இம்மிகூட பிசகாமல், கூர்ந்து கவனித்து உரிய விளைவுகளைத் தருவதால், அத்தகைய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று அறிந்தோம். கூர்தலறம், துகள்கள் உருவானதிலிருந்தே பரிபாலனம் செய்ய ஆரம்பித்து, கருமையப் பாலங்கள் வழியாக மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தந்துகொண்டிருக்கின்றது என்றும் அறிந்தோம். இன்று கருமையத்தின் நான்காவது பாலம் வழியாக தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனிமனிதனுக்கும் இறையருளுக்கும் இணைப்பைக் கொடுப்பதை விரிவாக அறிய இருக்கிறோம்.
    “மாதா, பிதா, குரு தெய்வம்” என்கின்ற ஆன்றோர் மொழியின்படி குருவை அறிமுகப்படுத்தும் வைபவமே மறக்கபட்டுவிட்ட நிலையில், இறை/இயற்கை மீண்டும் அதனை, இரண்டாம் உலகப் பொது மறைநூல் — திருவேதாத்திரியத்தை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழியாக புனருத்தாரணம் (revive) செய்துள்ளது. ஒன்றே பலவாகியது என்கின்ற அத்வைதத்தை வேதங்களிலிருந்து தெளிவாக்கிய ஆதிசங்கரா், குருதரிசனத்தின் பயன் பற்றிக் கூறுவதனை நினைவு கூர்ந்து சிந்தனையைத் தொடங்குவோம்.

    “க்ஷணமிஹ ஸஜ்ஜன ஸங்கதி ரேகா I பவதி பவார்ணவ தரணே நௌகா II”

    —–மோஹமுத்கரம் –ஆதிசங்கரர்.

    பொருள்:– “கணநேரமானாலும்கூட தூயவர்களுடன் கொள்ளும் தொடர்பு வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க உதவுகிறது.”

    ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் எல்லோருமே குருவை அடையும் பாக்கியம் பெறுவதில்லை. அப்படியே குரு கிடைத்தாலும், திருமூலர் கூறும் அறியாமையை நீக்கும் பக்குவர் குருவாக கிடைக்க வேண்டும். இதுவும் அவரவா் கருமையப்பதிவுகளைப் பொருத்திருக்கின்றது.

    கிடைக்கும் குரு பரிபக்குவராக இருக்க வேண்டுமென்று, ‘அபக்குவன்’ என்கின்ற தலைப்பில் திருமூலர் கூறுவதனை இப்போது அறிவோம். ஏன் ‘அபக்குவன்’ என்று அப்பாடலின் தலைப்பிற்கு பெயரிட்டுள்ளார் என்பதனை அறிவோம். ‘பக்குவன்’ என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். ‘அபக்குவன்’ பக்குவன் என்கின்ற சொல்லிற்கான பொருளைத் தெரிந்து கொண்டால் அபக்குவன் என்பதற்கான பொருள் தெரிந்துவிடும். பக்குவம் அடைந்தவன் பக்குவன். பக்குவம் என்றால் தகுதி, முதிர்ச்சி, ஆத்மபரிபாகம். ஆத்மாவை அறிந்தவன் என்று பொருள். பக்குவன் என்றால் ஆத்மாவை அறிந்த பக்குவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன்தான் மற்றொருவரின் ஞானக்கண்ணைத் திறக்க முடியும் என்பதால், குருவினால் எவ்வாறு நான்கு வழிகளில் தெளிவை அடைய முடியும் என்று தனது திருமந்திரம் 139 ல் கூறியுள்ள திருமூலர், அத்தகையத் தெளிவினை உண்டாக்கக் கூடிய குருவைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் திருமந்திரம் 1680 ல், பக்குவமில்லாத குரு கிடைத்தால் என்னவாகும் என்றுகூறி ஆன்ம சாதகனை எச்சரிக்கிறார்.

                            அபக்குவன்

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழி விழுமாறே.                  

                                                 . . . திருமூலர்- திருமந்திரம் 1680

    பொருள்:– ‘குருட்டினை’ என்று திருமூலர் குறிப்பிடுவது ‘அறியாமை’. குரு என்பவா் அறியாமையைப் போக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப் போகமாட்டார்கள் சிலர். அறியாமையை நீக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் செல்வர். இவ்வாறாக அறியாமையில் உள்ளவரும், அறியாமையை நீக்க முடியாதவரும் ஒன்று சேர்வது குருடுக்கு குருடு வழி காட்டுவது போன்றது. விளைவு இருவரும் துன்பக்குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதேயாகும். ஆகவே துன்பக்குழியில் வீழ்வதால், குருட்டினை நீக்கா குரு கிடைப்பதுகூட பாவப்பதிவுகளால் தானே?

    ஆகவே எத்தகைய குரு கிடைப்பார் என்பது கூட அவரவா் எண்ணிய எண்ணங்கள் மற்றும் செய்துள்ள செயல்களின் கருமையப் பதிவுகளைப் பொருத்தது. எண்ணியுள்ள எண்ணங்கள் என்பது ஒருவா்

     இப்பிறவியிலோ அல்லது தனக்கு முந்தைய பாட்டன்-பூட்டன்(பாட்டனின் தந்தை- கொள்ளுத்தாத்தா) வம்சாவளியிலோ யாராவது எண்ணியதாகக்கூட இருக்கலாம்.
     எண்ணியது என்ன?
     இறை உணர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அந்நாட்டத்தால் இறை என்பது என்ன, இறைவனை நம்மாலும் பார்க்க முடியாதா,
     அதற்கென பிரத்யேகப் பிறவி எடுத்து, பிறந்து வரவேண்டுமா, என்கின்ற வினாக்கள் உள்ளத்தை அரித்திருக்க வேண்டும். அல்லது
     ஒரு முறையாவது அக்கேள்வி உள்ளத்தில் எழுந்திருக்க வேண்டும்.
     ஒரு வேளை அவ்வாறு எண்ண நாட்டம் இருந்து, அந்நாட்டம் முந்தைய தலைமுறைகளில் நிறைவேறாமல் தேக்கமுற்று,
     கருமையத் தொடர்பினால், இப்போது நம்கருமையத்திற்கு கொண்டு வரப்பட்டு (carried forward to this birth),
     நிறைவேற்றி வைக்கப்பட்டதே, நம்முள் இறைஉணர்வையும் அறவுணர்வையும் ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களின் தரிசனம்.

    ஆகவே, தீருமூலரை மானசீகக் குருவாகக் கொண்டு, தனது ஞானக்கண் திறக்கப் பெற்ற ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சீடராகியவர்கள் எத்தகைய புண்ணியவான்கள், பாக்கியசாலிகள், அதிர்ஷ்ட சாலிகள் என்பதனை

     நினைந்து, நினைந்து,
     மகிழ்ந்து, மகிழ்ந்து,
     பரவசம் அடைந்து,
     இறையிடம் சரண் அடைந்து, நன்றி செலுத்தி,
     நம்குருமகராஜ் அவர்களைப் போற்றிப் போற்றி,
     அவரையும், அவரது உயா்வையும் எண்ணி எண்ணி மதித்து,
     அவர் கூறும் அறம் செறிந்த அறவுரை—அறிவுரைகளை,
     பூரண மனதோடு ஏற்று (with implicit obedience)நடந்து,
     “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று கனிவோடு உறுதி அளித்துள்ளதை,
     செயலாக்கி, பிறவியின் நோக்கமான ‘அவன் நாம் ஒன்றாக, அறிந்த அறிவின் முழுமையான முக்தி’ யினை அடைவோம்.

    திருமூலர் கூறியுள்ளபடி, அப்படியே அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தாலும், கிடைக்கப் பெற்றவர் அனைவரும் அறியாமை நீங்கப் பெறுகிறார்களா என்பது ஐயமே! இங்கே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் ஏழாவது அத்தியாயமான ‘ஞானவிக்ஞான யோகம்’ மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுவதனைக் கவனிப்போம்.

    மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே I
    யததாமபி ஸித்தானாம் கஸ்சின்மாம் வேத்தி தத்வத: II 7. 3

    “ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான். முயலுகின்ற பெருவாய்ப்புள்ளோர்களுள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.”

    மரத்தில் உருவாகும் ஆயிரக்கணக்கான விதைகளில் பெரும்பகுதியை உயிர்கள் உண்கின்றன. விதைக்கப்பட்டவை, அத்தனையும் முளைப்பதில்லை. தரிசு நிலத்திலோ, பாறையிலோ, விழுந்தவைகள் சரியாக முளைப்பதில்லை. எனவே வளர்வதில்லை. நல்ல விருட்சமாவது ஒன்றிரண்டேதான். அவ்வையார் கூறும் இந்த மானுடப்பிறவி இறைஉணர்வு பெறுவதற்காக அமைந்ததுதான் என்றாலும், அதுதான் வாழ்வின் நோக்கம் என்று அறிந்து கொள்பவர் வெகு சிலரே. பிறகு அதற்கு ஏற்ற சூழ்நிலை முறையான பயிற்சி, தளரா விடாமுயற்சி ஆகியவைகளின் வாயிலாகக் கடைத்தேறுவது என்பது அரிதிலும் அரிதாக உள்ளது. பிறவியின் நோக்கம் இறைஉணர்வு பெறுவது என்பது எவ்வளவுக்கெவ்வளவு உயா்ந்ததோ அதை அடைதலும் அவ்வளவுக்கவ்வளவு துர்லபமாக இருக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

    இத்தருணத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதை நினைவுபடுத்திக் கொள்வோம். காசியில் ஸ்ரீஅன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் எல்லோருக்கும் பிரசாதம் கிடைக்கும். பிரசாதம் கிடைக்காமல் வெளியில் வரமுடியாது. என்ன வித்தியாசம் என்றால் சிலருக்கு பிரசாதம் உடனே கிடைத்துவிடும். சிலர் காத்திருந்து பெற வேண்டும். நெடு நேரம் காத்திருந்தும் பெறவேண்டியதாகவும் இருக்கும். கோயிலினுள் நுழைந்தவர்கள் யாருக்காவது பிரசாதம் இல்லை என்பதே கிடையாது. அதுபோல் மனிதப் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் மனிதப்பிறப்பிற்கான பிரசாதமான முக்தி என்பது உண்டு என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். சிலர் இப்பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். சிலர் இன்னும் இரண்டு, மூன்று பிறவிகளில் முக்தியடைகின்றனர். வேறு சிலர் கணக்கற்ற பிறவிகள் எடுத்து, பிறகு முக்தியடைபவர்களாக உள்ளனர். ஆனாலும் எல்லோருக்கும் முக்தி என்பது முன்னது, பின்னதாக இருக்கலாம் என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
    ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இளையவரான நம் குருதேவர் கூறுவதனைக் கவனிப்போம்.

    மெய்விளக்கம்(02-07-1980)
    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே;
      நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்;
    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில், எல்லை
      உண்டாக்கி, வரையறுத்து வேறுபடு கின்றோம்;
    ஏனெங்கே? எப்போது? எவ்வளவு? எவ்வாறு?
      என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல,
    வானறிவோம்; உயிர் விளங்கும் வரைகடந்து நிற்கும்
      வழிதெரியும்; வளம் பெருவோம்; வாழ்வுநிறை வாகும்.”

                                                       ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மற்றுமொரு திருவேதாத்திரியத்தின் பாடலையும் நினைவு கூர்ந்து மகிழ்வோம்.

    பிறவிக்கடல் நீந்தலாம்(26-10-1994)

    பல ஆயிரம் பிறவி எடுத்தேற்றப் பாவப்
      பதிவுகளை, ஒருபிறவிக் காலத்துள் மாற்றி,
    நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
      நல்வாய்ப்பு ஆற்றல்இவை நமக்களித்து, இயற்கை
    நிலஉலகில் மனிதரிடம் அமைந்துளன, உண்மை;
      நேர்முகமாய் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றிப்
    பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
      பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்.

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விளக்கம்: பல ஆயிரம் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளப் பாவப்பதிவுகளை எப்படி ஒரு பிறவி காலத்தில் மாற்ற முடியும் என்கின்ற ஐயம் எழலாம். நம் குருதேவரின் வாக்கில் முதலில் நம்பிக்கை வைத்தாலே போதும். இறையுணர்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்த அடுத்த க்ஷணமே ஒருவன் புனர்ஜென்மம் எடுக்கிறான். மனிதனாகித் தெய்வமாகி உய்ய, நிலஉலகில் மனிதரிடம் நல்வாய்ப்பு மற்றும் ஆற்றலை இயற்கை நமக்களித்துள்ளது என்கின்ற வரிகள் சத்தியம் என்பதனை அனுபவத்தில் உணர்ந்து விடுகிறான். சிந்தனை மலர்கின்றது. எண்ணம் ஆராய்ச்சியிலேயே இருக்கிறது, தனக்கோ பிறருக்கோ நன்மையே தரும் எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது. வைராக்கியம் நிலைக்கிறது. அறத்தின் பாதையிலே ஒத்துதவி வாழும்முறையில் வாழ்வாங்கு வாழ்கிறான்.

    இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். இதன் தொடர்ச்சியாக, அடுத்த விருந்தில், முக்திஅடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தும் சீடர்களின் முன்னேற்றம் மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிவோம். தொடரும்.—– 19-06-2016 ஞாயிறு.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     
    அ.வி. 197

    12-06-2016-ஞாயிறு

    FFC-197-12-6-16-இறைநீதியின்-sub title

    ‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி அவர்கள் என்றும், கூர்தலற நெடிய – முடிவில்லாத் தொடர் பயணத்தின் மூன்றாவது பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு எவ்வாறு இறையால்/இயற்கையால் கருமையப் பாலங்கள் வழியாக வழங்கப்படுகின்றது என்பதனை அறிய இருக்கிறோம்.
    செயலுக்கு ஏற்ற விளைவைத் தருவது என்பதால், கூர்தலறம் என்பது பெரும்பாலும் மனிதனுடைய செயலுக்கு விளைவினைத் தருவது என்கின்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விளங்கிக் கொள்ளப்பட்டுவருகின்றது.
    இறையின் மூன்று திறன்களில்(capabilities) ஒன்றாக இருக்கும் கூர்தலறம்,
    தன்னுடைய பரிபாலனத்தை,
    மனிதன் தோன்றிய பிறகுதானா,
    அவனுடைய செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருவதில் மட்டுமா,
    ஆரம்பித்திருக்கும்? அப்படி இருக்க முடியுமா?!

    இறைமுழுவதுமாக வெளியாக இருந்தபோது, அதாவது முதல் துகள்கூட உருவாவதற்கு முன்னர், அதற்கு ஆட்சியோ, ஆளுகையோ தேவையில்லை. ஆனால் எப்போது முதல் துகள் உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே கூர்தலறம் செயலுக்கு வந்து விட்டது. ஏனெனில், இறைவெளியின் முதல் துகள் என்பது இறைவெளியின் முதல் செயலுக்கான விளைவு. இறைவெளியின் தன்னிறுக்கச் செயலால் உருவாகிய துகள்களை விளைவாகத்தானே கருதமுடியும்?
    நொறுங்கியது மட்டுமல்ல நொறுங்கியவுடன் சுழலவும் ஆரம்பித்துவிட்டது. சுழல்வதும் விளைவுதான். சுழற்சி என்கின்ற விளைவிற்கு தொடர் விளைவும் ஏற்பட்டுள்ளது. அது எது?
    தன்னுடைய செயலாகிய நொறுங்குதலால் துகளாகி, துகள் சுழன்றதன் விளைவாக விரிவலை தோன்றியது; அதன் தொடர் விளைவு தான் காந்தம். மேலும் பஞ்சபூதங்களாகி, காந்தத்தின் திணிவால், அழுத்தமாக, ஒலி, ஒளியாக, சுவையாக, மணமாக தன்மாற்ற தொடர் விளைவுகளாகியது. இந்த காந்த தன்மாற்ற விளைவுகளை உணா்வதற்காக ஓரறிவு உயிரினங்களிலிருந்து ஐயறிவு வரை சீவஇனங்களாகத் தன்மாற்றங்களாகியது. இப்போது நாம் சிந்திப்பதுபோல் தானே தன்னையே ரசிக்க, சிந்திக்க, ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்துள்ளது. இந்த தன்மாற்ற நிகழ்ச்சியில், சடப்பொருட்களாகியதும், உயிரினங்களாகியதும், இறையின் இயக்கம் தானே. எனவே, எவ்வாறு மனிதன், இப்போது தான் தயாரிக்கும் இயந்திரத்தில் அதன் இயக்கம் அதற்கான ஒழுங்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றானோ, அதுபோல்தான் இறையின் ஒவ்வொரு தன்மாற்ற நிலையிலும் ஒழுங்கு அவசியமாக இருக்கின்றது. அது இயல்பாக பேரறிவாகிய இறையில் இல்லை என்றால் தன்மாற்றமே வெற்றி அடைந்திருக்க முடியாது.

    இயக்கம் என்றாலே அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். இயக்கத்தில் ஒழுங்கு இருந்தால்தான் அந்தந்த இயக்கத்திற்குரிய விளைவு வரமுடியும். ஆகவே இயக்க ஒழுங்கே அறமாகும்.வ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் அறத்தில், கூர்ந்து கவனித்து நுட்பமாகவும், நிச்சயமாகவும், இம்மிகூட பிசகாமல் உரிய விளைவுகளைத் தரக்கூடிய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    தொடர் விளைவாகிய காந்தத்தை மலரச் செய்யக்கூடியத் திறமையைத்தான் மகரிஷி அவர்கள் இறைநிலையின் கூர்தலறம் என்கின்ற புனிதச்சொல்லால் அழைக்கிறார். தானே நொறுங்கியது. அது அதனுடைய செயல். நொறுங்கிய விளைவிக்குத் தொடர் விளைவாக காந்தமாக மலர்ந்ததும் இறையேதான். ஒன்றேதான் பலவாகியது என்பதால் செயல் புரிந்ததும், விளைவாக வருபவனும் அவனே என்றாகத்தானே இருக்க முடியும்! ஆகவே இறையின் கூர்தலறம் என்பது முதல் துகள் ஆனதிலிருந்தே ஆரம்பித்து விடுகின்றது. அது இன்றும் மனிதனுடைய 720 கோடி உலக மக்கள் வாழ்விலும் இடைவிடாது நொடிக்கு நொடி ஆளுகை புரிந்து கொண்டிருக்கின்றது. எப்போதும் மனிதர்களின் வாழ்வில் செயல்புரிந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. அதாவது மனிதனுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவினைத் தந்து கொண்டிருக்கின்றது.
    ஆகவே கூர்தலறம் முதல் துகள் உருவானதிலிருந்து விளைவைக் கொடுக்க ஆரம்பித்து, இந்த நொடி வரை செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இனிமேலும், எப்போதும் தவறாது செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தகைய இறைவெளிக்கே உள்ள திறமையை ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லை அறிமுகப்படுத்தி அழைக்கிறார் மகரிஷி அவர்கள். முதல் துகள் நொறுங்கியதிலிருந்து கூர்தலறத்தின் நெடிய பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

    1) முதலாவது, முதல் துகள் உருவானதிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாகியது வரை.

    2) இரண்டாவது, ஓரறிவு சீவனிலிருந்து ஐயறிவு சீவன்கள் தோன்றியது வரை.

    3) மூன்றாவது, ஆறறிவு சீவனாகிய ஆதிமனிதனிலிருந்து இப்போது வரை.

    இப்போது நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது முன்றாவது பகுதியாகும். ஏனெனில் மற்ற பகுதிகளைவிட மூன்றாவது பகுதி மனிதனோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் தன்னைப்பற்றி அறிய மனிதனுக்கு ஆவல் அதிகம் இருக்கும் என்பதாலும், மேலும் மனிதகுலத்தில் மட்டும்தான், மனிதனால் ஏற்படுத்தப்படும் சிக்கல்கள் பெருகி தனிமனிதனிலிருந்து சமுதாயம் வரை துன்பக்கடலில் மூழ்கி அல்லறுவதால், அதற்கு தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் இந்த மூன்றாம் பகுதியை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற இரண்டு பகுதிகளையும் மனிதன் அறிய வேண்டியதுதான். அதனை வேறொரு சமயத்தில் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். இறைநீதிதான் கூர்தலறம், செயல்விளைவுத்தத்துவம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த இறைநீதி எவ்வாறு பரிபாலனம் செய்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம். அதற்கு பரிபாலனம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

     பரிபாலனம் என்றால் என்ன?

    பரிபாலனம் என்றால் ‘நிர்வாகம்’, ‘ஆட்சி’ ‘ஆளுகை’ ‘காவல்’ ‘பாதுகாப்பு’(protect)என்று பொருள். உதாரணத்திற்கு: — அரசர் ராஜ்யத்தை நீதி தவறாமல் பரிபாலனம் செய்தார். ஆட்சி பரிபாலனம் என்றால் பாதுகாப்புடன் செய்தல் என்று பொருள். நீதிபரிபாலனம் என்றால் நீதிதவறாமல் ஆட்சிசெய்தல் என்று பொருள். நீதிதவறாமல் ஆட்சி செய்தாலே அது பாதுகாப்பான ஆட்சியாகத்தானே இருக்கும். ‘ராஜ்யபரிபாலனம்’ என்றால் ‘to reign well’ என்று பொருள். ‘இறையின் நீதிபரிபாலனம்’ என்றால் ‘செயலுக்குரிய விளைவை’த் தரக்கூடிய நீதி, நோ்மை உடைய செங்கோலாட்சி இறையால் நடத்தப்படுகின்றது என்று பொருள்.
    இதுவரை தலைப்பிலுள்ள சொற்களான, இறை, நீதி – கூர்தலறம், பரிபாலனம் ஆகியவற்றிற்கான பொருட்களை அறிந்து கொண்டோம். கருமையம் என்பதனை ஏற்கனவே அறிவோம். கருமையம் என்பது மனிதனின் பெருநிதி. மனிதனின் செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதி மன்றம். வங்கியில்(bank) பணம் செலுத்தும் போதும், எடுக்கும் போதும் குறிக்கப்படும் Pass Book ஐப் போன்றது கருமையம். வங்கியில் ஒருவர் செலுத்தும் பணத்தை செலுத்துபவரின் கணக்குப்புத்தகத்தில்(Pass Book) குறிப்பதோடு மட்டுமல்லாது, வங்கியின் பதிவேட்டிலும் (ledger) குறிக்கப்படுவதுபோல் வான்காந்தத்திலும் ஒரு தனிமனிதனின் செயல்பதிவுகள் கருமையத்தில் பதிவாவது போல் பதிவாகின்றது. கருமையப்பதிவு பற்றியும், வான்காந்தப் பதிவுபற்றியும் எளிதில் புரிந்து கொள்வதற்காக இந்த உதாரணம் எடுத்துக் கொள்ளப்பட்டது, இதற்கு மேலும் சிந்தனையில் ஆழ்ந்து சென்று, இவ்விரண்டு மறைபொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாலம் என்றால் என்ன?

    இப்போது ‘பாலங்கள்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். பாலம் என்றால்  இரு பகுதிகளை இணைப்பதற்கானப் பாதை(bridge). செயலுக்குரிய விளைவைத் தருவது இறைநீதி – செயல் விளைவு நீதி. மனிதன் செய்யும் செயல்களுக்குரிய விளைவு இன்பமாகவும் இருக்கலாம். அல்லது துன்பமாகவும் இருக்கலாம். இன்பம், துன்பம் என்பது செயலின் தன்மையைப் பொருத்திருக்கும். செயலுக்கான விளைவு கருமையப்பாலங்களின் வழியாகத்தான் வருகின்றன. எவ்வாறெல்லாம் இறை நீதி பரிபாலனம் செய்கின்றதை அறிய கருமையப் பாலங்கள் பற்றிய சிந்தனை உதவியாக இருக்கும். மனிதனின் செயலுக்குரிய விளைவுகள் ஒன்று இன்பமாக இருக்க வேண்டும். அல்லது துன்பமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கருமையப் பாலங்கள் வழியாகத்தான் (channels) மனிதனை வந்தடைய வேண்டும். கருமையம் நான்கு வகையிலே, மனிதனின் செயல்களையும் அதற்கான விளைவுகளைத் தருவதில் மனிதனை இணைக்கின்றது. அந்த கருமையப் பாலங்கள் என்னென்ன?
    1) உடலுக்கும் – மனதிற்கும் இடையே உறவாக ( ஒத்த உறவு – co-ordination)
    2) தனிமனிதனுக்கும் – சமுதாயத்திற்கும் இடையே நட்பாக (நட்புநலம்)
    3) மனிதனுக்கும் – பூமி முதலான நவகோள்களுக்கும் இடையே இனிமையாக(இனிமை காத்தல்)
    4) மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் இடையே அருட்பாலமாக ( அருளைப் பெறுதல்)
    இவ்வாறாக இணைப்புகளாக, பாலங்களாக அமைந்து மூன்று மறைபொருட்களான, இறை, உயிர், மனம் ஆகியவற்றின் இருப்பிடமாக (Store House) அமைந்ததுதான் கருமையம். இருந்தாலும் மனிதனுள் மற்ற உறுப்புகள் போல் அல்லாமல் கருமையம் மறைந்தே இருப்பதால், இதனை மறைபொருள் என்றும், அதுவும் மகாமறைபொருள் என்றும் கூறலாம். ஏனென்றால் அது ஒரு தெய்வீக நீதிமன்றமல்லவா?
    இந்த நான்கு பாலங்கள் வழியாகத்தான் மனிதனுடைய செயல்களுக்குரிய விளைவுகளான இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருகின்றது.

    செயலின் விளைவு துன்பமாக இருந்தால் அச்செயல் பாவம் என்றும், இன்பமாக இருந்தால் அச்செயல் புண்ணியம் என்றும் கூறுகிறோம். பாவப்பதிவுகளின் சின்னம் உடலில் நோய், உள்ளத்தில் களங்கம். உடலைப் பேணிக்காக்காமல் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ உடலை இயக்கினால் வருவது துன்பமாகிய நோய். உதாரணம் — அதிக உணவு துன்பமாகிய அஜீரணத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் களங்கம். களங்கம் என்றால் அவப்பெயர்; ஒழுக்க நடத்தையில் கெட்டப் பெயர். உடலுக்கும் மனதிற்கும் இடையே ஒத்தஉறவு இருக்க வேண்டும். நல்வாழ்விற்கு உடலுக்கும் மனதிற்கும் இணக்கம் வேண்டும்.

    தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே இனிமை காக்க வேண்டும். மனிதன் தனித்து வாழ்வதில்லை. சமுதாயத்தில் இருந்துகொண்டு, சோ்ந்துதான் வாழ்கிறான். அப்போது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். வாழ்க்கை வள உயர்வுப் படிகளில் ஒன்றான நட்பு நலம் அவசியம். நட்புநலம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகின்றது. காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே. நட்புநலம் இல்லை எனில் பகை, வெறுப்பு, பிணக்கு ஆகியவை ஏற்பட்டு, அவற்றின் விளைவுகளாகத் துன்பங்கள் உண்டாகும். கருமையப் பதிவுகளுக்கு ஏற்பதான் நட்புநலம் இருக்கும்.

    மனிதனுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு கோள்களிலிருந்தும் வரும் காந்த அலைகள் மனிதனை வந்தடையும் போது சில மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகின்றது. நல்ல கருமையப்பதிவுகள் இருப்பின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இன்பத்தையும், தீய கருமையப்பதிவுகள் இருப்பின் துன்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறாக மூன்றாவது வழியாக கருமையப்பதிவுகளுக்கு ஏற்ப துன்பமோ அல்லது இன்பமோ வருகின்றன.

    மேற்கூறிய மூன்றின் வழியாக துன்பத்தையோ அல்லது இன்பத்தையோ விளைவுகளாக தருவதோடு மட்டுமல்லாது மனித வாழ்வு சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அவசியமான இறையருளைத் தருவதற்கும் நான்காவது இணைப்பை பயன்படுத்திக் கொள்கின்றது கருமையம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப இறையருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தகுந்த குருவை தரிசிக்க வைப்பதுகூட கருமையப்பதிவுகளே. அதனால்தான் குருவை தரிசிப்பதுகூட பூர்வபுண்ணியத்தால்தான் என்பர் பெரியவர்கள்.

    பூர்வபுண்ணியம் திடீரென்று எங்கிருந்து வருகின்றது?

    கருமையத்திலிருந்து வருகின்றது. ஏற்கனவே செய்துள்ள நற்காரியங்கள் ஒவ்வொன்றும் கருமயத்தில் பதிந்துள்ளன.  நற்காரியங்களில் சிலவற்றிற்கு பயன் உடனேவும் வரலாம். அல்லது சில நேரங்களில் நற்காரியங்கள் செய்த அன்றே, விளைவுகள் உடனே வராமல், ஏற்கனவே பதிந்துள்ள கருமைய–நற்பதிவுகள் பின்னர், உரிய நேரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.  அப்போது இப்போது வரும் நல்விளைவை ஏற்கனவே செய்துள்ள நற்செயல்களோடு இணைத்துப்பார்க்க முடியாமலும் இருக்கலாம். காரணம் இப்பிறவியில் செய்துள்ளதாக அந்த நற்செயல்கள் இருந்தாலும் அவை மனிதனின் ஞாபகத்தில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அல்லது இப்பிறவியில் அந்நல் வினைகள் செய்யாதிருந்து நம்முடைய முன்னோர்கள் செய்திருந்து கருமையத் தொடர்பாக நம்மிடம் வந்து, விளைவுகள் இப்போது நம் வழியாக வரலாம். இந்த நேரத்தில்தான் நல்விளைவுகள் வரும்போது ‘பூர்வபுண்ணியத்தால் வந்தது’ எனப்படுகின்றது.

    அடுத்த விருந்தில் (15-06-2016-புதன்) குருதரிசனத்தையும், அதன் பின்னர் சீடனிடம் ஏற்படும் மாற்ற விளைவுகளையும், முன்னேற்றங்களையும், கருமையம் தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனது நான்காவது பாலத்தின் வழியாக நிறைவேற்றுவது பற்றி அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading