admin

Author Archives

  • FFC-299(263) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?2/3

     வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC-299(263)

    22.07.2020-புதன்

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 2/3

    Analysis_of_Thought

    கடந்த அறிவுக்கு விருந்தில் சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY) அறிந்துகொண்டோம். இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.

    சிந்திக்கும் அரிய கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அவசியம். அந்த பயிற்சி இந்த இணைய தள சத்சங்கத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். இந்த சிந்தனைப் பயிற்சி ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    1) சிந்திக்க வினாக்கள் 

    2) சிந்திக்க அமுத மொழிகள்

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்

    4) சிந்திக்க குரு–சீடர் உரையாடல்

    5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை.

    இப்பயிற்சிகளின் நோக்கங்கங்களைத் தனித்தனியாக அறிவோம். நோக்கம் அறிந்து எந்த ஒன்றையும் செய்வது நலம் தானே?

    அறிவு எதனையும் அறிவு பூர்வமாகத்தான் அறிய விரும்பும்.

    அதாவது அறிவு உண்மையை அறியத்தான் விரும்பும். ஏனெனில் அறிவு மெய்ப் பொருளிருந்து வந்தது அல்லவா?

    அறிவுப்பூா்வமாக அறியும் போதுதான் அது உள்ளத்திற்குச் சென்று, தரம் மாறுவதற்கு, மனம் ஒத்துழைக்கும். சிந்தனைப் பயிற்சியினை ஒரே பயிற்சியாக வைக்காமல் சிந்திக்கப் பழகுவதற்காக ஐவகையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதன் நோக்கத்தைத் தனித்தனியாக அறிய வேண்டும்.

    1) சிந்திக்க வினாக்கள் – இப்பயிற்சியின் நோக்கம்:

     வினாக்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு விடைகளைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்விகளைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். சில வினாக்களுக்கு அவ்வப்போது விடைகளும் தரப்படுகின்றன.

    2) சிந்திக்க அமுத மொழிகள் – இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அறிஞர்கள் மொழிந்தவை ஏன் அமுத மொழிகள் எனப்படுகின்றன? அமுதம் என்கின்ற சொல்லுக்கு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

    வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் மூன்று இன்பங்கள் கிடைக்கின்றது.

        ஒன்று தாகம் தீர்கின்றது.

       இரண்டாவது நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது.

      மூன்றாவது உணவாகவும் அமைகின்றது.

    நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தணிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்பங்கள் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

         இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

       அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும்.

       தெளிவானால் அறிவு அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு விழையும். அவ்வார்வம் ஏற்படும்போது அறிஞர்களின் அறிவு நிலைக்கு ரசிப்பவர் அறிவும் உயரும்.  அதானல் திருத்தங்கள் தேவைப்படின் கேட்பவர்  அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். அதுவரை இருட்டில் இருந்த அறிவொளியை வீசத்தொடங்கும். அறிவொளியாகத் திகழும்.

    வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு?

    அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

    வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது கழிவாகி வெளியேறிவிடும்.

        எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையைத் தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல்) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

    1) அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

    2) வாழ்வியலைப் பற்றிய உண்மைகளைக் கூறும்.

    3) பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

    4) அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

    5) ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

    6) ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

    7) ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

    8) கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

    9) இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

    10) தரம் மாற்றத்திற்கு மன தைரியத்தை ஊட்டும்.  தன்னம்பிக்கையை வளர்க்கும்.

    பத்து  பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால்  அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறிவதில்லை.

    பயனை  இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனி அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம்.

    அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடவேண்டும்.

    சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தெரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பார்க்கலாம்.

    அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும்; சலிப்பே இராது.

    நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள்.

    வாழ்க வளமுடன்.

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள் –   இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள்.

         ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள்,

        இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள்,

        மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

    கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க

        உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம்.

      கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள்.

      எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்

    கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது,

      அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி யானால்  வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப் பெருங்கடலை நீந்தி பிறவிப் பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

    1. நல்ல கவி (19-12-1962),
    2. கவியின் சிறப்பு (1954),
    3. சிறப்புடைய கவிகள் (1954),
    4. கவியின் பெருமதிப்பு,
    5. கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் (1954),
    6. கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல் (1954),
    7. கவியின் ஆற்றல் (1954),
    8. அருட்பா (1954),
    9. பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும் (1954),
    10. கவிகள் எவ்வாறு வருகின்றன? (1954)
    11. கீழ்த்தரமான கவிகள் (1954),
    12. கவிகள் பொதுச் சொத்து (1954),
    13. நிறைவாய் இருக்க (1988)

    ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார். 

    இக்கவிகளை ஞானக்களஞ்சியம் பாகம் – 1 ல் உள்ளன.  அதனை  வாசித்து பயனடையுங்கள்.  மேலும் சிந்திக்க கவிகள் பயிற்சியின் அவசியம் விளங்கும்.

    கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.

    பேச்சினைப் பெய்கின்ற மழையோடும்,

    எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும்,

    கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார்.

    இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.

    கவியின் பெருமதிப்பு (1954)

    ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய

    ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி

    பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்

    பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்

    உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை

    ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்

    பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்

    பேரோட்ட முடை சீவநதி போலாகும்.               

                                     — வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும்.

    கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும்.

    கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும்.

    அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேல்க் கவிகள் எழுதியுள்ளார்.

    கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது

    கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.  அதே போன்று திருவள்ளுவரை இருபதாம் நுற்றாண்டில் மானசீகமாக் குருவாக ஏற்றுக்கொண்ட நம் குருநாதர் அருளிய ஞானக்களஞ்சியம் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

    ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

    அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார்.

    அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு,

    அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும்,

    மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனை ஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும்.

    அறிவினர்களின் கவிகளை வாசிப்பதும்,

    நினைவில் கொள்வதும்,


    உட்பொருளை நினைவில் கொள்ளுதலும்

    அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து

    பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.  இரண்டுமே ஒன்றுதான்.  பிறவியின் பயனை அடைவது என்பதே  பல பிறவிகளில் சாதாரண வாழ்வு வாழ்ந்தது போலன்றி இப்பிறவியலாவது வாழ்வாங்கு  வாழ்கி்ன்ற  பேரின்ப வாழ்வதுதானே!

    இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே   “அங்கிங்கெனாதபடி”  எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.

    திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்?

    அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன,.

    எனவேதான் மகரிஷி அவர்கள், தன்னுடைய  சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார்.

    ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அறிஞர்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

    கவிகளால் சிந்தனை வளம் பெருகும்.

    ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில்  “சிந்திக்கக் கவிகள்” என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    கவிகளால் பயன் பெறுவதில் நான்கு நிலைகள்:

    முதல் நிலை:  கவிகளை வாசிப்பது என்பது மூளை வரை மட்டுமே செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும்போது, அதற்கு மூளை உதவியாக உள்ளதால் ‘மூளை வரை செல்லும்’ எனப்படுகின்றது.  அதற்கு மேல் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்

    இரண்டாம் நிலை: இந்நலையில் மனம் வரை செல்லும்.  அதாவது கவியின் உட்பொருள் மூளையைக் கடந்து மனம் வரை செல்லும்.  அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    மூன்றாம் நிலை: மூளை, மனம் வரை சென்ற உட்பொருளை அறிவு பின்னர் உருவகப்படுத்திப் பார்ப்பது மூன்றாம் வகை.   இந்த நிலையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது  என்று பொருளாகின்றது.  அதனால்தான் அறிவு அதனைத் தீவீரமாக சிந்திக்கின்றது.

    நான்காம் நிலை:  கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் முழுப்பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருக்கும். கவியை வாசிக்கும்போது, கவி அருளிய அருளாளரை நினைந்து, நினைந்து, போற்றி, போற்றி அவரது அரிய திறமைகளைம் பெருமைகளையும் நினைத்து தனக்குள்ளாகவே மகிழலாம்.  வாய்ப்பு இருந்தால், ‘யான் பெற்ற இவ்வின்பம் பெரு இவ்வையகம்’ என்பதற்கிணங்க மற்றவர்களிடம் அதனைப் பற்றிப்பேசி தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும் மகிழ வைத்து ஊக்குவிக்கலாம்.  ஆனால் நம் கவனம் மட்டும் அறிவின் முழுமையை அடைவதிலேயே இருக்க வேண்டும்.

    இது போன்ற மகிழ்ச்சி அவ்வைத்தாய் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் அவ்வைத்தாய் அறிவினரைச் சேர்ந்திருந்து அவரை கனவிலும், நனவிலும் நினைப்பதை இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய்.

    4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்-இப்பயிற்சியின் நோக்கம்:

    மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம்.

    தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமைகின்றது. ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்து நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

       ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும். 

        இதுவரை சிந்தித்தலின் நான்கு பயிற்சிகளைப் பார்த்தோம்.  அடுத்த பயிற்சியான சிந்தித்தலின் அன்றாடசுயசோதனை பயிற்சியினை அடுத்த அறிவிற்கு விருந்து பகுதியில் 26.07.2020 அன்று அறிந்து கொள்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க  அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-315(SV143 & FFC-166)

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்- 315 (FFC-166)

     

    20-07-2020 – திங்கள்

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

    விடை:

    ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.

    எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய   குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?

    •   பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
    •  ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
    • அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
    •   இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
    •  நம்முடைய தற்போதையப்பிறவி பரிபக்குவ நிலையினை அடைந்துள்ளமையால்தான்,
    •   நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
    •   நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.

                வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

     நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.

     ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.

     குரு-சீடா் உறவு  நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.

    மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,

    ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
    அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’

    என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

    அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.

    இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

    அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்,
    மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
    நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.

    இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?

    அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?

    தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.

    அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

    அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.

    நான்காவதாக  அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .

    இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?

    திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.

     நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார்.
    எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.
    மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.

    அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.

    “ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”

    இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.

    ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.” . குறள் எண் 351

    “எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில்  வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை, இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.

     திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

     இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

     முதல் படி:

    ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன

     போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

     

    இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

     இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

    3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

    4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

    5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.

     மூன்றாவது படி: பயிற்சியாகும்.

     ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.

     நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.

     வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.

    மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

     அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

    1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.

    2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

     நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

    வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • FFC-298(262) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?1/3

    வாழ்க மனித அறிவு!                                        வளர்க மனித அறிவு!! 

    lotus

    [rev_slider home-slider-1]

    FFC-298(262)

    19.07.2020-ஞாயிறு

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 1/3

     

     வாழ்க வளமுடன்!

        அவசியமா என்றால் எல்லோருக்கும் அவசியமில்லை.  ஓர் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்வோம். 

        மீன்குஞ்சிற்கு நீந்துவதற்கு  நீச்சல் பயிற்சி தேவையிருக்கின்றதா?  இல்லையே!  காரணம்  அது பிறந்ததுமே வாழ்வைத் தொடங்குவது  நீரிலே.  ஆகவே பிறப்பதும் நீரில்தான்.  நீரில் வாழ்வு ஆரம்பிக்கும்போது அது நீந்தித்தான் ஆகவேண்டும். ஆகவே மீன்குஞ்சு  பிறந்த உடனே   நீந்துகின்றது. நீந்தத் தெரியவில்லையெனில் அது மடிந்துவிடும்.  பிறக்கும் குஞ்சுகளெல்லாம் உடனே இறந்துவிடவேண்டியதுதான்.  எனவே இயல்பாகவே நீந்த ஆரம்பித்து விடுகின்றது அது.

          இது இயற்கையில் உள்ள ஏற்பாடு என்று நினைந்து மகிழலாம்.  ஆனால் இயற்கையில் உள்ள ஏற்பாடு என்பதைவிட  பிறந்தவுடனே வாழ்க்கையை நீரில் தொடங்க வேண்டியுள்ளதால்  கருமையத்தில் நீந்துகின்ற திறனுடனே பிறக்கின்றது மீன்குஞ்சு என்கின்ற ஆராய்ச்சியினால் அறிந்த  கண்டுபிடிப்பு மேலும் ஆனந்தத்தை அதிகரிக்கும் அல்லவா?  அதிகரிக்கும்!!

         எல்லாருக்கும் சிந்தபை்பயிற்சி அவசியமில்லை என்பது எப்படி?     

              மீன்குஞ்சுபோன்று சிலர்  சிந்திக்கும் இயல்புடையவர்களாகவே  உள்ளனர். அதாவது  அவர்கள் இயல்பாகவே

         சிந்திக்கும் பழக்கம் உடையவர்கள்.  சிந்தித்து சிந்தித்து பழக்கமாக்கிக்கொண்டதும் சுயபயிற்சியே.  மேலும் அவர்கள் 

         சிந்தித்தலில் ரசனை உள்ளவர்கள். சிந்தித்தலின் ருசியினை உணர்ந்தவர்கள்.

         அவர்களது ஆன்மாவின் இயக்கம் விஞ்ஞானமய கோசத்தில் இயங்கும். 

         அதற்கு அடுத்தபடியான  ஆனந்தமய கோசத்திலும் இயங்கும். 

         ஆகவே  சிந்தித்தலில் ஆனந்தம் அடைபவர்கள் அவர்கள். 

         அனந்தத்தை உணர்ந்து ஆனந்தம் அடைபவர்கள் அவர்கள்.

    தான் சிந்தனைச்சிற்பியாக திகழும்  அவர்கள் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க  மற்றவர்களும் தங்களைப்போன்று சிந்தித்து உயர்வதற்கு உதவலாம்.  அங்கேதான் சிந்தனைப்   பயிற்சி தேவையாக உள்ளது.  

         ஆகவே சிந்திக்கப் பயிற்சி தேவையானவர்களுக்கு  சிந்தனைப் பயிற்சி அவசியம் தான் என்று பொருள்கொள்ள வேண்டியுள்ளது.  சிந்திக்கக் கூட பயிற்சி உண்டா என்றுகூட ஐயம் எழலாம்.  எந்த ஒன்றும் ஆரம்பத்தில் பயிற்சியுடன் ஆரம்பிக்க வேண்டும்.   பயிற்சியின்றி சாதனையாக்க முடியதாது.   

    சிந்தனை ஆறாம் அறிவின் வளம்:

    சிந்தனைவளம் இயற்கைவளங்களில் மிக மிகச் சிறப்பானதும், முதன்மையானதுமாகும். ஆறாம் அறிவின் துணை கொண்டு இயற்கை வளத்தைக் கண்டுபிடித்து, வாழ்வின் வளமாக்கி பயன் அடைந்து வரும் சமுதாயம் அதே இயற்கையின் ஆறாம் அறிவினுடையப் பயனாகிய சிந்தனை வளத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றது மிகவும் வருத்தப்படுவதாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிந்தயைாளர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மலர்கின்ற அச்சிந்தனைப் பூக்களின் வாசனையாவது நுகரப்படுகின்றதா என்றால் அதுவும் மிகமிகக் குறைவே.

    அவர்கள் கூறிய அறநெறி அறிவுரைகளையாவதுக் கேட்டு மனித குலம் திருத்திக் கொண்டு வாழ்கின்றதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை ஆகிய அதிகாரங்களை ஒதுக்கி அதில் பத்து குறட்பாக்களின் வாயிலாக ஒரு பொருள் பற்றி வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கூறியும் இதுவரை இந்த சமுதாயத்தில் ஒழுக்கமும் அறிவுடைமையும் சிறப்புற்றுள்ளதா? சமுதாயம் திருந்தியுள்ளதா?

    11230650_1612478765690891_6536263016119760624_n

    இயற்கைக்கு/இறைக்கு நாக்கு இல்லை:  

    தனக்கு நாக்கு இல்லை என்பதால் சிந்தனையாளர்களின் நாக்காக இருந்து கொண்டு, சிந்தனையாளர்களின் வழியாக, இயற்கை தன் குழந்தைகளுக்கெல்லாம் சொல்லியும் குழுந்தைகளின் கேளா அலட்சிய நிலையைப் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் இயற்கை அன்னைக்கு? சிந்தனையைாளர்கள் கூறுவது யாருடையது? இயற்கையினுடையதுதானே! இப்போது கூறிய இந்த இரண்டு கூற்றுக்களும் ஒருமை விஞ்ஞானத்தின் புரிதலின் வெளிப்பாட்டின் கீழ் கூறப்பட்டதாகும். ஏதோ மொழி வளத்திற்காக கூறுவதன்று.

    அமுதமொழிகளை ரசிப்பதே சிந்தனை-உயர்தலின் அறிகுறி:

    சிந்தனையாளர்கள் கூறும் வாழ்வியல் அறிவுரைகளைக் கேட்பதற்கே சிந்தனை அவசியமாகின்றது. முதலில் அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு உண்ண ஆர்வம் இருப்பது போல் அறிவுப்பசிக்கு உண்ண ஆர்வம் இருக்க வேண்டும். அதுதான் சிந்தனையாளர்கள் உதிர்க்கும் அமுதத்தை தேனமுதமாக்கி உண்ணுவதாகும்.

       சிந்தனையாளர்களின் அமுதமொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருப்பதே சிந்திக்கக் கற்றுக்கொள்வதன் அறிகுறியாகும். அதுதான் சிந்திக்கும் கலையின் முதற்படியாகும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் அங்கே சிந்தனை வாடாப் பூ மலர ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    செல்வங்களில் முதன்மையானதுஅறிவுச்செல்வமாகும்:

    மனிதன் சிக்கலின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பல வளங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளங்களில் ஒன்று செல்வம். செல்வம் என்றால் பொதுவாக சமுதாயத்தால் கருதப்படுவது யாதெனில் பொருட்செல்வம் மட்டும் தான். ஆனால் செல்வ வளங்களில் முதன்மையானது அறிவுச்செல்வம். பொருட் செல்வத்தை ஈட்டுவதற்குக்கூட அறிவு தேவைப்படுகின்றது.

    சீர்திருத்தம்(06.05.1994)  

    சிந்தனையும் சிக்கனமும் சீர்திருத்தம் மூன்றும்,

    சிறப்பான செல்வவளம், வாழ்வின் வளம் நல்கும்.  

                                                                                                    — ஞா.க.: 1773

    Scientist of Consciousness

    நல்லோர் இயல்பு

    பண்பு(02.01.1955)

             சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,

               பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு.”     …       ஞா.க. 632

    பொருட் செல்வத்தை ஈட்டுவதற்கானத் திறமையை முதலில் அறிவு பெற வேண்டும். இங்கேயும், அதாவது பொருட்செல்வத்தைத் தேடும்போதுகூட அறிவு தேவையாய் இருக்கின்றது. பொருட்செல்வத்தை,

    • எவ்வாறு,
    • எவ்வழியில்,
    • எவ்வளவு               

           ஆகிய அறவழிகளில் ஈட்டுவது,

    • ஈட்டியதை எவ்வாறு அறவழியில் சேமிப்பது.

    எவ்வழியில் தனக்கும், குடும்பத்திற்கும், மற்றும் வறியோர்க்கு ஈகையாக செலவழிப்பது ஆகிய முடிவுகளை அறிவுதான் எடுக்க வேண்டும். பொருட் செல்வம் ஈட்டுவதற்கும் அறிவு தேவையாக இருக்கின்றது. இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்குவதற்கும் அறிவுதான் தேவைப்படுகின்றது.

    ஆகவே செல்வத்தில் முதன்மையானது அறிவுச் செல்வமாகும். ஆனால் இத்தகைய அறிவைப் பற்றிய அறிவு(Knowledge of Consciousness) இல்லாமல் உள்ளது மனித சமுதாயத்தில். இது பெரும் குறை. இப்பெரும் குறையை வைத்துக் கொண்டு சமுதாயம் எவ்வாறு வளமாக, நலமாக, அமைதியாக வாழ முடியும்?

    அறிவைப் பற்றிய விஞ்ஞானத்தை(Science of Consciousness) இயற்கை,

         சாதாரண குடும்பத்தில்,   பேறு பெற்ற,   கொடுத்து வைத்த சின்னம்மாள், வரதப்பன் தம்பதியினர்           தவமிருந்து பெற்ற வேதாத்திரி எனும் தெய்வீகக் குழுந்தையும்,

     பின்னர் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக    எடுத்து இயம்புகின்றது.   தயவு செய்து அதனைப் படித்து நலம் பெறுங்கள்.

    Studied in the city of the Universe:

    Who studied in the city of the Universe? நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி தான் பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் படித்து மகத்தான வெற்றியும் பெற்றிருக்கிறார்.  

    அதன் விளைவுதான்

         இயற்கையியல்,

         ஒருமையியல் (Science of Oneness–Science Of Pure Advaida),

         அறிவின் அறிவியல்(Science of Consciousness)

         வாழ்வியல், 

        குடும்பவியல்,

         உலக அமைதியியல்(Science of World Peace).    ஆகிய இயல்களின் தோற்றம்.

    மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள வேதாத்திரி மகரிஷியினுடைய, இயற்கையியல் மற்றும் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை இயற்கையால் கொண்டு போக முடிந்துள்ளதற்கான காரணம் மகரிஷியின் சிந்தனைகள் தான்.

    திருவள்ளுவர், திருமூலர், அவ்வையார் போன்ற அறிஞா்கள் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றனர்? அவா்கள் இயற்றிய அறநூல்கள் தான் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகின்றனர் மாணவர்கள். அறிஞர்கள் சிந்தித்ததன் பயனாக பின்னர் வரும் சமுதாயம் பயன் பெறுகின்றது.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக்கழக்தில் படித்த இரகசியம் வெளிவந்த நிகழ்ச்சி ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்ததை அறிந்து கொள்வோம்.

    மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகக் கூட்டத்தில் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்தாராம். மகரிஷி அவர்களின் பேச்சால் ஆச்சரியமடைந்த அமெரிக்கர்கள் மகரிஷி அவர்களிடம் “You are speaking on a wide variety of topics. Which was the University you studied in, Swamiji?” எனக்கேட்டார்களாம்.

    அதற்கு மகரிஷி அவர்கள் “ I did not study in any University; I only studied in the city of the Universe” என்றாராம். மகரிஷியின் இக்கூற்று உண்மைதானே!

    அதாவது இயற்கை அவருக்கு அறிவுறுத்தி அவர் சிந்தித்ததை மற்றும் உள்ளுணர்வாகப் பெற்றதை வாழ்க்கையில் நடைமுறையில் சரியாக உள்ளதா, என உறுதி செய்ததை, எல்லாவற்றையும் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார் உலநலத்தொண்டரான அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அதுவும் அவர் படித்தது பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் என்பதும் சரிதானே! அருந்தவத்தால், அவர் மனதை பிரபஞ்சம் வரை விரித்து அங்கேயே நிற்கின்ற பழக்கத்தை கைவல்யப்படுத்திவிட்டார்.

    ஆகவே, இது வரை வாழ்ந்த அறிஞர்களின் வாயிலாகவும், இயற்கை அவருக்கு, உணா்த்தியதை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் சாத்தியம் என்றும் கூறுகிறார்.

    தாத்தா விதைத்த அவரைச் செடி:

    ஒரு முறை. கும்பகோணத்தில் நடந்த பயிற்சியின் முடிவு நாளன்று, அவரது உலக நலத்தின்பால் உள்ள எண்ணத்தை, அவா் ஒரு கதையின் வாயிலாகக் கூறினார்.

    தாத்தா ஒருவர் அவரை விதையை நிலத்தில் ஊன்றி, நீர் ஊற்றி, அது முளைத்து, வளர்ந்து கொடியாகி, அதற்கு பந்தலும் போட்டு விட்டார். கொடி உயர்ந்து காயும் காய்த்து விட்டது. ஆனால் பந்தலுக்கு மேல் உயர்ந்த கொடியில் காய்த்திருக்கும் காயை அவரால் எட்டிப் பறிக்க முடியவில்லை.

    அதற்கு அவரது பேரன் அவரிடம்  “தாத்தா! என்னை உங்கள் தோள் மீது ஏற்றி உட்கார வையுங்கள். உங்கள் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு காயைப் பறிக்கிறேன் என்று கூறினானாம்.

    இந்த கதையைக் கூறிவிட்டு மேலும் மகரிஷி அவர்கள் தொடர்ந்தார். அவரது மாணவ–நண்பர்களிடம் கூறியதாவது:-  

    “அதுபோல் நான் அவரைச் செடியின் விதை ஊன்றி, செடியும் முளைத்து, பந்தலும் போட்டு விட்டு. கொடி படர்ந்து பூ பூத்து காய்க்க ஆரம்பித்து விட்டது.

    நீங்கள் என் தோளின் மீது உட்கார்ந்து காயைப் பறியுங்கள். இயற்கை எனக்குத் தெரிவித்ததை எல்லாம் நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். ஒன்றையும் விட்டு விடவில்லை.

    இனி இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் எளிதாக சிந்திக்க முடியும். நீங்கள் ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள். ஆன்மீகத்தில் ஆழ்ந்து போனால், இச்சை இல்லாமலாகி, புலன் இன்பமே அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்கின்ற மாயையான அச்சத்தை நீக்கி, ஆன்மீகத்தை வாழ்வியலாக்கி அரும்பெரும் சாதனைகளைப் படைக்க இருக்கின்றீர்கள்” என்றார்.

    சிந்திக்கவில்லை எனில் அது ஐந்தாம் அறிவு:

    அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கு அறிவு சிந்திக்க வேண்டும். சிந்தனை என்பது மனித வாழ்விற்குத் தேவையான வளமாகும் மனித இனத்திற்கும் ஐயறிவு விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடே ஆறாம் அறிவுதான். சிந்திக்கின்ற அறிவுதான் ஆறாம் அறிவு. சிந்தித்தால்தான் அது ஆறாம் அறிவு. இல்லை எனில் அது ஐந்தாம் அறிவு. எப்படி? சிறு நடைமுறை நடப்புகளின் வாயிலாக அறிவோம்.

    இருவருக்கு இடையே வாய்ச்சண்டை நடக்கும் போது, அது அதிகமாகி, முதலாமவர், இரண்டாமவரை  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே.” என்றால் இரண்டாமவருக்குச் சினம் பொங்கி, அதிகமாகி, கையை ஓங்கி முதலாமவரை அடிப்பதற்கு செல்வதைப் பார்த்திருக்கலாம். காரணம் என்ன?

    ஒரு காரணம், முதலாமவர் இரண்டாமவரை சொன்னது முதலாமவருடைய கீழ்த்தரத்தைப்(மிருகம் என்று கூறியது) பற்றிய உண்மைக்கூற்று.

    இரண்டாவது காரணம், மனிதர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள், ஏங்குபவர்கள். தன்னைப் பற்றி கற்பனையாக, பொய்யாக பிறர் புகழ்ந்துரைத்தாலும், அதில் மகிழ்ச்சி அடையும் இயல்புடையவர்கள். எனவே,  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே” என்று இரண்டாமவரின் கீழ்த்தரத்தைச்சுட்டிக்காட்டியது இரண்டாமவருக்கு அவமானமாகி விட்டது.

    சிந்தித்திருந்தால் அங்கே சண்டைக்கே வாய்ப்பில்லை. சிந்திக்காததால் சினம் அதிகமாகி கைகலப்பு ஏற்படும் அளவிற்கு சென்று விடுகின்றது, சில நேரங்களில் கொலை நடக்கும் அளவிற்கும் சென்றுவிடுகின்றது நிலைமை. பிறகு வாழ்நாள் முழவதும் வருந்த வேண்டியுள்ளது.

    சிந்தித்தல் பொறுமையைத் தரும்.

    அறிவு ஆட்சி செய்திருக்கும் அந்த நிகழ்வில்.

    பின் விளைவுகளைத் தடுத்திருக்க முடியும்.

    நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர் மிருகமாகி விட்டார்.

    சிந்தித்தல் ஆறாம் அறிவின் சிறந்தகலை:

    சிந்தித்தால்தான், ஆறாம் அறிவு,

    பரிணாமத்தில் மனித இனத்திற்கு முந்தைய இனமான விலங்கினப் பண்பின் வாசனையால் மறந்தும்,

     ஐந்தாம் அறிவாக செயல்பட விடாமல்,

     ஆறாம் அறிவாகச் செயல்பட முடியும்.

    சிந்தித்தல், ஆறாம் அறிவை முதன்மைச் செல்வமாக்கும், துன்பங்கள் நீங்கி பேரின்பத்தை அனுபவிக்கச் செய்யும். சிந்தித்தல் என்பது ஆறாம் அறிவின் சிறந்த கலை.

    எல்லாக் கலைகளிலும் எல்லோராலும் சிறந்து விளங்க முடியாது.

    ஏதாவது ஒரு கலையிலும் எல்லோராலும் சிறந்து விளங்குவது சாத்தியமில்லை.

    ஆனால் சிந்தித்தல் கலை எல்லோருக்கும் பொதுவானது. ஏனெனில் மனிதன் என்கின்ற உயிரினத்திற்கு அடையாளம் ஆறாம் அறிவே. மனிதனுக்கு அடையாளமான ஆறாம் அறிவினுடைய அடையாளமே சிந்தித்தல் தானே. ஆகவே சிந்தித்தல் எல்லோருக்கும் பொதுவானதாகின்றது.

    சிந்தித்தல்தான் ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும்.

    ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலோர் சிந்திப்பது கிடையாது.

    சிறந்த சிந்தனையாளர் என்று புகழப்படும் அளவிற்கு சிந்திக்கமுடிய வில்லையாயினும் வாழப் பிறந்துவிட்ட மனிதன் வாழ்க்கையை வெற்றிகரமாக துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்காவது கீழ் கண்டவாறு சிந்திக்க வேண்டாமா?

    • நல்லெண்ணமாக இருப்பதற்கு எண்ணத்தை ஆராய வேண்டாமா?
    • பேராசை ஆட்டிப்படைக்காமல் இருக்க, ஆசையை சீரமைக்க வேண்டாமா?
    • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலை என்று தெரிந்தும் சினம் தவிர்க்க வேண்டாமா?
    • இன்பத்தைச் சுரண்டும் கவலையை ஒழிக்க வேண்டாமா?
    • அறிவிற்கு விருந்தளிக்க நான் ஏன் பிறந்தேன் என தெரிந்து கொள்ள வேண்டாமா?

    சிந்தனையின்மையால் தான் வாழ்க்கையில் தவறுகள் நடக்கின்றன. அதன் விளைவுதான் துன்பமாகின்றது. தனக்கு மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் துன்பம் ஏற்படுகின்றன.

    கூர்மை என்பது எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்?    

    அறிவு தன்னுடைய திறனைப் பற்றிக் கூறுவதற்கு  ‘அறிவுக்கூர்மை’ என்கின்ற சொல்லை ஏற்படுத்திக் கொண்டது.

    கூர்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்? உருவம் உள்ள பருப்பொருளுக்கு கூர்மை இருப்பது சாத்தியமாகும்.

    உதாரணத்திற்கு காய் நறுக்கும், உருவமுள்ள கத்தி கூர்மையாக இருக்கும். இருக்க வேண்டும். இல்லை என்றால் காய் நறுக்கவே முடியாமலும் போகலாம். அல்லது எளிதாக நறுக்க முடியாது. சிரமப்பட்டுதான் காயை நறுக்க வேண்டும். காய் நறுக்குவதில் நளினம் இருக்காது. கத்தி கூர்மையாக இருந்தால் தேவையில்லாது சிரமப்பட வேண்டியதில்லையே! இந்த விளக்கம் உருவமில்லா கத்தியைப் பற்றியது.

    ஆனால் நாம் இப்போது சிந்திப்பதோ உருவமில்லா அறிவினுடையக் கூர்மையைப் பற்றி.

    அறிவிற்கு உருவமில்லை என்பதால் அறிவில் எவ்வாறு கூர்மை சாத்தியம் என ஐயம் எழலாம்.

    குழந்தையின் அழகை வர்ணிக்கும் போது மூக்கு கூா்மையாக உள்ளது என்கிறோம். ஏனெனில் மூக்கிற்கு உருவம் இருக்கின்றது.

    ஆனால் உருவமில்லாத அறிவிற்கு கூர்மை என்பது என்ன? சிந்தித்தல்தான் அறிவின் கூர்மை.

    அறிவு கூர்ந்து கவனிப்பதையே அறிவின் கூர்மை என்கிறோம். அறிவின் கூர்மையேதான் சிந்தனை என்பதாகும்.

    இப்போது சிந்தனைப் பயிற்சி பற்றி அறிவோம்.

    சிந்தனைப் பயிற்சி:

    எந்த ஒரு கலையையும் பயிற்சி செய்துதான் அக்கலையில் வெற்றி பெற முடியும்.

    சிந்தித்தல் என்பது ஒர் அரிய கலையாக உள்ளது மனித குலத்திற்கு.

    ஏனெனில் மனிதர்களில் சிந்திப்பவர்கள் மிக மிகச் சிலரே.

    ஏன் பிறந்தோம்,

    எங்கே செல்ல இருக்கிறோம்,

    இன்பதுன்பம் ஏன் வருகின்றது என்றுகூடத் தெரியாமல் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

    சிந்தனை என்பதும் எண்ணம் தான், ஒரு பொருள் பற்றி ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுந்து விடை கண்டுபிடித்து தெளிவு பிறக்கும் வரை மனதில் தொடர்ந்து எழுபவைகள் அனைத்தும் எண்ணங்கள்தான்.

    மனம் எண்ணுகின்றது.

    எண்ணும் நிலைகள் மற்றும் தரத்தை வைத்து மனம் ஐந்து நிலைகளில் இயங்கக் கூடியதாகக் கண்டுபிடித்துள்ளனர் அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்ற அறிதல் கலைஞா்களாகிய அறிஞர்கள்(அறிவை அறிந்த கலைஞர்கள் அறிஞர்களாவர்)

    முதல் இரண்டு நிலைகளிலேயே வாழ்கையின் முடிவு:

    1) அன்னமய கோசம்
    2) மனோமய கோசம்
    3) பிராணமய கோசம்
    4) விஞ்ஞானமய கோசம்
    5) ஆனந்தமய கோசம்

    ஆகிய ஐந்து நிலைகளில் மனம் இயங்கும். கோசம் என்றால் உறை என்று பொருள். பெரும்பாலோருக்கு அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய முதல் இரண்டு நிலைகளிலேயே மனம் இயங்குகின்றது.

    சாப்பிடுவது மற்றும் அன்னத்தின் மீது மனம் செல்வது. ஆகவே பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அன்னமய கோசம் மற்றும் அன்னைத்தைப் பற்றிய மனோமய கோசத்திலேயே மனம் இயங்குகின்றது. 

    தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம் என வினவுகிறார் மகரிஷி  அவர்களும்.

    சமூகநல ஆர்வலர்களின் எண்ணம்:

     “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கிறாரே அவ்வைத்தாய்.

    எப்படி மானுடப் பிறவி அரிதாக இருக்க முடியும்?

    சிந்திக்காமல் இருந்தால் இந்தப் பிறவி அரிதானதாக இருக்கமுடியுமா?

    எல்லோருமே சிந்தித்து விஞ்ஞானி ஆக முடியுமா என்று கூட ஐயம் எழலாம்.

    விஞ்ஞானியாக இருந்தாலும் அஞ்ஞானியாக இருந்தாலும், இருவருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே வாழ்வியல் விஞ்ஞானம் எல்லோருக்குமே பொது. ஆகவே எல்லோரும் வாழ்வியல் விஞ்ஞானிகளாக வேண்டும்.

    இதுவும் சற்று இயலாத காரியமாக இருப்பதால் வாழ்வியல் சூழலையாவது அறிஞர்கள், பொறுப்புடைய தலைவர்கள் ஏற்படுத்தி மனிதகுலம் தன்னுடைய பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமும் ஆர்வமும்.

    ஆனந்த வாழ்விற்கு மூச்சு போன்று தொடர் சிந்தனை அவசியம்

    வெகு சிலருக்குத்தான் மனம் மூன்றாவது நிலையான பிராணமய கோசத்தில் இயங்குகின்றது.

    அவர்களிலும் வெகுச் சிலருக்குத்தான் மனம் நான்காவது நிலையான விஞ்ஞானமய கோசத்தில் இயங்குகின்றது. இவர்களே சிந்திப்பவர்கள்.

    இந்த சிந்திப்பவர்களிலும் ஒரு சிலரால்தான் ஆனந்தமய கோசத்தில் மனதை இயங்க வைக்க முடிகின்றது.

    ஆகவே மனிதன் ஆனந்த வாழ்வு வாழ சிந்தனை, தொடர் சிந்தனையாக அமைய வேண்டும்.

    பெரும்பாலோர் சிந்திக்காததுதான் இன்றைய மனிதகுல அமைதியின்மைக்குக் காரணம்.

    இதுவரை சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY)அறிந்து கொண்டோம்.

    இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.  

     வரும் 22.07.2020 புதன் அன்று அறிவிற்கு விருந்து பகுதியில்  இதன் தொடர்ச்சியைக் காண்போம்.  ….தொடரும்

    வாழ்க மனித அறிவு!     வளர்க மனித அறிவு!!


    Loading