admin

Author Archives

  • FFC – 160-வினா விடை – 10—(2/3)

    வினா விடை – 10—(2/3) 

    FFC – 160

    03-02-2016—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி–

    சிந்திக்க அமுத மொழிகள்- 131
    (04-12-2015—வெள்ளி)

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    விடை:– தொடர்ச்சி–

    அறிவைப் பற்றி மெய் உணர்தல்(அதிகாரம்36-குறள் எண் 355) மற்றும் அறிவுடைமை(அதிகாரம் 43 – 423) என்கின்ற அதிகாரத்தில் கூறியிருக்கிறார். அக்குறளை நினைவுபடுத்திக் கொள்வதன் வாயிலாக திருவள்ளுவருடன் இணைந்து கொள்வோம். திருவள்ளுவர் இப்போது இல்லையே என நினைக்கலாம். நம் குருநாதரும் திருவள்ளுவர் இல்லாதபோதுதான்(1911) பிறந்தவர். அவர் திருவள்ளுவருடன் இணையவில்லையா! திருவள்ளுவரை அவர் மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்ளவில்லையா!. நமக்கெல்லாம் அந்த யுக்தியினை குருவணக்கம் பாடலின் வாயிலாக கூறியிருக்கிறார்.

    நடந்த நிகழ்ச்சி ஒன்றை அறிவோம். அன்பர் ஒருவர், ஒரு குறளுக்கு சரியான பொருள் வேண்டி திருவள்ளுவரை நினைத்து தியானம் செய்துள்ளார். தியானத்தின் முடிவில், அந்த குறளுக்கு பொருள் அறிந்த தெளிவுடன் அவர் எழுகிறார். திருவள்ளுவர் பூதஉடல் இல்லை என்பது உண்மைதான். திருவள்ளுவரது அறிவாற்றல்தான் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றதே. அதேபோன்றுதான் மகரிஷி அவர்கள் பூதவுடலோடு இப்போது நம்மிடம் இல்லை. எனவே நாம் அவருடன் இப்போது இணைந்து கொள்ளாமலா இருக்கிறோம்!? நாம் அவருடன் இப்போது இணைய முடியாது என்பதில்லை. அவர் அருளியுள்ள, குறிப்பாக பாடல்களின் வாயிலாக நம்முடன் உறவை அவர் வைத்துக் கொண்டுதான் உள்ளார்.
    அவரது பாடல்கள் இதுவரை ஆன்மீகத்தில் அருளப்பட்டுள்ள பாடல்களிலேயே மிகத் தெளிவாக, எளிமையாக வாழ்க்கையைப் பற்றி கூறுவதனால் காலங்காலமாக,

    உலகியல் வாழ்க்கையும், ஆன்மீகவாழ்க்கையும் தனித்தனியாக இருந்து வந்ததை,
    விருப்பமுள்ளவர்கள் ஆன்மீக வாழ்க்கை வாழலாம், மற்றவர்கள் உலகியல்
    வாழ்க்கையிலேயேகூட
    மூழ்கியிருக்கலாம் என்பதனை மாற்றி அமைத்து,
    இரண்டையும் இணைத்து எந்தவித அச்சமும் இன்றி
    உலகியல் வாழ்க்கையைவிட மிகவும் மகிழ்ச்சியான சிறப்பான ஒரே வாழ்க்கையை மனிதன்
    வாழமுடிகின்றதல்லவா இப்போது மனவளக்கலையின் துணையால்?
    மனவளக்கலைஞர்களுக்கு என்ன குறை இப்போது? ஒன்றுமில்லை.
    வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அனுபவத்தாலும் அறிவாலும் அறிந்து கொள்ள முடியவில்லையா?
    பேரின்ப பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் மனவளக்கலைஞர்கள்.

    உணர்ச்சிவயம்:-

    அடுத்ததாக அறிவின் குறைபாடுகளில் மூன்றாவதான உணர்ச்சிவயம் என்பதனை ஆராய்வோம்.
    உணர்ச்சிவயம் என்கின்ற சொல் ‘உணர்ச்சி’, ‘வயம்-வசம்’ ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டது. உணர்ச்சி என்பது உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறியும் அனுபவம். அதாவது அறிவால் இன்ப துன்பங்களை உணர்வது.
    ‘வசம்’ என்றால் ‘உள்ளான நிலை, உட்பட்டது’ என்று பொருள்படும். ஆகவே உணர்ச்சிவயம் என்றால் ‘அறிவு உணர்ச்சிக்கு உட்பட்டநிலை.’ ஒன்றிற்கு ‘உட்பட்டநிலை’ என்றால், எந்த ஒன்று மற்றொன்றிற்கு உட்பட்படுகிறதோ அது தன் சுயத்தை இழக்கின்றது. அதாவது உணர்ச்சிவயப்படும்போது, அறிவு தன் சுயத்தை இழந்து விடுகின்றது.

    அப்படியென்றால் என்ன பொருள்? விவேகமுடைய அறிவு தன் சுயத்தை இழக்கின்றது. விவேகம் என்பது ‘நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் சிறப்பாகும்.’ எனவே அறிவு தன்சுயத்தை இழக்கும்போது தன்னுடைய விவேகத்தை இழக்கின்றது. அதன் விளைவு அறிவு நிதானத்தை இழக்கும். அறிவு சலனப்படும். அதாவது, ஆதியில்(Originally)சலனமற்று இருந்த அறிவு, பின்னப்பட்டு, விலங்கினமாக வந்த பிறகு மனிதனிடம் வரும்போது அது சலனத்தை இழப்பதைத்தான், அறிவு சுயத்தை இழக்கின்றது என்கின்றோம். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ‘நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் சிறப்பை அறி வு இழப்பதாலும், சலனப்படுவதாலும், அறிவு நுண்மான்நுழைபுலனை இழக்கும். அப்போது அறிவு, செயலின் பின்விளைவை முன்கூட்டியே அறிந்துகொள்ள இயலாது. அறிஞர் திருவள்ளுவர் அறிவு எது என்று கூறுவதிலிருந்து, அறிவு உணர்ச்சி வயப்பட்டால் அறிவு அதன் வரையறைக்கு உட்படாமல் போகின்றது. அந்த இரண்டு குறட்பாக்களையும் நினைவு கூர்வோம்..
    இப்போது அந்த இரண்டு குறட்பாக்களுக்குள் செல்வோம்.

    எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு …..குறள் எண். 355 (அதிகாரம் 36- மெய் உணர்தல்)

    அடுத்ததாக,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. …. குறள் எண் 423 (அதிகாரம் 43- அறிவுடைமை)

    அறிவு உடைமை அதிகாரத்தில் அறிவை எவ்வாறு ஒவ்வொரு மனிதனும், தனது உடைமையாக்கிக் கொள்வது என்று கூறியவர் அதற்கு முன்னதாக எழுதிய மெய் உணர்வு அதிகாரத்திலும் அறிவைப்பற்றி, எது அறிவு என்று அறிவு பற்றி கூற விரும்பியிருக்கிறார் திருவள்ளுவர். என்ன காரணம்? அவர் சொல்வது போல் அறிவு, அறிவை தனது உடைமையாக்கிக் கொள்ளும் பட்சத்தில், அது மெய்ப்பொருளை உணர்வதற்கும், மெய்ப்பொருளுடன் இணைவதற்கும் தகுதி உடையதாகின்றது.

        மெய் உணர்தல் என்றால் என்ன? மெய் என்றால் உண்மை என்று பொருள். ஆகவே இயற்கையைப் பற்றி உள்ளதை உள்ளவாறு உணர்தல் மெய் உணா்தல். அது என்ன உள்ளதை உள்ளவாறு உணர்தல்? ஒன்றேயாகிய இயற்கைதான்(இறையேதான்) எல்லாமாகவும் ஆகியுள்ளான் என்கின்ற உண்மையோடு மனிதன் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும்.  ஆரம்பகாலத்தில் இருப்பவர்களுக்கு இந்த உண்மையை கைவல்யப்படுத்திக் கொள்வதற்காக இக்குறளை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

    ‘ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்கின்ற பெரியபுராண உண்மை எப்படி உண்மையாகின்றது என்று பார்ப்போம்? ஒடு அணுக்களால் ஆனது. பொன்னும் அணுக்களால் ஆனது. அணுக்கள் ஒரே மூலத்திலிருந்துதான் உருவாகின. எனவே அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்கின்றது அப்பெரியபுராண வாக்கியம். சடப்பொருட்களிலேயே ஒற்றுமையினைக் காணப்பழகாவிட்டால் உணர்ச்சிகளுடைய வெவ்வேறு உருவங்களுடைய மனிதர்களிடையே எவ்வாறு அறிவு ஒற்றுமையைக் காண முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு பகல்கனவு போன்றதாகத்தான் இருக்கும். எந்தப்பொருளானாலும் அடிப்படையில் ஒன்றேதான் என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது அக்குறள்.

    அடுத்த அறிவு உடைமைக் குறளான 423 கூறுவது என்ன?

    சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கின்றது. யார் யார் என்ன சொன்னாலும் அது இயற்கையைப் பற்றியதாகவோ அல்லது இறையைப் பற்றியதாகவோ அல்லது எந்த ஒரு செய்தியாகவோ இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள உண்மை என்ன என்று சுயமாய் சிந்தித்து தெளிவடையச் சொல்கின்றது. வேதாத்திரிய முதல் பாடலே ‘சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்’ என்றுதான் இந்த மனித குலத்தை அன்புடன் அறிவுறுத்துகின்றது.

         அறிவு உணர்ச்சிக்கு வயப்படும்போது வள்ளுவர் கூறும் அறிவின் இலக்கணத்திற்கு ஏற்ப அறிவு எவ்வாறு இயங்க முடியும்? விளைவாக அறிவு துன்பத்தைதான் அனுபவிக்க நேரிடுகின்றது. உணர்ச்சிவயப்படும்போதுதான் மனிதன் சிறு குற்றங்களிலிருந்து பெருங்குற்றம் வரை செய்ய நேரிடுகின்றது. எனவே அறிவு உணர்ச்சி வயப்படுவதைத் தவிர்த்து, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இது ஒரு நாளில் வருவதன்று. அறநூல்களை வாசிப்பதாலும், அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலில் இன்பம் காண்பதன் மூலமும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதன் மூலமும் அறிவு உணர்ச்சி வயப்படுவதிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு மேன்மை அடையலாம்.

    அறிவின் சிங்கமாக இருக்கின்ற அறிவாளி[அறிவு+ஆளி(சிங்கம்)], அறிவுக்கூர்மையுள்ளவன் ஒரு செயலின் பின்விளைவை முன்கூட்டியே அறிந்து கொள்வான். ஆகவே அவன் ஆரம்பத்தில் இன்பம் தருவதாக இருந்தாலும், ஏமாந்து போகாமல், பின்னர் அச்செயலே துன்பம் தரும் என்பதனை முன்கூட்டியே, அறிவான். அவனே அறிவாளி. அறிவுக்கூா்மையுடையவன். அவ்வாறு அறிவாளியாக, அறிவுக்கூர்மை இல்லாதவன்தான் அச்செயலில் ஈடுபடுவான். பின்னர் அச்செயல் தீமை தரும்வரை அதனை தேனாகக்கருதி அச்செயல் புரிவதில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு, அப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்சுயத்தை இழந்துவிடுவான். அப்படிப்பட்டவனை முட்டாள் என்கிறார் புத்தர். இது சரிதானே!

    அறிவு ஏன் உணர்ச்சிவயப்படக்கூடாது எனப்படுகின்றது? எந்த ஒன்றும் மனிதனுக்கு கூடாது என்றால், அந்த ஒன்றால் மனிதனுக்கு துன்பம் வருகின்றது என்று பொருளாகின்றது. அதனைத் தவிர்த்தால் இன்பம்தான். எனவே அறிவு உணர்ச்சிவயப்படக்கூடாது என்றால் துன்பம் தவிர்த்து இன்பம் அனுபவிப்பதற்காகவேதான். ஆகவே அறிவு உணர்ச்சி வயப்பட்டால் இன்பத்தின் சாம்யமான ‘அளவு’ , ‘முறை’ கடைபிடிக்கமுடியாமல் போய்விடும். அதனால் துன்பம்தானே. மேலும் அறிவு உணர்ச்சியவயப்படும்போது தன்னிலை மறந்து சினம் கொள்கின்றது. மனஅலைச்சுழல் வேகமாகி சீவகாந்தம் வாரி இழக்கப்படுகின்றது.

    ஒரு அறிஞர் உணர்ச்சி, அறிவு பற்றி கூறும் அமுதமொழியினை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அறிஞர் எம். ஹென்றி கூறுகிறார்:-

    “உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய்விடும்”

    என்ன கூறுகின்றார் அறிஞர் ஹென்றி? உணர்ச்சி வயப்படக்கூடாது என எச்சரிக்கிறார்? உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமா? அல்லது அறிவு அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமா? அறிவே தெய்வம் என்றிருக்கும்போது அறிவாகிய தெய்வம்தானே அரியணையில் இருக்க வேண்டும்!! உணர்ச்சியை அரியணையில் அமரச்செய்துவிட்டு அறிவாகிய தெய்வத்தை வெளியே அனுப்பி விட்டால் தெய்வ அருள் எப்படிகிட்டும்? தெய்வத்தின் துணை எவ்வாறு கிட்டும் மனிதனுக்கு? தெய்வம் எவ்வாறு வழிகாட்ட முடியும்? தெய்வமேதான்  தானாகவும், மற்ற உயிர்களாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற  என்கின்ற பேருண்மையை கருத்தியலாக மட்டுமல்லாது எவ்வாறு செயல்முறையில் உறுதிபடுத்த முடியும்(Practical Enlightenment)? Both theoretical and practical understanding about God and oneself are required!!! That is Ecstasy and Real Enlightenment.

          ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவு என்ன என்று தீர்மானித்து விட்டுத்தான் அச்செயலைச் செய்ய வேண்டும். செயலுக்கேற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை/இறை நியதி இருப்பதால், செய்கின்ற செயலின் விளைவு நன்மையைத் தருமா அல்லது தீமையைத் தருமா என முன்கூட்டியே அறிய வேண்டும். விளைவறியாது செயலை செய்யக் கூடாது. இது விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வு அயர்ந்து விடாமல்(தூங்கிவிடாமல்) பார்த்துக் கொண்டால் அதுவே அயராவிழிப்புணர்வு(Constant Awareness).

         எந்த ஒரு செயலும் அறநெறிக்குட்பட்டே இருக்கின்றதா என அறிந்து விட்டுச் செய்ய வேண்டும். இயற்கையின்/இறையின் நெறி அறநெறி. ஆகவே இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் உச்சகட்டநிலையான மனிதன் எப்போதும் இயற்கையின்/இறையின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளாகும்.
    துன்பத்தை(தீமையை) அளிக்கக்கூடிய செயல் ஆரம்பத்தில் இன்பத்தை அளித்தாலும் அச்செயலைத் தொடரக்கூடாது. செயலைச் செய்யும்போது ஒவ்வொரு முறையும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு(Wonderful Recording System) கருமையத்தில் பதிவாகின்றது. தொடர்ந்து அந்த செயலை செய்து வந்தால் அது பழக்கமாகவிடுகின்றது. பழக்கம் நெடுநாள் செய்து வந்தால் அது வழக்கமாகி பழக்கவழக்கமாகின்றது.
    இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக்கொள்வோம். இதன் தொடர்ச்சியினை அடுத்த அறிவிற்கு விருந்தில்(07-02-2106 ஞாயிறு) பார்ப்போம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-147

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு.

                                                                                                                                  01-02-2016 – திங்கள்

     

    ஏன் அரூபம் ஐம்புலன்களுக்கு எட்டுவதில்லை? வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் மூலம்  அரூபம் ஏன் ஐம்புலன்களுக்கு எட்டுவதில்லை என்பதனை எவ்வாறு கூற முடியும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • FFC – 159-வினா விடை – 9

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    வினா விடை – 9

    FFC – 159

    31-01-2016—ஞாயிறு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 131
    (04-12-2015—வெள்ளி)

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    விடை:–

    ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல். தீய பழக்கம், பெரும்பாலும், ஆரம்பத்தில் இன்பத்தையே தந்தாலும் அல்லது தருவதுபோல் இருந்தாலும்/இருந்து ஈர்த்தாலும், பின்னர் அது தீங்கையேத்தான் நிச்சயம் தரும். அதுவரை அந்த தீயபழக்கத்தை தேனாக நினைப்பவனை முட்டாள் என்கிறார் புத்தர். பின்னர் அந்த தீயபழக்கம் தீங்கை தர ஆரம்பித்ததும் அதனை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வதில் வெற்றி பெறுவது,

    அத்தீய பழக்கத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம்,
     அதில் ஆழ்ந்து, ஆழ்ந்து அனுபவித்த ஆரம்பகால சுகம்,
     எவ்வளவு காலம், அது பழகப்பட்டிருக்கின்றது

    ஆகியவற்றைப் பொருத்து எளிமையாகவும் இருக்கலாம். அல்லது அறிஞர் ரூஸோ கூறும் ‘ஒழுக்கவாழ்விற்கு போராட வேண்டும்’ என்பதுபோல் போராடும்படியாகவும் இருக்கலாம். எந்த ஒரு பழக்கத்தையும் பழகுவது என்பது ஐம்புலன்களைக் கொண்டுதான் பழகவேண்டும். எந்த ஒரு தீயபழக்கமும் ஆரம்பத்தில் சுகம் கொடுத்து பிறகு சிக்க வைத்துவிடும். உணர்கருவிகளாகிய புலன்களை தவறாகப் பயன்படுத்தும்போது புலன்கள் அறிவை சிக்கவைத்துவிடுவதால், ஐம்பொறிகளும் (ஐம்புலன்களும்) அறிவிற்கு உணர்கருவிகளாகச் செயல்பட்டாலும், அறிஞர் திருவள்ளுவர் அவற்றை ‘பொறி’ என்பதனை கருவி எனும் அர்த்தத்தில் கூறாமல், ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்கின்றபோது ‘சிக்கவைக்கும்–அகப்படுத்தும் பொறிகளாகத்தான் எச்சரிக்கிறார். (traps-உதாரணத்திற்கு எலியைச் சிக்கவைக்கும் எலிப்பொறி)’

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடுவாழ் வார்.” …. குறள் எண் 6

    ஆகவே ஆரம்பத்தில் சுகம் கொடுப்பதாக இருந்து, ஆரம்பிக்கப்பட்ட தீயபழக்கம், பின்னர் தீங்கை கொடுக்கும்போது, அதனை விட்டுவிடுவதற்கு அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
    தீய பழக்கம் ஆரம்பத்தில் ஒருவேளை இன்பத்தைக் கொடுத்தாலும், ‘தீமை தீங்கைத் தரும் இயல்புடையதால்’, பின்னர் தீங்கைத்தான் நிச்சயமாகத் தர ஆரம்பிக்கும். அதுவரை அத்தீயசெயலை தேனாகக் கருதுகிறான் முட்டாள் என்பதனை வலியுறுத்திக் கூறவந்ததே புத்தரின் இந்த அமுதமொழி. உதாரணத்திற்குப் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், சூதாட்டம் போன்ற இன்னும் எத்தனையோ, தீயபழக்கங்கள் மனிதனிடம் உள்ளன. மனிதத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்த மானுடவியல் அறிஞரும் நம்முடைய குருநாதருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘மனிதனிடம் இருக்கும் தீமை, பழக்கம்’ என்கிறார். பழக்கம் பழகிவிட்டால் அது வழக்கமாகிவிடும். பழக்கவழக்கம் தீமையைத் தருவதாக இருந்து விட்டால் பின்னர் அதனை நிறுத்துவதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

    பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானி்க்காமல் அச்செயலில் இறங்குவது எதனைக்குறிக்கின்றது? அறிவின் கூர்மையின்மையைக் குறிக்கின்றது, காய்கறிகளை நறுக்க உதவும் கத்தி அதன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையற்ற கத்தியால்(மழுங்கிய) உபயோகமில்லை. அதுபோல் கூர்மையில்லாத அறிவால்(மழுங்கிய) பயனில்லை மனிதனுக்கு. அறிவு அரூபமாக உருவமற்று இருந்தாலும், அது கூர்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவு கூர்ந்து உணரமுடியும். அறிவு கூர்மையில்லாதிருந்தால், அது தனக்கே உபயோகமற்றுபோய்விடும். ஒன்று தனக்கே உபயோகமற்று இருப்பது விசித்திரமாக இல்லை?!. ‘நான் எனக்கே உபயோகமற்று இருக்கிறேன்’ என்றால் எப்படியிருக்கும்? கூர்மையின்மையால் உபயோகமற்றிருப்பது/போவது அறிவிற்கே துன்பத்தை தரும்.

    கூர்மையாக இருக்கும் அதே நேரத்தில், அறிவு தன்முனைப்பில் சிக்காமல் இருக்க விழிப்புடனும் இருக்க வேண்டும். ‘தான் கூர்மையாக இருக்கிறேன்’ என்று அறிவு கர்வம் கொள்ள நேரிடின் அது தன்முனைப்பில் சிக்க நேரிடும். கூர்மையாக இருக்க வேண்டியது அறிவின் இயல்பு. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மனிதன். அதில் பெருமை கொண்டு கர்வமடைய எங்கே நியாயம் இருக்கின்றது? நியாயமே இல்லை. அந்த அறிவுக்கூர்மை விவேகமான பேரறிவின் சிறப்பு. இது சுத்தஅத்வைதம். என் அறிவு கூர்மையானது என பெருமை கொள்கின்ற துவைதத்திற்கு இடமில்லை. கூர்மையான கத்தியை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் கூர்மையான கத்தி விரல்களையே காயப்படுத்திவிடும். சாணை பிடிக்கப்பட்ட அறிவாள்மனை சில நாட்கள் மிகக்கூர்மையாக இருக்கும். அதனை காயை நறுக்கப்பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிடில் சில நேரங்களில் விரல்களை காயமாக்கிவிடும். அதுபோல் அறிவின்கூர்மையால் தன்முனைப்பை வெளிப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். அடக்கம் வேண்டும்.

    ஒரு பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவதற்குக் காரணம், அறிவின் குறைபாடே! அறிவின் குறைபாடுகள் என்ன என்று ஆராயப்போனால், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம். ஆகியமூன்றும் அறிவின் குறைபாடுகளாகத் தெரியவரும். அவற்றை ஒவ்வொன்றாக சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

    முதலில் அறியாமையை எடுத்துக் கொள்வோம்.

    இயற்கையின்/இறையின் நெறியான அறநெறியை சமுதாயத்தில் நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்கள் பல இருந்தாலும், தவறிழைக்கும்போது அது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் குற்றம் எனகருதப்படுமானால், அப்போது அந்தச் சட்டம் தனக்கு தெரியாது(அறியவில்லை) என வாதிடமுடியாது. ‘Ignorance of Law cannot be an excuse’ என்பதுபோல், அறியாமையும் (அறியாமைக்கு அறியாமை காரணமாக இருந்தாலும்) மன்னிக்க முடியாததுதான். ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிறைய சட்டங்கள் உள்ளன. அவற்றிற்கு பெயர்களும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. ஆகவே வழக்கறிஞரல்லாத மற்ற குடிமகன்கள் எல்லாம், ஒருசட்டத்தைக் குறிப்பிட்டு ‘இந்த சட்டம் எனக்குத் தெரியாது’ என்று சொல்ல முடியாது.

    ஏனெனில் எந்த ஒரு சட்டமும் மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஆறாம் அறிவிற்குடைய அறநெறியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆறாம் அறிவுடைய மனிதன் அறநெறி வாழ்க்கை வாழத் தெரிந்திருக்க வேண்டும். அறநெறி வாழ்க்கை வாழாமல் போனால் அது சட்டத்தை மீறியதாகி, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சட்ட–எண்ணைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தி, தண்டிக்கும்.
    நெறியுடன் இயங்குகின்றது இயற்கை. நெறியுடன் இயங்குகின்ற இயற்கை ஒழுங்காற்றலாகவுள்ள பேரறிவே. அதுவேதான் இறை. ஆகவே இறையின் நெறியான அறநெறி என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். ஆகவே இது ஆறாம் அறிவிற்கு இருக்க வேண்டிய நெறிகளாகும். ஒழுக்கம் மீறும்போது/தவறும்போது அது தவறுதானே?! ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள். விளைவறிந்து செய்தாலும், விறைவறியாது செய்தாலும் அதற்குரிய விளைவு வந்தே தீரும். (குற்றம் என தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் ஒரே விளைவுதான் வரும்) சூடான பாத்திரம் எனத் தெரியாமல், குழந்தை அறியாமல் அதன் மீது கைகளை வைத்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். குழந்தை அறியாமையில் கை வைத்து விட்டது என்பதற்காக பாத்திரம் சுடாமலா இருக்கும்? பெரியவர்களும் கவனக்குறைவாக சூடான பாத்திரத்தின் மீது கையை வைத்துவிட்டாலும் கை சுட்டுவிடும். கவனக்குறைவுடன் செய்த செயலுக்கான விளைவு ‘கைசுட்டுவிடுதல்’

    அடுத்ததாக கடமையை எடுத்துக் கொள்வோம்.

    கடமை என்பது இயற்கையின்/இறையின் இயல்பு அல்லது பண்பாகும் ஆகவே கடமையை விடுவது அல்லது செய்யாமல் இருப்பது அல்லது தவறுவது தவறுதானே?! இயற்கை தனது கடமையை தவறாது செய்து கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு சூரியனைச் சுற்றி பூமி ஒரே சீராக வலம் வந்து கொண்டிருகின்றது. இது இயற்கையின் கடமைகளில் ஒன்று. அந்தக்கடமையில் ஏதாவது குறை ஏற்படுமாயின் என்னவாகும்? ஆகவே அந்த இயற்கையின் ஒரு சிறந்த உயர்ந்த அங்கம்தான் மனிதன். எனவே மனிதன் கடமையில் தவறக்கூடாது. கடவுளையும் கடமையையும் இணைக்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    கடவுளும் கடமையும்(17-12-1954)

    கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்.
    கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலிலுள்ள உண்மை அனைவருக்குமே பொருந்தும். ஏன் இவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது. இது மகரிஷியின் மாணவா்களாகிய மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல. மனிதனின் வாழ்வை பற்றிய ஒரு உண்மை கண்டுபிடிக்கப்படுகின்றது என்று சொன்னால் அது ஏதோ ஒரு தரப்பினருக்குமே மட்டும் பொருந்துவதாகக் கொள்வதற்கில்லை. இப்புவியில் வாழ்கின்ற மனிதகுலத்திற்கே பொருந்துவதாகத்தான் கொள்ள வேண்டும். கடமையையும் கடவுளையும் இணைத்து சொல்வதால் இந்த உண்மை கடவுளை அறியவேண்டும் என்கின்ற மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகாது. மனவளக்கலைஞர்களல்லாத, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

    கடமையைச் செய்வதும் கடவுளை அறிவதும் சமப்படுத்தப்படுகின்றது. கடமை என்பது என்ன? கடமை என்பது உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயலாகும். செய்த செயலுக்கு இயற்கைநீதியின்படி விளைவு உண்டு. அந்த விளைவு எது? விளைவாக வருவதுவே இறைவன். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்கின்ற உண்மையை தெரிவித்துள்ளது வேதாத்திரியம் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    ஈகை

    துன்பத்தில் இருப்பவருக்கு உதவுகின்ற பண்புதான் ஈகை எனப்படுகின்றது. ஆகவே ஈகை ஆறாம் அறிவின் சிறப்பல்லவா?! ஆதலால், ஈகையைச் செய்யத் தவறும்போது ஆறாம் அறிவின் சிறப்பு கீழிறங்கிவிடும். ஆறாம் அறிவின் சிறப்புபோனால் அது கீழ்மைதானே? விளைவு சிறப்பால் வருகின்ற உயர்வோ அல்லது நன்மையோ இழக்கப்படுமன்றோ! ஒன்று இழக்கப்படுகின்றது என்றால் அதன் விளைவு துன்பமன்றோ! அறியாமையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் அறியாமை என்பது மன்னிக்க முடியாதது, அறியாமைக்கும் ஏற்ற விளைவு வரும் என அறிந்து கொண்டோம். அந்த சிந்தனையில் கூடவே அறம் பற்றியும் அதன் அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை பற்றியும் அறிந்து கொண்டோம்.

    இப்போது அறிவின் குறைபாடான அலட்சியம் என்றால் என்ன என்று அறிவோம்.

    பொதுவாக இது அனைவரிடமும் அவ்வப்போது தலைதூக்கும். பழக்கத்தாலும் அலட்சியம் செய்வது உண்டு. எனவே அலட்சியம் பற்றி பார்ப்போம். அலட்சியம் அறியாமையைவிட மோசமானது. தெரிந்தும் உதாசினப்படுத்துதல். தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்றிருக்கும்போது, செய்வது குற்றம் என்று அறிந்தும் அலட்சியத்தால் செய்வது’ அதனைவிட கொடுங்குற்றம். இது தன்முனைப்பின் வெளிப்பாடாகும்.

    மூன்றாவது உணர்ச்சிவயம். இது எல்லோரிடமுமே உள்ளது. எல்லோரிடம் இருப்பதால் அது சரி என்றாகிவிடாது. .இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இயல்பும் – உயர்வும் (22-12-1953)

    “அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.“

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    உணர்ச்சி பெரியதா அல்லது அறிவு பெரியதா? உணர்ச்சி உயர்ந்ததா அல்லது அறிவு உயர்ந்ததா? உணர்ச்சி அறிவை உணா்வதில்லை. அறிவுதான் உணர்ச்சியினை உணர்கின்றது. எனவே அறிவுதான் எல்லாவகையிலும் சிறப்புடையது, உயர்ந்தது. அறிவேதான் இறையாக மனிதனிடம் உள்ளது. உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளது மனிதர்களிடம் என்றால் என்ன நிலையில் உள்ளது இந்த சமுதாயம்? உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளதால் அறிவைக் கொண்டுதான் மனிதன் செயல்படமுடியும் என்கின்றபோது உணர்ச்சியிடம் தோற்ற அறிவு(இறை) எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும்? அறிவை(இறையை) தோற்கடித்த உணர்ச்சியால் தனக்கும், தன்னுடன் வாழும் சகமனிதர்களுக்கும் எவ்வாறு நலமளிக்க முடியும்? எனவே மனவளம் கருதி அறிவால் உணர்ச்சியை வெல்கின்ற கலைதான் மனவளக்கலை. அரசன் சேவகனிடம் அடிமையாவது போன்றது உணர்ச்சி அறிவை வெல்வது. அரசன்(அறிவு) சேவகனுக்கு(உணர்ச்சி) ஆணையிடுவது போன்றது அறிவு உணர்ச்சியினை வெல்வது. அறிவு எப்போதும் உணர்ச்சிக்கு வசப்படக்கூடாது. அறிவு உணர்ச்சிக்கு வசப்பட்டால் அது அறிவிற்கு உடைமையாகாது(அறிவுடைமையாயகாது). அதனால்தான் எது அறிவு என்று கூறவந்த திருவள்ளுவர் அறிவைப்பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறார்.

    அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(01-02-2016 புதன்) அறிவோம்.

    Loading