இன்றைய விருந்து

  • 65 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

     

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 65 (4/?)

     

    15-03-2015 – ஞாயிறு

    சென்ற அறிவிற்கு விருந்தில் அகமே மெய்ப்பொருள் என்று உறுதிப் படுத்துவதற்கு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாவைப் பார்த்தோம். இப்போது மெய்ப்பொருள்தான் அறிவு என்று உறுதிப் படுத்த, உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாக்களைக் கவனிப்போம்.

    அதிகாரம் – மெய்உணர்தல்

    “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு” …குறள் எண்.355
    அதிகாரம் – அறிவு உடைமை
    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.” … குறள் எண். 423

    அறிவைப்பற்றிக் கூறும் இரண்டு குறட்பாக்களின்(குறள் எண். 355. 423) வழியாக அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றலுக்குள் நுழைவோம். இரண்டு குறட்பாக்களுமே அறிவிற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. மேலும், ‘அறிய வேண்டியதை அறிந்தால்தான் அது அறிவு’ என்கின்ற உண்மையை, வேதாத்திரியம் உறுதியுடன் தெளிவுபடுத்துவதற்குக் காரணமாக இருந்தது. திருவள்ளுவர் இயற்றிய இவ்விரண்டு குறட்பாக்களில் படர்ந்துள்ள அவரது அறிவாற்றல், அறிவு எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

    அடுத்ததாக மெய்ப்பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்வதால் துன்பம்தான் ஏற்படும் என்று கூறும் குறட்பாவைக் கவனிப்போம்.

    அதிகாரம் – மெய்உணர்தல்

    பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
    மருளான்ஆம் மாணாப் பிறப்பு. … குறள் எண். 351

    வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் ஒன்று ‘பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை’ என்கின்றக் கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பால், வேதாந்தத்தில் கூறப்பட்டு வந்த “இவ்வுலகம் மாயை, கானல் நீரைப் போன்றது, இவ்வுலகம் கனவு போன்றது, கனவு எவ்வாறு நிஜமில்லையோ, அதுபோல் இவ்வுலகம் பொய்யானது” என்று பாமரனுக்குப் புரியாத புதிராக, நம்பமுடியாமல் இருந்து வந்த, ஆனால் இறையுணர்வு பெறுவதற்குத் தடையாக இருந்து வந்த ‘சரியானப்புரிதல் இல்லாத நிலையை’ நீக்கி, வேதாந்தக் கூற்றிற்குச் சரியான பார்வையைக் கொடுத்து, புரியவைத்து, ஆன்மீகத்தில் இருந்து வந்த அச்சத்தை நீக்குவதற்கு, 351 வது குறட்பாவில் உள்ள அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றல், 1911 க்குப் பிறகு உதவியாக இருந்திருக்கின்றது.

    இந்த நான்கு குறட்பாக்களிலுள்ள அறிவாற்றல் மட்டுமே மகரிஷி அவர்களின் தெளிவிற்கு தெளிவு சேர்த்ததாகக் கொள்ள முடியாது. ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார் மகரிஷி அவர்கள். திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். ஆனால் எவ்வாறு ‘பொருள், மெய்ப்பொருள்’ என்று இரண்டு உள்ளதோ அதுபோல் திருக்குறளுக்கும் ‘பொருள், உட்பொருள்’ என இரண்டு தேவையிருப்பதால், மகரிஷி அவர்கள் உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். ‘உட்பொருள்’ என்றால் வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள் என்று பொருள். ஆழ்ந்து உள்ளே சென்று பொருள் அறியப்படுவதால் அது உட்பொருள் எனப்படுகின்றது.

    அந்த ஐம்பது குறட்பாக்களுக்கும் மேலோட்டமாக இல்லாமல், திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால். அக்குறட்பாக்களுக்கு நேரிடையாக வாய் மொழியாக என்ன விளக்கம் கூறியிருப்பாரோ, சாக்ஷாத் அதனையே மகரிஷி அவர்கள் கூறியிருப்பதால் அதனை ‘உட்பொருள் விளக்கம்’ என்கிறார். அவர் கூறிய விளக்கம் அறிவுப்பூர்வமாக, ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது. ஆகவே திருவள்ளுவரின் அறிவாற்றல் மகரிஷி அவர்களுக்கு, உறுதுணையாக இருந்ததால், திருவள்ளுவரை குருவணக்கப் பாடலில் இரண்டாவதாக நினைவு கூர்கிறார்.

    அடுத்ததாக திருமந்திரம் அருளிய திருமூலரை வணங்குவோம். குருவணக்கப் பாடலில் “அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார் அறிஞர் திருமூலர்” என்று கூறி திருமூலரை வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.
    அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டால் மட்டும் போதுமா. மருத்துவப் படிப்பில் வெறும் கருத்தியல் பாடங்களை மட்டுமே படித்தால் போதுமா? உதாரணத்திற்கு, மருத்துவராக இருக்கும் மாணவர், இதயத்தை, படத்தின் (SKETCH) மூலமாகவோ அல்லது மாதிரி வடிவத்தின் (MODEL) மூலமாகவோ அறிந்து கொண்டால் மட்டுமே போதுமா? நேரிடையாக இதயத்தை பார்க்க வேண்டாமா? அதன் இயக்கத்தை அறிய வேண்டும். படித்ததை செய்முறை பயிற்சியின் வாயிலாக உறுதிபடுத்தி, அப்பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அதுபோல் ‘அறிவே தெய்வம்’ என்று கருத்தியலாக அறிந்து விட்டவர், அறிவாகிய தெய்வத்தைக் கொண்டிருப்பதால், அன்றிலிருந்தே அவர் தெய்வப் பண்பு நிலைக்கு உயர்ந்து விட முடியுமா? முடியும் என்றால் ‘அறிவே தெய்வம்’ என்று அறியாததற்கு முன்பிருந்தே அவர் தெய்வப்பண்பு நிலையில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும். ஆகவே அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டாலும், அப்பயனை நடைமுறையில் அனுபவிக்க செய்முறைப் பயிற்சியில் அதனை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ‘அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு’ என்கின்ற ஆன்றோர் மொழி செயலுக்கு வரும். இதுதான் மனிதகுலத்திற்குத் தேவையான ஒன்று.

    பேரறிவாக இருந்ததே உயிர்களாகி, கடைசியாக மனித அறிவாக வந்திருப்பதை அறிந்து கொண்டாலும், அறிந்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான, மனிதனை பண்புள்ளவனாக்க, அறிவை அறிவதற்கான செய்முறை–வழிமுறைகள் இருக்க வேண்டும்.

    கல்வித் தேர்வில், அப்பாடத்திட்டத்தில் மாணவர் என்ன தெரிந்து வைத்திருக்கிறாரோ அதனை மட்டும் கருத்தில் கொண்டு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. அங்கே மாணவரின் பண்பையோ ஒழுக்கத்தையோ கணக்கில் எடுத்துக் கொண்டு அப்பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.

    மனவளக்கலையை ஒரு சாதனை மார்க்கமாக்கி, அதற்கான உளப்பயிற்சி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த முறைகள்தான் பல தவமுறைகளும், தற்சோதனையுமாகும். அதற்கான வழிகளைச் சொன்னவர் அறிஞர் திருமூலர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அறிஞர் திருமூலர், தான் இயற்றியுள்ள மூன்றாம் தந்திரத்தில் யோகத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இப்பாடல்களிலுள்ள அறிஞர் திருமூலரின் அறிவாற்றல், மகரிஷி அவர்கள் குண்டலினி யோகத்தை எளிய முறையில் வடிவமைக்க உதவியாக இருந்துள்ளதை நன்றியுடன், நினைந்து வணங்கி, அவரது அறிவாற்றலை குருவணக்கத்தின் போது பிரார்த்திக்கச் (INVOKE) சொல்லியிருக்கிறார்.

    அடுத்ததாக மகரிஷி அவர்கள் குருவணக்கப்பாடலில் நான்காவது அறிஞராக நினைவு கூர்வது அருட்பிரகாச வள்ளலார் அவர்கள். இது வரை கூறிய மூன்று அறிஞர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு நேரிடையாகவோ, அதாவது, பூதஉடல் இருக்கும் போதோ, அல்லது பூதஉடலை உதிர்த்த பிறகு ஆன்மத் தொடர்பாகவோ உதவி செய்யவில்லை. அவர்கள் அருளியுள்ள பாடலில் படர்ந்துள்ள அறிவாற்றலே உதவியாக இருந்திருக்கின்றன. அதற்காகத்தானே இயற்கை, அருளாளர்களை, அருட்பாக்களை இயற்றச் செய்கின்றது. ஆனால் இவ்விரண்டிற்கும் மாறாக உள்ளது அருட்பிரகாச வள்ளலார் மகரிஷி அவர்களுக்கு உதவியது.

    அருட்பிரகாச வள்ளலார் பூத உடலை உதிர்த்த பிறகு, எண்பது வருடங்கள் சென்ற பிறகு, நேரிடையாக மகரிஷி அவர்களின் பூதஉடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார். 30-01-1874 அன்று வள்ளலார் அவர்கள் அருட் பெருஞ்ஜோதியானார். இது நடந்து (1953-1874=79) சுமார் எண்பது ஆண்டுகள் கழித்து மகரிஷி அவர்களின் பூத உடலுக்குள், மகரிஷி அவா்களின் அனுமதியுடனும், வள்ளலார் விரும்பியும் பிரவேசம் செய்துள்ளார். வள்ளலார் பத்து ஆண்டுகள் தன்னிடம் வசித்து(இருந்ததாக) வந்தார் என மகரிஷி அவர்களே கூறியுள்ளார். இந்த நிகழ்வு நடந்ததைக் கூர்ந்து கவனித்தால் வேறு பலவற்றையும் அறியலாம். மகரிஷி அவர்கள் 1953 ற்கு முன்னரே, அவரது 35 வயதிற்குள், அதாவது கி.பி. 1946 க்குள் (1911+35=1946) இறை உணர்வு பெற்று விட்டார் என அறிய முடிகின்றது.

    ஆகவே வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகு தான்  அவர் உடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார்.  ஏன் மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெறுவதற்கு  முன்னர் வள்ளலார் அவர்கள், மகரிஷியின் பூதஉடலில் பிரவேசம் செய்யவில்லை என வினா எழலாம்.

    தொடரும் …18-03-2015

     

    Loading

  • 64-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 64 (3/?)

    11-03-2015 — புதன்

           கடந்த அறிவிற்கு விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் இயற்றிய குருவணக்கப்பாடலில், தாயுமான சுவாமிகளை, நினைவுகூர்ந்தது பற்றி ஆராய்ந்தோம். முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)’ பங்கு பெரும் விளையாட்டு வீரர்களைப் போன்றவர்கள் என்று பார்த்தோம். அவர்களை ஏன் ஞானவீரர்கள் என்று அழைக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.

    விளையாட்டில் தன்னுடைய திறமைகளைக் காட்டுபவர்களை விளையாட்டு வீரர் என்று அழைக்கிறோம். எல்லோருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் எல்லோராலும் விளையாட்டில் திறமை காட்டமுடிவதில்லை. விளையாட்டில் திறமை காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ஆர்வமும் பயிற்சியும் அவசியம். அது போல் ஞானம் அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எளிதானதுதான். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல், ஞானம் என்கின்ற வைர நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன.
    சாதாரண நாணயத்தின் இருபக்கத்தை தலையென்றும், பூ என்றும் (HEAD, TAIL) சொல்வது போல, ஞானம் என்கின்ற வைர நாணயத்தின் ஒரு பக்கம் ‘ஞானம் அடையமுடியும், அது எளிது’, என்பதும், மற்றொரு பக்கம் ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்பதுமாகும்.

    சாதாரண நாணயத்தின் ஒரு பக்கமான ‘பூ-TAIL’ பக்கத்தை மட்டும் பார்த்துக் கொண்டு, ‘தலை-HEAD’ பக்கம் தெரியவில்லையே என்றால் எப்படி? அந்த நாணயத்தை ஒரு நொடியில் திருப்பிப்பார்த்தால் ‘தலை-HEAD’ தெரியும். REALISATION IS SIMPLE. BUT AT THE SAME TIME IT IS DIFFICULT. ஞானிகள் இவற்றிற்கு விதி விலக்கு. ஏனெனில் அவர்கள் பிறவியின் நோக்கத்தை அறிந்தவர்கள். அதாவது ஞானிகள் அனைவரும் வைரநாணயத்தின் ‘ஞானம் அடைவது, முடியும், எளிது’ என்கின்ற பக்கத்தைப் பார்த்தவர்கள். இது, அவர்களின் மாதா, பிதா கொடுத்த கருமையச்சொத்தால் நடக்கின்றது. மற்றவர்களோ வைர நாணயத்தின் மற்றொரு பக்கமான ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்கின்ற பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    சாதாரண மனிதனைப் போன்றில்லாமல், தெய்வீகத்தன்மைகளில் முக்கியமானதான, தளரா விடாமுயற்சியினைக் கொண்டு (தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். — குறள் எண் 619) சலிப்பில்லாமல், விளக்கத்திற்கு மேல் விளக்கம் பெற்று, புலன்களுக்கு சமாதானம் கூறி, மனதை திருப்திப் படுத்தி, மாயை விரித்துள்ள புலன்மயக்க வலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்து, மாயவலைக்கு வெளியே வந்து விடுதலையாகி, பயம் நீங்கி, மீண்டும் தூயவெளிக்குள்ளே தனது பூர்வீக வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அவர்கள். அறிவை அறிந்த தெளிவினை அடைந்தவர்கள். ஞானம் அடைவதில் தங்களது திறமைகளைக் காட்டியவர்கள்.

    உலகியல் வாழ்க்கை மட்டுமேதான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டு, ஆன்ம நலனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில், உலகியல் வாழ்க்கையை, ஆன்மீக நலனுக்காகத் தியாகத்துடன் அர்ப்பணித்தவர்கள். அவ்வாறு அவர்கள் வாழாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு வழி காட்டும் அரிய அறநூல்கள் கிடைத்திருக்காது. உதாரணத்திற்கு நம்முடைய மகரிஷி அவர்கள். பகல் முழுவதும் உழைப்பு. இரவு நேரங்களில் சிந்தனை; ஆராய்ச்சி செய்வது. சிந்தனை திரண்டு வரும்போது, படுக்கையிலிருந்து எழுந்து, மண்ணெண்னை விளக்கின் ஒளியில் அதனை எழுதி, அவற்றை நூல்களாக்குவது. எழுதி விட்டு மீண்டும் உறங்குவதற்குச் செல்வது. ஆனால் உறங்க முடியாமல் தவிப்பது, எழுதிய எழுத்துக்கள் அவரிடம் வந்து பேசுவது, மீண்டும் எழுந்து எழுதியதை வாசிப்பதில் இன்புறுவது…. இப்படி பல இரவு நேரங்களைக் கழித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ‘வீரர்’ என்கின்ற சொல்லின் இலக்கணத்திற்குள் வரவில்லையா? எனவே ஞானிகளும் வீரர்களே. அவர்கள் ஞான வீரர்கள்.

    தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு குழுவின் வெற்றி, அந்தக் குழுவில் பங்கு பெறும் எல்லா (நான்கு என்று வைத்துக்கொள்வோம்) வீரர்களின் கூட்டு முயற்சியே. வெற்றி பெற்ற குழுவிலுள்ள அனைவருக்குமே பரிசு வழங்கப்படுகின்றது. அது போன்று தான் இப்போது ஒரு ஞானி அவதரித்திருக்கிறார் என்றால் (உதாரணத்திற்கு வேதாத்திரி மகரிஷி), அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வந்தவர்தான் இப்போது வந்தவரும். இன்னும் பலர் வர இருக்கின்றனர். அவர்களின் வருகை என்பது சமுதாயத்தின் தேவையை இயற்கை பூர்த்தி செய்யும் புனித ஏற்பாடுதான். அவ்வப்போது அவதரிக்கின்ற ஒரு ஞானி மட்டும் முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது.

    ஞானியும் தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். முயற்சி செய்து வினைப்பதிவுகளைப் போக்கி ஒரு பிறவியிலேயே ஞான ஒளியைப் பெற்றவர்கள். வழிப்பறி கொள்ளையனாக இருந்த ரத்னாகர், ஒரு பிறவியிலேயே தரமாற்றம் அடைந்து பண்பேற்றம் பெற்று வால்மீகி முனிவராகவில்லையா? அவர்களுக்குத் தெளிவு கிடைக்கின்றது, தெளிவின் ஒளியில் வாழ்க்கையை நடத்துகின்றனர். அதே வேளையில் தான் வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து, உதவியும் வருகின்றனர்.

    ஞானம் என்பது எட்டாக்கனி அல்ல. எட்டிய கனியாக்கி விட்டது இயற்கை, வேதாத்திரியத்தின் வாயிலாக. ஞானம் என்பது பொருளல்ல. ஒரு பொருளை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். ஆனால் ஞானம் என்பது ஆறாம் அறிவு இருக்க வேண்டிய உச்சகட்ட தெளிவு நிலை அது. மரணம் சம்பவிக்கும் வரையில் ஆறாம் அறிவு இருக்கப் போகின்றது. முயற்சியிருந்தால் ஞானம் பெற்று விடலாம் இப்பிறவியிலேயே. ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம் என்றும், அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கம் என்றும், ஞானம் அடைவதற்கு முன்னரே ஞானம் என்பது என்ன என்று கூறி ஞானதாகத்தை ஏற்படுத்தி, உலக மக்கள் எல்லோரையும் ஞான வாழ்விற்கு அழைக்கிறார். அறிவை அறிவதற்கான கருத்தியல் பாடங்களையும், சாதனைக்கான செய்முறை பாடங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளார். ‘கொடுத்துள்ளார்’ என்பது முடிவில்லா ஆன்மீக தொடர் ஓட்டத்தில் இறையாகிய பேரறிவு இந்த நூற்றாண்டில் செய்துள்ள புதுமையான, கருணையோடு கூடிய கடமை என்றே கொள்ள வேண்டும்.

    ஆகவே தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் ஆகிய நான்கு ஞானிகள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அதில் வாழ்ந்து காட்டிய மற்ற அறிஞர்களின் பாடல்களில் பரவியிருந்த அறிவாற்றல், மகரிஷி அவர்கள் செய்த பயிற்சிகளுக்கு அப்பாலும், பெரும்பங்கு உதவி செய்ததாக அறிய முடிகின்றது.
    மேலும் மகரிஷி அவர்கள், தாயுமான சுவாமிகளின் வேறு பாடல்களையும், ஏன் அனைத்துப் பாடல்களையும், ஊன்றிப் படித்ததால் தான், குருவணக்கப் பாடலில் முதலில் தாயுமான சுவாமிகளை நினைந்து “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என இயம்புகின்றார்.

    டுத்ததாக திருவள்ளுவரை தரிசிப்போம். திருவள்ளுவர் நாமம் வாழ்க. 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர் திருவள்ளுவர். பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஒரு ஆன்மாவிற்கு, மானசீக குருவானவர். அந்த ஆன்மாதான் வேதாத்திரி மகரிஷி அவர்களாவார். நிச்சயமாக திருவள்ளுவர் பூதவுடலுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு குருவாகவில்லை. இருப்பினும் அருட் பிரகாச வள்ளலாரைப் போன்று, நேரிடையாக திருவள்ளுவரின் ஆன்மா மகரிஷி அவர்களுக்கு ஆன்மீக அறிவு பெற உறுதுணையாக இருந்ததாகவும் தகவல் இல்லை. இருந்தாலும் மகரிஷி அவர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்கிறார். திருவள்ளுவர், மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு அருட்துணையாக இருந்திருக்கிறார்?

    மகான்களின் பூதவுடல் இறக்கிறதே தவிர, அவர்களது எண்ணங்கள், அவர்களின் அறிவாற்றல் என்றும் இப்புவி உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அருளாளர்களின் எண்ணமும், அறிவாற்றலும் எப்போதும் இறவாமல் இருக்கின்றன என்பதற்கு வேறு எங்கும் சான்றைத் தேட வேண்டியதில்லை. அருளாளர்கள் அருளியுள்ள நூல்களே அவர்களின் எண்ணங்களையும், அவா்கள் அறிந்த மறைபொருள் உண்மைகளையும் எடுத்து இயம்புகின்றன. சமுதாயத்திற்கு அவை விளங்கவில்லை. அந்த அளவிற்கு, சமுதாயம் ‘புலன்மயக்கத்தில் மூழ்கி, மாய வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்’ என்று கூடத் தெரியாமல் அவதியுறுகின்றது. தெரிந்தாலும் அலட்சியப்படுத்தி, ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்று அவ்வையார் கூறியிருந்தும், அதனை நம்புவதற்கு முயற்சி செய்யாமலும், சான்றோர்களின் அறநெறி அறிவுரைகளை மதிப்பதும் இல்லை.

    குருவணக்கத்தில், திருவள்ளுவரை நினைந்து, வணங்கி, அவர் எவ்வாறு தனக்கு உதவியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறும் வைர வரிகளை நினைவு கூர்வோம்.

    “அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,
    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்”. என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆனால் மகரிஷி அவர்களுக்கு, எந்தக் குறளின் வழியாக திருவள்ளுவரின் அறிவாற்றல் துணை செய்ததாக தகவல் இல்லை. ஆனால் மகரிஷி அவர்கள் ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். மகரிஷி அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குறட்பாக்கள், அவருடைய சிந்தனாப் பள்ளி (students of Vethathiri School of Thoughts) மாணவர்களுக்கு உதவும் வகையிலே அமைந்துள்ளது என்பது உண்மை. அதாவது அவர் கண்டுபிடித்துள்ள ஆன்மீக உண்மைகளுக்கு சான்றாக உள்ள குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மகரிஷி அவர்கள்.

    “அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி
    அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்” என்பதால் எந்தக்குறள் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றது என்கின்ற வினாவிற்கு வருவோம்.

    அகம் மெய்ப்பொருள் என்றும், அதுவே அறிவு என்றும் கூறியுள்ள குறள் ஒன்றா அல்லது அதற்கும் மேலா என வினா எழுகின்றது. மகரிஷியின் கூற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள் உள்ளன. முதலாவது கண்டுபிடிப்பு – மெய்ப்பொருள் மனிதனின் அகமாக(உள்ளம்) உள்ளது. அந்த மெய்ப்பொருள் வேறு ஏதுமில்லை அறிவேதான் என்கிறது இரண்டாவது கண்டுபிடிப்பு. தாயுமான சுவாமிகள் நேரிடையாகக் கூறாமல், தூயவெளியே தெய்வம் என்று மகரிஷி அவர்களுக்கு பாடல் வழியாகக் கூறிவிட்டார். மேலும் சில பாடலின் வாயிலாக தாயுமான சுவாமிகள் அறிவே தெய்வம் என்றும் மகரிஷி அவர்களுக்கு கூறிவிட்டார். அந்த உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, மேலும் திருவள்ளுவர் வாயிலாகவும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குறட்பாக்கள் என்னென்ன?

    ”ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்” குறள் எண் 702

    குறட்பாவின் விளக்கம் என்ன? இக்குறள் அகத்தை மெய்ப்பொருள் என்று – தெய்வம் என்று சந்தேகமின்றி உணர்ந்து கொண்டவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்கிறார் திருவள்ளுவர். மெய்ப்பொருளை சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டவர் தெய்வமாக மதிக்கப்படத்தக்கவர் மட்டுமல்ல, அவரே சமுதாயத்தை நல்வழிபடுத்தும் குருவுமாவார். குரு என்பவா் யார் என்று கூறும் சமஸ்கிருத ஸ்லோகத்தை நினைவு கூர்வோம்.

    குருர் பிரம்மா குருர் விஷ்ணு
    குருர் தேவோ மஹேஸ்வர:
    குருர் சாக்ஷாத் பரம்பிரம்மா
    தஸ்மைஸ்ரீ குரவே நம:

    குருவைக் ‘கடவுள்’ என்று ஒரு முறை மட்டும் சொல்லாமல், பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று மூன்று முறை, மூன்று கடவுளர்களின் பெயர்களைச் சொல்லி உறுதிபடுத்துகிறார் இந்த ஸ்லோகத்தை அருளியவர். அதோடு, கேட்பவருக்கு எங்கேயாவது சந்தேகம் வந்துவிடப் போகின்றதே என எண்ணி, இறுதியாக, சத்தியமாக/நிச்சயமாக குரு கடவுளேதான் என மீண்டும் கூறுகிறார் இச் ஸ்லோகத்தின் ஆசிரியர். இறைநம்பிக்கை உள்ளவருக்கு, இறை நிச்சயமாக உள்ளது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் புலன்களுக்கு காணப்படாத இறை எவ்வாறு இருக்கின்றது என சந்தேகம் மட்டும் இருக்கலாம். அந்த சந்தேகத்தை வேதாத்திரியம் அவருக்கு, இறை அரூபமாக உள்ளது என்று நிரூபித்து விட்டது.

    இறைக்கு உருவமில்லை, இறை அரூபமாக உள்ளது என்று தெளிவாக விளங்கிவிட்ட பிறகு இறை ஒரு பக்தனுக்கு எந்த வடிவில் வந்து உதவி செய்ய முடியும்? அரூபமான இறை, பக்தனுக்கு உதவி செய்வது என்பது, வேறு யாரும் கேட்க முடியாத, பக்தன் மட்டுமே கேட்கும் படி வார்த்தைகளில் சொல்வது ஒரு முறை. இதனை ஆன்றோர்கள் ‘கேளாஒலி, அசரீரி’ என்றும் சொல்கின்றனர். மற்றும் இறைவனைத் தோன்றாத் துணைவன் என்றும் கூறுகின்றனர். அல்லது மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால், தன்னுடைய தூய்மையான, கடவுள் ஏக்கம் உள்ள அடிமனம் உரைப்பது கூட இறைவன் பேசுவதாகவேக் கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு, தெரிந்தவரோ, முன்பின் தெரியாதவரோ உரிய நேரத்தில், யாரேனும் உதவி செய்தால் இறை அவர் வடிவத்தில் வந்து உதவி செய்ததாகத்தானே பொருள். தெய்வம் அரூபமாகவும், அறிவாகவும் உள்ளது என்பதனை மறந்துவிட்டு, மனித வடிவத்தில் வந்து உதவி செய்தது தெய்வம் என்று நினைக்க மறந்துவிடுவது வழக்கம். உதவி செய்தவரும் தெய்வத்தின் அம்சம்தானே! அவருடைய அறிவும் தெய்வம் தானே! உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய அறிவு எண்ணியதால்தானே, அவரது உடல் உதவி செய்தது. தெய்வம் எல்லோருக்குள்ளும் அறிவாக உள்ளதால், உதவி செய்தவரின் அறிவாகவும் இருப்பதால், இறைவனே சாக்ஷாத் மனித வடிவில் வந்து உதவியிருக்கிறான்.

    மீண்டும் குரு ஸ்லோகத்திற்குள் வருவோம். அறிவை அறிந்த ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவிற்கு, அவ்வறிவை அறிவதற்கான வழிகளைச் சொல்லும் போது, அறிவை அறிந்த அந்த ஆன்மா யாராக இருக்க முடியும்? வேதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி ‘எல்லாமே தெய்வம்’ என்கின்ற நியதியில், எல்லோருமே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்தையே சுட்டிக் காட்டும் ஆன்மா யாராக இருக்க முடியும்? சாக்சாத் அந்த ஆன்மா தெய்வமேதான். எனவே தெய்வமே குருவாக வருகிறார்; பேசுகிறார்; விளக்கம் அளிக்கிறார். இந்த புரிதல் ஏற்பட்டால்தான் குருவிற்கும், ஆன்மீக சாதகனுக்கும் இடையே நம்பிக்கையும், இணக்கமும் ஏற்படும். அப்போதுதான் குருவிற்கும் சாதகனுக்கும் இடையே நல்ல தொடர்பு(RAPPORT) இருக்கும். திருவள்ளுவர் அகத்தை ஐயமில்லாமல் உணா்ந்தவரை தெய்வமாகக்கொள்ள வேண்டும் என்கிறார். அகத்தை உணர்ந்த தெய்வம் யாராக இருக்க முடியும்? சாக்ஷாத் குருவேதான். ஆகவே குரு ஸ்லோகம் கூறுவது சரிதானே?

    … தொடரும்

    Loading

  • 63 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?FFC- 63 (2/?)

    08-03-2015 — ஞாயிறு

    கடந்த அறிவிற்கு விருந்தில், பூதவுடலை உதிர்த்தாலும் மகான்கள், சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதனை அறிந்தோம். அந்த அருளாளர்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு அருட்பயனைப் பெறுவதற்கான யுக்திகளை அறிய இருக்கிறோம் இனிவரும் அறிவிற்கு விருந்து பகுதியில். முதலில் தாயுமான சுவாமிகள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்திருக்கிறார் என்று பார்ப்போம்.
    தாயுமானவர் அவதரித்தது கி.பி. 1705 ஆம் ஆண்டு. தாயுமானவரின் பூதவுடல் மறைந்த நிலையிலும், 20 ம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே, மார்கழி மாத பஜனைப் பாடலில் இடம் பெற்ற தாயுமானவப் பெருமானின் திருவருள்விலாசப் பரசிவ வணக்கப் பாடல், பால வேதாத்திரியின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது.

    angingenathapadi

    இப்பாடலுக்கான தலைப்பு சிந்தனைக்குரியது. பாடலின் தலைப்பை ‘பரசிவ வணக்கம்’ என்று மட்டுமே வைத்திருக்கலாம் தாயுமான சுவாமிகள். ஆனால் ‘பரசிவ வணக்கம்’ என்பதோடு ‘திருவருள்விலாசம்’ என்பதையும் சேர்த்து தலைப்பாக வைத்துள்ளார். இப்பாடலின் தலைப்பில், முதலில் உள்ள ‘திருவருள்விலாசம்’ என்கின்ற சொற்றொடர் என்ன தெரிவிக்கின்றது? திருவருள் என்கின்ற சொல்லின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனுடன் விலாசம் என்கின்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார் தாயுமான சுவாமிகள். பாடலின் பொருள் மட்டும் விளங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாது, பாடலின் தலைப்பிற்கான பொருளை விளங்கிக் கொண்டால்தான் பாடல் அருளியதன் பயன் நிறைவேறும். காரணமில்லாது அந்த தலைப்பினைக் கொடுத்திருக்க மாட்டார் தாயுமான சுவாமிகள். ‘விலாசம்’ என்பதன் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘விலாசம்’ என்கின்ற சொல்லுக்கு, முகவரி மற்றும் லட்சணம் என்று பொருள் உண்டு.

    ஆகவே இரண்டு பொருளையும் எடுத்துக் கொண்டாலும் சரியே. ஏனெனில் முகவரி என்று எடுத்துக் கொண்டால், தெய்வத்திற்கான (சிவத்திற்கான) முகவரி என்று பொருளாகின்றது. அதாவது தெய்வம் எது? எங்குள்ளது, எவ்வாறு உள்ளது எனத்தெளிவாகத் தெரியாமல் இருந்ததை, தெய்வம் எது என்றும், அது எங்கிருக்கின்றது, எவ்வாறு உள்ளது எனத் தெளிவாக உறுதியாகத் தெரிவிப்பதை தெய்வத்தின் முகவரி அல்லது என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்ல முடியும்?
    மேலும் தெய்வத்திற்கு உருவங்கள் பல கொடுத்து, பல்வேறு தெய்வங்களாக்கி இருந்ததை, தெய்வம் ஒன்றேதான், அது அரூபமானது(தூயவெளி) என்று கூறி தெய்வத்திற்கான லட்சணம் தெரிவிக்கப்படுவதால், இரண்டாவது பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே திருவருள்விலாசப் பரசிவ வணக்கம் என்றால் சிவமாகிய தெய்வத்திற்கான லட்சணமும் விலாசமும் என்று பொருள்.

    தாயுமான சுவாமிகளின் முதல் பாடலே, மகரிஷி அவா்களின் ஆன்மாவிற்கு ஊக்களிமப்பதாக கூறுகிறார். தாயுமான சுவாமிகள் அவதரித்த காலத்திற்கும் மகரிஷி அவா்கள் அவதரித்த காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 206 ஆண்டுகள். தாயுமான சுவாமிகள் பூதஉடலை உதிர்த்தது 1743 ஆம் ஆண்டு. ஆகவே, மகரிஷி அவர்களின் ஆன்ம உயர்வுக்கு, தாயுமானவர் தன் பூதஉடலில் இருந்த போது உறுதுணையாக இருக்கவில்லை. அல்லது வள்ளலாரைப் போன்றோ தாயுமான சுவாமிகளின் ஆன்மா நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகவும் தகவல் இல்லை. இருப்பினும் மகரிஷி அவர்கள் தாயுமான சுவாமிகளை மானசீகமாகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் பெற்றது மட்டும் தெளிவாகின்றது. மேலே உள்ள தாயுமான சுவாமிகளின் பாடல்தான், ‘நீக்கமற நிறைந்த தூயவெளிதான் இறைவன்’ என்ற தெளிவினைப் பெறுவதற்கு உதவியவைகளில் ஒன்று என மகரிஷி அவர்களே மொழிந்துள்ளார்கள். “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என்று தாம் இயற்றிய குருவணக்கப் பாடலின் ஆரம்பத்திலேயே தாயுமானாரை நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி” என்று தொடங்கும் தாயுமானவர் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று கூறப்படவில்லை. அப்படியானால் தாயுமான சுவாமிகள் அருளிய 1452 பாடல்களில், எந்தப் பாடல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள குருவணக்கப்பாடலில், ‘அறிவே தெய்வம்’ என்று ஆரம்பத்திலேயே இயம்ப வைத்தது?

    FFC-63-தேஜோ மயஇவ்வாறாக 1452 பாடல்களையுமே மகரிஷி அவர்கள் படித்திருக்கலாம். அவற்றில் மேற்கண்ட வரிகள் நம்முடைய தற்போதைய ஆராய்ச்சிக்குக் கிடைக்கின்றன.

    தாயுமான சுவாமிகளின் பரசிவ வணக்கப் பாடல் மட்டுமே அவருக்கு ஊக்கமளித்ததாகக் கொள்ள முடியாது. ஒருபாடலை மட்டும் கேட்டுவிட்டு சும்மா இருந்திருக்க மாட்டார் மகரிஷி அவர்கள். தாயுமான சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை நூல்களின் வாயிலாக படித்தறிந்திருப்பார். மேலும் பல பாடல்களைப் படித்து தாயுமான சுவாமிகளின் கண்டுபிடிப்பை அறிந்து வியந்திருப்பார். தாயுமான சுவாமிகளின் இறை அனுபவங்களை உள்ளம் உருகி ரசித்திருப்பார். போற்றியிருப்பார். அதனை மனதில் கொண்டுவந்து (CONTEMPLATE) ரசித்திருப்பார். அந்த நிலையினைத் தானும் பெற வேண்டும் என அவர் உள்ளஒழுங்கோடு(உள்ளத்தில் ஒழுங்கோடு) விரும்பியிருப்பார்.
    அருளாளர்களின் தரத்திற்கு அறிவினில் உயர்வது எளிய முறை இயல்பூக்க நியதிப்படி செயலாகின்றது (ஞானக்களஞ்சியம் – I பாடல் எண். 10) என்று நமக்கெல்லாம் கூறியிருக்கும் வழியை அவரும் பயன்படுத்தியிருப்பார். இயல்பூக்க நியதிப்படி, அருளாளர்களின் தரத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள பாடுபட்டிருப்பார். இந்தப் பாடலை, மகரிஷி அவர்கள், சிறுவயதில் மார்கழி மாத பஜனையில் பங்கு கொள்ளும்போது கேட்டது. அப்போதே அந்த பாடல் மகரிஷி அவர்களின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது. அதாவது தாயுமான சுவாமிகளின் அருள், அப்போதே, மகரிஷி அவர்களுக்கு உற்ற துணையாகியது.,
    அந்த பஜனைப் பாடலில் பங்கு பெற்ற மற்றவர்களுக்கு எந்தநிலை கிட்டியதோ தெரியாது. ஆனால், நமக்கும் இந்த சமுதாயத்திற்கும், இப்படி ஒரு குருதேவர் கிடைக்க வேண்டும் என்கின்ற இயற்கையின்/இறையின் இச்சையால், அத்தகைய அருள்நிலை மகரிஷி அவர்களுக்குக் கிட்டியது. மகரிஷி அவர்களை இயற்கை/இறை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அருட்பெற்றோர்கள் வரதப்பர் மற்றும் சின்னம்மாள் கொடுத்த அருட்கருமையப்பதிவுகளைத் தாங்கி வந்த பாலவேதாத்திரியின் கருமையம்தான்.
    இங்கே தாயுமான சுவாமிகள் பூதவுடலோடோ அல்லது வள்ளலாரைப் போன்று தாயுமானவரின் ஆன்மாவோடோ நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறிருந்தால் மகரிஷி அவர்கள் அதனையும், நாம் பயன் பெறுவதற்காகக் கூறியிருப்பார். தாயுமான சுவாமிகளின் அந்தப் பாடலோடு மகரிஷி அவர்கள் நின்று விடவில்லை. தாயுமான சுவாமிகள், மகரிஷி அவா்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டுவிட்டார்(THAYUMANA SWAMIGAL HAS KINDLED THE SPIRITUAL FIRE IN MAHARISHI). ஆன்ம தீயை கிளறி விட்டதை தாயுமான சுவாமிகளின் பூதவுடல் செய்யவில்லை. தாயுமான சுவாமிகளின் ஆன்மவோ நேரிடையாகவும் செய்ததாக தெரியவில்லை.
    ஆனால், சக்திகளத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாயுமான சுவாமிகளின் ஆன்ம ஆற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயை கிளறிவிட்டிருக்கலாம். அல்லது தாயுமான சுவாமிகளின் பாடல்களில் படா்ந்திருக்கும் தாயுமான சுவாமிகளின் அறிவாற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டிருக்கும் என்பது பொருத்தமாக இருக்கலாம். மகரிஷி அவர்களும், திருக்கூட்ட மரபில் வந்துள்ள அருளாளர்களின் அறிவாற்றலை பிரார்த்தித்திருக்கிறார் அல்லவா?(MAHARISHI ALSO HAS INVOKED THE BLESSINGS OF ALL SAINTS. OR THE SAINTS THEMSELVES, AS LIBERATED SOULS, HAVE VOLUNTARILY COME FORWARD TO HELP THE FELLOW-BEINGS IN THE PROCESS OF LIBERATION. THIS IS THE NOBLER AIM, DUTY AND SERVICE OF THE LIBERATED SOUL WITH WILL. ONLY FOR THAT THEY STAY IN THIS UNIVERSE)
    “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்கின்ற தாயுமான சுவாமிகளின் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று எங்கும் தாயுமான சுவாமிகள் தெரிவிக்கவில்லை. ‘வெளி தான் தெய்வம்’ என்கின்ற அருட்செய்திதான் உள்ளது. இதுதான், மகரிஷி அவர்களை தூயவெளியை தெய்வம் என உறுதிபடுத்த உதவிய. மேலும் பல அறிஞர்களின் வெளியைப் பற்றிய, அருட்கூற்றுக்களும் வெளியைத் தெய்வம் எனத் தீர்மானிக்க உதவியது எனக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள். அந்த அறிஞர்கள் யார் என்றும், அவர்கள் என்ன கூறினார் என்றும் இப்போது தெரிந்து கொள்வோம்.

    FFC-63-வெட்ட வெளி

     

    FFC-63-நன்றாய் ஞானம்

     

    தாயுமான சுவாமிகள், சித்தர், மற்றும் வைணவப் பெரியார்கள் ஆகியவர்களின் பாடல்களைப் படித்து உணர்ந்தபோதுதான் தூயவெளியாக நிறைந்தும், சூழ்ந்து கொண்டும், பேரியக்க மண்டலம் முழுவதையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருப்பதுதான் இறைநிலை என்கின்ற உணர்வு பிறந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

    அதாவது இங்கே விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில்,

    மகரிஷி அவர்கள்தூய வெளியைதெய்வம் என்று உறுதிப்படுத்தியதற்கு, தாயுமானசுவாமிகள், சித்தா்பெருமகனார்கள், வைணவப்பெரியார்கள்ஆகியஅருளாளர்கள், அவர்கள்பூதஉடல்களில்இருந்தபோது, உறுதுணையாகஇருக்கவில்லை.

    அந்தஅருளாளர்களின்ஆன்மாக்கள், வள்ளலாரைப்போன்றுநேரிடையாகவும்வந்துஉதவிசெய்யவில்லை.

    அல்லதுஒருவேளைஅந்தஅருளாளர்கள் ‘கேளாஒலி’ போல், மகரிஷி அவர்களின் காதுகளில் வந்து சொன்னதாகவும் தெரியவில்லை.

    ”தூயவெளியேதெய்வம்” என்றுமானுடத்தால், உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வு மகரிஷி அவர்களால் மட்டுமேமுதன் முதலில்நடந்ததன்று.

    பேரறிவின்தன்மாற்றசரித்திரத்தில்‘தூயவெளிதான்தெய்வம்’என்று ஏற்கனவே அருளாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இருந்தாலும் அதனைத் தெரிவிக்க முட்டி மோதி நின்றனர். அந்தகண்டுபிடிப்புகள் எல்லாம்,மகரிஷிஅவர்கள்தூயவெளிதான்தெய்வம்என்றுகண்டுபிடித்ததை உறுதிபடுத்துவதற்குஉதவியாகஇருந்து, வெட்டவெளி தத்துவத்தை எளிமையாக்கி  ஆன்மீகத்தில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டார் மகரிஷி அவர்கள்.

    ஆன்மீக வரலாற்றில், ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தும், முடிவில்லாத, ‘ஆன்மீகத்தொடர் ஓட்டம்’, என்பது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஒட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)‘ பங்கு பெரும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களைப் போன்றவர்களே. அவர்களை ஞானவீரர்கள் என்றேகூட அழைக்கலாம். எப்படி? ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்? வீரர் என்றால் என்ன அா்த்தம்? விளையாட்டு வீரர் என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்?     தொடரும்.

    Loading

  • 62-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    
    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
    FFC- 62 (1/?)

    04-03-2015 –புதன்

    வாழ்க வளமுடன்,

    சிந்திப்பதற்கு, மேலே உள்ள தலைப்பை இன்று எடுத்துக் கொண்டதற்கான காரணம், நமது இணையதள சத்சங்கத்தில் கலந்து கொள்கின்ற ஒர் அன்பர் அனுப்பியுள்ள ‘கருத்துரைக்க’ பகுதியில், கேட்டிருந்த சிந்தனைக்குரிய வினாவே ஆகும். உங்கள் சார்பாக, www.prosperspiritually.com, அவருக்கு நன்றியினையும் மற்றும் அவரது ஆன்மதாகத்தைப் போற்றி, அவருடைய ஆன்ம தாகம் மேன்மேலும் வளர ஆத்மார்த்த வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    அவ்வையாரின் அறிவாற்றலை வணங்கி சிந்தனையைத் தொடங்குவோம்.

    FFC-62-PNG- AVVAI
    இப்போது தலைப்பிற்குள் செல்வோம். அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து, அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களுடைய மற்றும் அருளாளர்களின் வரிசையில் நமக்குத் தெரிந்து, கடைசியாக அவதரித்த அருளாளரும் நம்முடைய குருதேவருமாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் வெகுவாக துணை நிற்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். அருளாளா்களையெல்லாம், கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, போற்றி வணங்குவோம்.

    FFC-62-PNG-குரு வணக்கம்- அறிவே-பாடல்

    FFC-62 -PIC - மகான்களின் படம்

     

    தலைப்பில் இரண்டு வினாக்கள் உள்ளன. முதல் வினாவிற்கான பதில் மகான்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எவ்வாறு? உடல்தான் மீண்டும் பஞ்சபூதங்ககளாக மாறியதே தவிர ஆன்மாவிற்கு அழிவேது? இரண்டாவது வினாவிற்கான பதில், மகான்கள், நம்முடன்(சமுதாயத்துடன்) இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றனர்; அருளுரை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை மகான்கள் எவ்வாறு ஆற்றுகின்றனர் என்றும், அவற்றைச் செவிசாய்த்து பயன்பெறும் யுக்தியினை அறிந்து செயலில் கொண்டுவருவதற்கே இன்றைய சிந்தனையாகும்.

    மகான்கள் நம்முடன்(சமுதாயத்துடன்) பேசிக் கொண்டிருக்கின்றனர், அருளுரை ஆற்றுகின்றனர் என்றால் என்ன பொருள்? அவர்கள் பூதவுடலோடு வாழ்ந்த காலத்தில் எண்ணிய எண்ணங்கள் இறக்கவில்லை. வான் காந்தக் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் அருளாளர்கள் அருளியுள்ள அறிவுரைகளைக் கொண்ட அறநூல்கள் இப்புவி உள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த அறநூல்கள் ஒழுக்க நெறியையும், அவற்றைப் பின்பற்றுவதால் அடையும் பயன்களையும் இயம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை ‘அறநூல்கள் வாயிலாக மகான்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனா்’ என்று சொல்லக் கூடாதா? இப்போது மகான்களிடம் இணைப்பு பெற்று பயன்பெறுவது பற்றி அறிவோம்.
    மகரிஷி அவர்கள் தனது 35 (1911+35=1946) வயதிற்குள்(around) இறை உணர்வு பெற்றுவிட்டார். அதாவது, இறையானது, தன்னுடைய நிலையை, இவ்வுலக மக்கள் எளிமையாக விளங்கிக் கொண்டு, அனைவரும் உய்யவேண்டும் என எண்ணி, நம் குருதேவரை இறைத்தூதுவராக்கி, இவ்வுலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனக்கருதி, தன்னுடைய உண்மையான முழுவிலாசத்தையும், தன்னுடைய முழுச்சரித்திரத்தையும் உண்மை மாறாமல், மகரிஷி அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது. மகரிஷி அவர்கள் இக்குருவணக்கப் பாடலை எழுதியது 1981 ஆம் ஆண்டு. அதாவது, அவர், தன்னிலை விளக்கம் பெற்று 35 வருடங்கள் சென்ற பிறகு இந்த குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். நோக்கம் என்ன? 35 வருடங்கள் கழித்து எதற்காக எழுதினார்?
    இப்பாடலில் கூறியுள்ள வழியின் வாயிலாக, பயனை, தான் அனுபவித்ததோடு அல்லாமல், மகரிஷி அவர்களின் நேரிடை காலத்து மாணவர்களுக்காகவும், வருங்காலத்தில் வருகின்ற உலக மக்கள் அனைவருக்கும் பயன் பெறும் வகையிலே முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் 11-08-1981 அன்று, அறிவியல் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு யுக்தியினை அருளியுள்ளார். 1911 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடக்கின்ற அருள் நிகழ்வுகளை சில கட்டங்களாக பிரித்து ஆராய்வோம்.

    gurudevar

    மகரிஷி அவர்கள் அவதரித்த ஆண்டு                                         1911

    மகரிஷி அவர்கள் தன்னிலை விளக்கம் பெற்றது                  1946 (around)

    மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடல் இயற்றியது            1981

    மகரிஷி அவர்கள் குருவின் சேர்க்கை பாடல் இயற்றியது 1984

    மகரிஷி அவர்கள் 1953 ஆம் ஆண்டிலிருந்து கவிகளை எழுத ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகின்றது. ஆனால் கவிகள் எழுதும் பழக்கம் கொண்ட அவர், 1953 க்குப் பின் 28 ஆண்டுகள் சென்ற பிறகு, இக்குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். இப்போது, ஒவ்வொரு கால கட்டத்தின் சிறப்பையும் கவனிப்போம்.

    1911 – 1946 — சுமார் தனது 35 வயதில் (1946) மகரிஷி அவர்கள், தன்னிலை விளக்கம் பெற்றது.

    1946 – 1981 — உலக சமுதாய சேவா சங்கம் ஏற்படுத்தப்பட்டு உலக மக்களுக்கு தன்னிலை பெறுவதற்கான கருத்தியல் பாடமும், செய்முறைப் பாடமும் போதிக்கப்பட்டு வந்தன; இப்போதும் போதிக்கப்பட்டு வருகின்றன.

    1981 இல் ‘குருவணக்கம்’ – பாடல் இயற்றப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் பயிற்சியின் முடிவு(result) அடையும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்கு, இது ஒரு யுக்தி எனக்கொள்ளலாம்.

    1984 இல் ‘குருவின் சேர்க்கை’ – பாடல் இயற்றப்பட்டு, ஏற்கனவே அறிவித்த யுக்தியைவிட அதியுக்தியை அறிவித்தது வேதாத்திரியம். அது என்ன? முதல் யுக்தியில், எல்லா அறிவினரையும் நினைவிற் கொண்டுவந்து அவர்களை வணங்கி அவர்களுடைய வாழ்த்தையும், காப்பையும் பெறுவதற்கு பிரார்த்தனை (invocation) செய்தல். இரண்டாவது யுக்தியானது “அறிவினரைச் சோ்தல் இனிது. அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே” என்று அவ்வையார் மொழிந்துள்ளதை பயன்படுத்திக் கொள்ளுதலாகும்.

    1984 ல் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டாவது யுக்தியானது, ஆன்மீகப் பயிற்சியாளர் இறையின் முத்திறங்களில் ஒன்றான, இயல்பூக்கத்தையே பயன்படுத்தி. இறையை உணர்வதற்கான தர மாற்றங்களை அடைவதற்கான வழியினைச் சொல்கின்றது. இங்கே பிறவிப்யனை எய்துவதற்கு, சாதகன் செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அப்பாடலையும் இங்கே நினைவு கூர்வோம்.

    FFC-62-PNG- எப்பபொருளை-4-3-15-6-00am

    1981 – 1984 – 2015 வரையிலான காலம் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்காலகட்டம் அக்குருவணக்கப் பாடல் மற்றும் ‘குருவின் சேர்க்கை’ பாடலில் தெரிவித்துள்ள வழியாகப் பயனை அடைந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.

    2015 முதல் இனிவரும் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இக்காலத்தில் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, இறைத்தூதர் மகரிஷி அவா்களின் துணை—இறைத்தூதுவர்களான நம்மிடம், இறை, பொறுப்பை ஒப்படைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். வேதாத்திரியத்தை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை கல்வியாக எடுத்துச் சென்றுள்ளதே, அந்த பொறுப்பினை நிறைவேற்றி வருவதற்கு சான்று.

    தொடரும் அடுத்த அறிவிற்கு விருந்தில்.

    Loading

  • 61-ஏன், ‘அறிவே’, தெய்வம் எனப்படுகின்றது?

     

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     ஏன், ‘அறிவே’, தெய்வம் எனப்படுகின்றது?

    அ.வி.எண்.61—(6/6)

    01-03-2015 – ஞாயிறு

     

    சென்ற அறிவிற்கு விருந்தில் வெளியிலிருந்து நொறுங்கியத் துகள்கள், ஒழுங்குடன் விண்களாகி, அந்த விண்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகி பின்னர் அணுவாகியதற்கான(chemical atom) காரணம் அறிவாகிய ஒழுங்காற்றல் என்று அறிந்தோம். இன்றைய விருந்தில் “தெய்வம் தூணிலும் இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது”, என்பது எவ்வாறு சாத்தியம் என அறிய இருக்கிறோம்.

    மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு எனும் இயற்கைநீதி கூட, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. இறை எல்லாவற்றையும் அறியக்கூடியது என்பதுகூட, இறையாக அறிவே உள்ளதால்தான் சாத்தியம். அதனால்தான் இறைக்கு ‘பேரறிவாளன்’ என்கின்ற பெயரும் உண்டு. மனிதன் செய்கின்ற ஒருசில செயல்களுக்குரிய விளைவுகள் உடனே வரலாம். உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தைத் தொட்டால், தொட்ட விரல் உடனே புண்ணாகிவிடும். இங்கே விளைவு உடனே வருகின்றது. விளைவுகள் உடனேதான் வரவேண்டும் என்பதில்ல; சூடான பாத்திரத்தைத் தொட்டதற்கு வரும் உடன்-விளைவு போல் அல்லாமல் சில மணிநேரங்கள் கழித்தோ, சில நாட்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தோ, ஏன் இந்த தலைமுறையில் வராமல் வம்சாவளிக்கு கூட வரலாம். செயலுக்குரிய விளைவு வருவதற்கு, தக்க சூழ்நிலைகளும், உகந்த காலமும், வேறு மனிதர்களும் தேவைப்படுவதால் விளைவு உடனே வருவதில்லை. விளைவைத் தருவதற்கு உகந்த நேரத்தையும், சூழ்நிலையையும். தக்க மனிதஅறிவையும், அதாவது தக்க மனிதரையும் தேர்ந்தெடுப்பது, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அறிவு எங்கும், எதிலும் இருப்பதால்தான் எந்த செயலும் அதற்குரிய விளைவைத் தராமல் இருப்பதில்லை. அல்லது வீணாவதில்லை.

    மின்சாரம் ஒரு வகையான ஆற்றல். மின்சாரம் ஆற்றலாக இருந்தாலும், அதுவே தானாகவே செயல்படாது. அதனை சரியாக இயக்க மனித அறிவு தேவைப்படுகின்றது. ஆயிரம் பேர் பணிபுரியும் தொழிற்சாலையில், பணிகளைக் கண்காணிக்க எத்தனை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகின்றனா்? அங்கேயும் கண்காணிப்பாளர்களின் அறிவுதான் கண்காணிக்கும் பணியைச் செய்கின்றது.

    அது போல், பூமியில் மக்களாட்சியில் ஆட்சி நடப்பது போல், ஆட்சி ஏதும் இல்லாமல், ஆளுகின்ற ஐயன், எங்கும் அறிவாக இருப்பதால்தான் அவன், சம்பிரதாய முறைப்படி ஆட்சி இல்லாமலேயே இப்பிரபஞ்சத்தை எந்தவித ஆரவாரமில்லாது ஒழுங்குடன் இயக்கி வருகிறான்.

    ‘பேரின்பக் களிப்பு’ என்கின்ற பாடலில் மகரிஷி அவர்கள் கூறும் ஒரு வரியினைக் கவனிப்போம். கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டம் இயங்கி வருவதை,

    “ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்” என்று

    இறையின் இயக்கத்தை புகழ்ந்து பாடுகிறார்.

    ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக இருப்பதால் மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கின்ற இயற்கை நீதியும் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது மனிதனுக்கு அவனுடைய முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கம் மிக மிக அவசியமாகின்றது. இல்லையெனில் மனிதனின் நடவடிக்கைகளுக்கேற்றபடி விளைவுகள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ வரும்.
    எல்லாமே தெய்வமாக இருந்தாலும், ஆதிநிலையில் வெறும் ஆற்றலுடன் அறிவு எனும் சிறப்பு இல்லாமல் இருந்திருந்தால், வெளியாகிய தெய்வம் எல்லாமாகவும் ஆகியிருக்க முடியாது. வெளியின் தன்மைகளை பிரித்துப் பார்க்காமல், ஒரே பொருளாகப் பார்க்கும்போது, அறிவின் பணி மேலோங்கி நிற்பதால் அறிவையே தெய்வம் என்கின்றனர். அவ்வாறில்லாமல், வெளியே எல்லாத் தோற்றங்களாகி உள்ளது என்பதால்,
    ‘வெளியே தெய்வம்’ என்பதற்கும்,
    ‘எல்லாமே தெய்வம்’ என்பதற்கும்

    அல்லது
    இறைவெளியின் மற்ற தன்மைகளைக் கொண்டு.
    ‘வற்றாயிருப்பே தெய்வம்’ என்பதற்கும்,
    ‘பேராற்றலே தெய்வம்’ என்பதற்கும்,
    ‘காலமே தெய்வம்’ என்பதற்கும்,

    இறைவெளியின் தன்மை பேரறிவு என்பதாலும், மற்றும் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை ‘அறிவே நான்’ என்பதால்,
    ‘அறிவே தெய்வம்’ என்பதற்கும்,

    உணர்வில் ஏற்படும் வித்தியாசங்களைக் கவனிக்க வேண்டும்.

    ‘பேராற்றலே தெய்வம்’ என்று கூறுவதால் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மறந்து போகின்றது. தெய்வம் அன்னியமாகிவிடுகின்றது.
    அறிவே தெய்வம் என்கின்றபோது, நம்மிடமுள்ள அறிவும், மற்றவர்களிடமுள்ள அறிவும் ஒன்றாகிவிடுவதாலும், உலக மக்கள் அனைவருக்கும் ஆதிநிலையே மூலம் என்பதாலும் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது.

    எவ்வாறு?

    அறிவு அரூபமாக உள்ளதால் எல்லோருடைய அறிவும் ஒன்று என்றாகிவிடுகின்றது. எவ்வாறு எனில், அரூபத்தில் ஒன்றிற்கு மேல் இருக்க முடியாது. அரூபத்தில் வெவ்வேறு அரூபங்கள் இருக்க முடியுமா? உருவம் ஒன்றிற்கு மேல் இருக்க முடியும். ஆனால் அரூபமாக உள்ள அறிவில் வேறுபாடுகள் கிடையாது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய மெய்விளக்கம் என்கின்ற தலைப்பின் கீழ் வரும் பாடலின் முதல் இரண்டு வரிகள் சத்தியத்தை உறுதி படுத்துகின்றன.

    “நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
    நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.” …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே அறிவு ஒன்றாகிவிடுவதால் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது. மேலும் தனிமனித மனித அறிவுகள் எல்லாம் (மக்கள்) ஒன்று என்பதாலும், அறிவே தெய்வம் என்பதாலும் தெய்வமும் ஒன்றுதான் என்றாகிவிடுகின்றது. தெய்வமே எல்லோருமாக – எல்லா உயிர்களாகவும் இருக்கின்றதை அறிந்து கொள்ளமுடிகின்றது. திருமூலர் வாக்கு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எவ்வாறு என்பது என மீண்டும் உறுதி படுத்துகின்றது.

    மேலும் மானுட அறிவும், மானுடத்தைத் தவிர மற்ற உயிர்களிடத்திலும் உள்ள அறிவும் ஒன்று என்பதால் ஒருமை உணர்வே, மேலோங்கி நிற்கின்றது.

    “தெய்வம் தூணிலும் இருக்கிறது, துரும்பிலும் இருக்கின்றது” என்றால் உருவமுள்ள தெய்வமா தூணிலும் துரும்பிலும் இருக்க முடியும்?

    உருவமுள்ள தெய்வம் எவ்வாறு தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமான தெய்வம், தூணிலும் துரும்பிலும் இருக்க முடியாது என்பது சரி. பின்னா் தெய்வம் தூணிலும் துரும்பிலும் எவ்வாறு இருக்கின்றது? எல்லாமே தெய்வம் என்கின்றபோது தூணிலும், துரும்பிலும் தெய்வம் இருந்தாக வேண்டும். தெய்வத்திற்கு உருவமில்லை என்கின்றபோது தெய்வம் அரூபமாக இருக்கின்றது என்று பொருள்.

    ஆனால் உருவமில்லா(அரூபமான) தெய்வம் எவ்வாறு உருவமுள்ள தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமில்லா(அரூபமான) தெய்வம் உருவமில்லா(அரூபமான) அறிவாக இருந்தால்தான், தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும். ஆகவே “தூணிலும், இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது தெய்வம்” என்பது, அரூபமாகிய தெய்வம் அரூப ஆற்றலான அறிவாக, ஒழுங்காற்றலாக உயிரற்ற சடப்பொருட்களில் இருப்பதைத்தான் குறிக்கின்றது. தூணிலும், துரும்பிலும் இருக்கின்ற அணுவும் தெய்வம்தானே. அந்த அணுவை நிர்வாகம் செய்து கொண்டிருப்பதும் அறிவாகிய ஒழுங்காற்றல் தானே. ‘அறிவே தெய்வம்’ என்பது சரியாக உள்ளது என்பதனை மேலும் ஒர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.

    ஒரு குடும்பத்தில் கொள்ளு தாத்தாவிலிருந்து கொள்ளுப் பேரன் வரையில் நான்கு தலைமுறைகள் வசிப்பதாகக் கொள்வோம். நால்வருமே ஒரே வம்சாவளிதான். முருகனின் மகன் கந்தசாமி. கந்தசாமியின் மகன் கோவிந்தன். கோவிந்தனின் மகன் கண்ணன். கண்ணனை ‘நீ யார்?’ என்று கேட்டால் கண்ணன் என்ன பதில் சொல்வார்?
    “கோவிந்தனின் மகன்” என்று சொல்வார். அவ்வாறில்லாமல் முருகனின் கொள்ளுப் பேரன் என்றா சொல்வார்?
    கண்ணன், மற்ற உறவுகளைவிட, தந்தையிடம் நெருக்கமாகவும், பிரியமாகவும் இருப்பதால், கண்களால் தந்தையைப் பார்த்துக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் தந்தையின் மடியில் படுத்து உறங்கிய இன்ப நினைவெல்லாம் இருக்கும் போது, நெருக்கமாக உள்ள தந்தையின் பெயரைச் சொல்லி “கோவிந்தனின் மகன்” என்றுதான் சொல்வார். அதாவது இந்த உறவு முறையில் கண்ணனுக்கு அருகிலும், பிரியமானவருமாக இருப்பவர் அவரது தந்தைதான் என்பதால், தந்தையின் பெயரைச் சொல்லி அவருடைய மகன் என்பார். அதேபோல், எல்லாமே தெய்வம் என்பதில் நமது அறிவும் உள்ளடங்கி இருப்பதாலும், அறிவே நம்மை ஆட்சி செய்வதாலும், அறிவை பிரதானப்படுத்தி ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வளவு பொருத்தமுடையதாக உள்ளது?

    அறிவு மனிதனிடமும் உள்ளதால், அறிவே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்திற்கும் மனிதனுக்கும் நெருக்கமும், பிணைப்பும் அதிகமாகி, மனிதனாக திருந்த வேண்டிய பொறுப்பும் அதிகமாகின்றது. மனிதனிடம் உள்ள அறிவு தெய்வம் என்கின்றபோது, உயிரில்லாமல் அறிவு இல்லை என்பதாலும், மனம் இல்லாமல் அறிவு எதனையும் உணர முடியாது என்பதாலும், உயிர், மனம், அறிவு ஆகிய முன்றுமே தெய்வத்தின் அம்சம் என்றாகின்றது. அப்படியிருப்பதால்தான் திருமூலர் கூறும் “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்பது மனிதனுக்கு எப்போதும் நினைப்பில் இருந்து கொண்டு, தற்சோதனை இயல்பாகி, மனத்தூய்மை கைவரப்பெறும்.

    அதுபோல், ‘எல்லாமே தெய்வம்’ என்பதில் அறிவும் ஒன்றாகவும், அதுவே தானாகவும், பிறராகவும், எல்லா உயிர்களாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்று தெய்வத்தைச் சுட்டிக் காட்டுவதே மிகச்சிறப்புடையதாக உள்ளது. தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த நிலைமாறி, ‘அறிவே தெய்வம்’ என்கின்ற போது இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த உறவு நெருங்கி வருவதை அனுபவிக்க முடிகின்றது.
    மேலும் ஒரு உதாரணம். இட்லி, தோசை, ஊத்தப்பம் ஆகிய பலகாரங்களுக்கு எது மூலப்பொருள் அல்லது எதிலிருந்து இட்லி செய்யப்படுகின்றது என்று கேட்டால், என்ன சொல்வோம்? அரிசியினால் ஆனது இட்லி என்போம். ஆனால் உண்மையில் இட்லி வெறும் அரிசியினால் மட்டுமே ஆனது இல்லை. இட்லி மாவில் உளுந்தம் பருப்பும், சிறிதளவு வெந்தயமும் உள்ளது. ஆனால் இட்லி மாவில் அரிசியே பிரதானமாக உள்ளதால், இட்லி, அரிசியினால் ஆனது என்கிறோம். அதுபோல் எல்லாமே தெய்வமாக இருந்தாலும், தெய்வம் பிரதானமாக அறிவாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்கிறோம். நமது அறிவும், ‘எல்லாம் தெய்வம்’ என்பதில் ஒன்றாகவும், அந்த அறிவுதானே இந்த கேள்வியினைக் கேட்கின்றதாகவும் இருப்பதால் ‘அறிவே தெய்வம்’ என்பது மிக மிகப் பொருத்தம்.

    இந்த உணருகின்ற அறிவில்லாமல் தூயவெளி இருந்திருந்தால் உயிரினம் ஏது? பிரபஞ்சம் தோன்றி அதனால் விளைந்த காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒளி, ஒலி, சுவை மற்றும் மணம் உணா்வதற்காகவேதான் உயிரினங்கள் தோன்றின. ஆதிநிலையில் அறிவே இல்லாதிருந்தால், உயிரினங்களே இல்லாமல் கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அதில் என்ன சிறப்பு உள்ளது? ஆகவே அறிவுதானே சிறப்புடையது.

    ஆகவே அறிவே தெய்வம் என்பது சரி என்கின்ற முடிவுக்கு வருகின்றது அறிவு. வேதாத்திரிய ஆன்மீகத்தின் பல சிறப்புகளில் ஒன்று அறிவைப் பற்றிய இந்த தெளிவு. கி.பி.1911 க்கு முன்னர் அறிவே தெய்வம் என்று வேதங்கள், ஆன்மீக நூல்கள் மற்றும் பல ஆன்றோர் பெருமக்கள் கூறியிருந்தாலும் அறிவு எவ்வாறு தெய்வமாகின்றது என்பது விளங்காமலேதான் இருந்து வந்தது. வேதாத்திரியமும் அறிவைப் பற்றிய இத்துணை விளக்கம் கூறாமல், ‘அறிவே தெய்வம்’ என்று மட்டும் கூறியிருந்தால் வேதாத்திரியமும், நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ளாப்படாமலேயே இருந்திருக்கும்.

    விஞ்ஞானத்தில், பிரபஞ்ச மூலத்தில், அறிவை எடுத்துக் கொள்ளப்படாத குறையை, வேதாத்திரியம், அறிவை, பிரபஞ்ச மூலத்தில் சேர்த்துக் கொண்டதால் தான் அந்தக் குறை சரிசெய்யப்பட்டு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தரும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டினும் எண்ணியதை, கி.பி.1911 க்குப் பிறகு இயற்கை ஈடேற்றியுள்ளது.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அஞ்சுவதேன் துணிந்துரைப்போம். அறிவே தெய்வம்” என்று, பன்மையில், நம்மையும் சோ்த்துச் சொல்வது, மகரிஷி அவர்கள் நமக்கு அளித்துள்ள அறிவின் விளக்கத்தின் எளிமையேதான் காரணம். ஆகவேதான் நாமும் அவருடன் சேர்ந்து, அறிவே தெய்வம் என்பதனை ஏற்றுக்கொள்வோம் என்று அவா் எண்ணி, நம்மையும் சோ்த்து, உறுதியாக அவ்வாறு கூறியிருக்கிறார். ‘தெய்வம், உயிர், அறிவு, மனம்’ என்கின்ற தலைப்பில் இயற்றியுள்ள மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-61-PNG-2-1-3-15

           எனவே ஆன்மீகத்தில் இருந்த அச்சத்தை நீக்கி, வாழ்க்கையோடு ஆன்மீகத்தை இணைத்து, வாழ்வியல் ஒழுக்கமாக விளக்கியுள்ளது வேதாத்திரியம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், வாழும் மனிதன் வாழ்வியல் ஒழுக்கத்தை கடைபிடித்துத் தானே வாழ்ந்தாக வேண்டும்.

    எனவே உலகப் பொதுமறையான திருக்குறளை தந்தருளிய திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்டு, ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்று கண்டுபிடித்து, ஆன்மீகத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்ட வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள

                     மற்றொரு உலகப் பொதுமறையான ‘வேதாத்திரியத்தை’  

                       வாழ்த்துவோம்.      வளர்ப்போம் வேதாத்திரியத்தை.

                        வாழ்க வேதாத்திரியம்,  வளர்க வேதாத்திரியம்.

     
    ‘வாழ்க வேதாத்திரியம்’ என்பது, உலக மக்கள் அனைவருக்கும் வேதாத்திரியம் சென்று சேரவேண்டும் என்கின்ற எண்ண அலைகளை பரப்புவது. வளர்க வேதாத்திரியம் என்பது வேதாத்திரியத்தை இன்னும் எளிமையாக்கி, விரிவாக்கி, விளக்கி, சுருக்கிப் பாடமாக்கி பள்ளிக் கல்வியோடு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்கின்ற எண்ண அலைகளைப் பரப்புவது. இத்துடன் இச்சிந்தனையை தற்சமயம் முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.
    .
    அடுத்த அறிவிற்கு விருந்தில், ஓர் அன்பர் அனுப்பிய ‘கருத்துரைக்க பகுதியில்’  கேட்கப்பட்ட, ஆழ்ந்த சிந்தனையுடைய வினாவிற்கான விடையை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க வையகம்.         வாழ்க வளமுடன்.

    Loading