admin

Author Archives

  • இன்றைய விருந்து – ஐவகை மயக்கம் – FFC-297(102)

    வாழ்க மனித அறிவு!                     வளர்க மனித அறிவு!!


    ஐவகை மயக்கம்- FFC – 297 (102)

    16-07-2020-புதன்

    வாழ்க வளமுடன்!

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம்’. மயக்கம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும். உறவினர் யாராவது மயக்கம் அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையிலோ இந்த மயக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன், இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்குள்ளாக நேரிடும்.

    எனவே, அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    o இனிமேலாவது, புதிதாக தீய பழக்கங்களை பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    o ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்,

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கின்ற எதார்த்த நிலையைக் கூறுகிறார், இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். பழகிய பழக்கத்திலிருந்து வெளிவருவது ஆரம்ப நிலையில் கடினமாக உள்ளது என்கிற எதார்த்த நிலையை எடுத்துக் கூறப்படுவது, தேவையற்ற பழக்கங்களிலிருந்து விடுபடும் முயற்சியினை பாதியிலே விட்டுவதற்காக அல்ல. பழகிய பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, ஆரம்பத்தில் வெற்றி பெறமுடியாமையால், மனம் தளர்ந்து விடாமல் இருந்து ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து பழகிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்று சொல்லப்படுகிறது.

    அதே நேரத்தில், வேண்டாத தீயப்பழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் எச்சரிக்கப் படுத்தப்படுகின்றது.

    அதே நேரத்தில்

    this_birth_is_enough_for_liberation
    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    வேதங்கள் “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?” என்கின்ற ஒரு கேள்வி எழுந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது, மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதை அறிவு இன்பமாக உணர்வதே. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி, அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.

    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கையே மயக்கத்தில் தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்களும் புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக,

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. குறள் எண் 6 என்று கூறுகிறார்.

    dheaivappulavar

    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும், அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்க வேண்டும். இக்குறளில் உள்ள,

    1) பொறி, அவித்தான்,
    2) ஒழுக்க நெறி மற்றும்
    3) நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெவ்வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.

    “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்து, இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்”. என்பது ஒருபொருள்.

    மற்றொரு பொருள்

    “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர்.

    மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.

    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.

    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.

    “நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.

    புலன்களை பயன்படுத்துவதில் ஒழுக்கம் கடைபிடிப்பது புலன் ஒழுக்கம். புலன்களில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிப்பது?

    ஒழுக்கம் என்பது தீங்கு தராத நல்ல செயல்களாகும். ஆகவே புலன்களைப் பயன்படுத்தும்போது தீங்கு தராத செயல்களைச் செய்வது ஒழுக்கமாகும்.

    புலன்களைப் பயன்படுத்தும் போது எப்போது தீங்கு வரும்? புலன்களில் இன்பம் துயக்கும்போது, அளவு மீறினாலும், முறையை மாற்றினாலும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது என்பதனை அறிவோம். ஆகவே புலனொழுக்கம் என்பது இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காப்பது ஆகும்.

    ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும். அந்த ஒழுங்கே(order of function) அதற்கு ஒழுக்கமாகும்.

    மற்றும் நீத்தார் பெருமையில்,

    “ ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.” குறள் எண் 25                                                  என்கிறார் திருவள்ளுவர்.

    புலன் மயக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அவருடைய கவியின் வாயிலாக அறிவோம்.

           நல்வினை தீவினை (அக்டோபர் 1982)

    “புலன்கவர்ச்சி மயக்கத்தால் உணர்ச்சி மீறி,

    புறத்தாற்றும் செயல்களெல்லாம் வீழ்ச்சி காட்டும்;

    புலன்கள்தமை அறிவாலே ஆளக் கற்கும்

    பொறுப்புடைய வாழ்க்கைநெறி ஆக்கம் நல்கும்,

    புலன்மயக்கம் தன்முனைப்புப் பழிச்செயல்கள்,

    புகழ்போக்கும் பொருட்கள் உயிர்ப் பற்றுயர்த்தும்,

    புலன்அடக்கம் இம்மூன்றும் களங்கம் போக்கி,

    புவிவாழ்வின் நிறைவுதரும், பிறப்பறுக்கும்.”

                             …..  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பாடல் வரிகளே அவற்றிற்கான விளக்கத்தை தெளிவாகத் தருவதால் தனியாக விளக்கம் அவசியமில்லை. தனியாக விளக்கம் அவசியமில்லை. புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. ஆன்மீகத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் பற்று. பற்று என்பது புலன்மயக்கத்திலிருந்து உருவாகின்றது. புலன் மயக்கத்தினால் களங்கங்கள் உருவாகின்றன. ஏனெனில் புலன்கவர்ச்சி மயக்கத்தினால் உணர்ச்சி மீறுகின்றது. உணர்ச்சி மீறும்போது பாவப்பதிவுகள் உருவாகும்.   அப்படி பிறவிதோறும் உருவாக்கிய பாவப்பதிவுகளினால்தான் இந்த பிறவி உண்டானது.

    எனவே மனம் போனபோக்கெல்லாம் போகாமல், புலன்களை அறிவாலே ஆட்சி செய்து புவிவாழ்வில் நிறைவைப் பெற்று பிறப்பை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள், வைணவப் பெரியார் ஒருவரின் பாடலோடு சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    நன்றாய் ஞானம் கடந்து போய்,

    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்

    உவப்பு இல் – அதனைத் உணர்ந்து உணர்ந்து,

    சென்று ஆங்கு, இன்ப துன்பங்கள்

    செற்றுக் களைந்து, பசை அற்றால்,

    அன்றே அப்போதே வீடு,

    அதுவே வீடு – வீடாமே. 

                            ….. வைணவப் பெரியார்.

    உலகியல் வாழ்க்யைில் துன்பமில்லாமல் வாழவும்,  ஆன்மீகத்தில் முன்னேறவும் புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. புதிய சிந்தனை தொடரும்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-313(57)

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-313(57)

     

    13-07-2020 – திங்கள்

    வாழ்க வளமுடன்.

                                                  

    குருவருள்

    1) ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற ஆன்றோர் மொழி என்ன தெரிவிக்கின்றது?  

    2)  மேற்கண்ட ஆன்றோர் மொழியின்படி, அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வு சமுதாயத்தில்  இப்போது நிகழ்கின்றதா? நிகழவில்லை என்றால் ஏன் நிகழ்வதில்லை?  எந்நிகழ்வு அது? எப்போது இந்நிகழ்வு நிகழ்ந்திருக்கும்? இந்நிகழ்வு நிகழாமையின் விளைவு என்ன?

    3) இந்த நூற்றாண்டிலாவது அந்நிகழ்வு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளதா இயற்கையால்/இறையால்? அதாவது மீண்டும் அந்நிகழ்வு நிலைநிறுத்தப்பட்டுள்ளதா(revive, redeem)? 

    4) ஆம் என்றால், எவ்வகையில்  புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது?

    5)  அதனால் நீங்கள் அடைந்த பயன் என்ன? 

    6) இப்போது குருவருள் பற்றிய சிந்தனைக்குள்  செல்வோம்.  குருவருள் என்றால் என்ன?

    7)   ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?

    8)    குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக்  கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.  (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி.  148)

    9)   அக்கவியில்  ‘இருளே மிஞ்சும் என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?

    10) உறவுகள் பல உள்ளன.  அவற்றில் குரு-சீடர் உறவு என்றால் என்ன?  அந்த உறவு எவ்விதத்தில் அவசியமாக உள்ளது?  அதன் பயன் என்ன?

    11) குரு-சீடர் உறவின் பயனை எவ்வாறு அடைவது?  குரு-சீடர் உறவின் பயன் எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?  அவ்விதி என்ன கூறுகின்றது?  

    12)   எப்படி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சடுதிமாற்றத்தில் மனிதஇனம் தோன்றலாயிற்றோ, அதுபோன்றே இருபதாம் நூற்றாண்டில், ஆன்மீக உலகில் இயற்கை/இறை ஏற்படுத்திய சடுதிமாற்ற  திருப்புமுனை வரிசையில், உலகை உய்விக்க முதலாம் கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  நம் குருதேவர் ஜகத்குரு  வேதாத்திரி மகரிஷி அவர்கள்  குரு-சீடர் உறவின் பயனை ஏற்படுத்தும் விதி பற்றி அருளியுள்ள கவியினை நினைவு கூர்ந்து சொல்லொணா ஆனந்தமடைந்து  பிறவிப்பயனை அடைவோம். 

    13) பயிற்சி என்பதால்,  மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளை முறைப்படுத்தி ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதி பயன் பெறலாமே! 

    வாழ்க வளமுடன்!

      வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

    குறிப்பு:

    இந்தப் பயிற்சியில் இதுவரை 13 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளனஇவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்வாழ்க வளமுடன்!

    வாழ்க மனித அறிவு!                                                            வளா்க மனித அறிவு!!

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் -அறிவிற்கு விருந்து – FFC-296

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – FFC-296

    12.07.2020- ஞாயிறு

     

    அன்பர்களே!

    வாழ்க வளமுடன்!

            தலைப்பு ‘வயிற்றுப்பசியும் அறிவுப் பசியும்’ என்றிருக்கின்றது.  பசி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.  புதிதானது அல்ல.  எல்லோரும் அனுபவித்திருக்கின்ற ஒன்றுதான். ஆனால் தலைப்பு, வயிற்றுப்பசியுடன் அறிவுப்பசி என்று சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.   ஆகையால், பசியில் இரண்டு வகைகள் உள்ளன, அந்த இரண்டைப்பற்றியும்  சிந்திக்கப் பணிக்கப்பட்டுள்ளது இயற்கையால்/இறையால் இன்று. மகிழ்ச்சியுடன் சிந்திப்போம்.  இத்தலைப்பை ஏற்றுக்கொண்டு சிந்திப்பதன் வாயிலாக, இயற்கைக்கு/இறைக்கு உள்ளப்பூர்வமான  நன்றியினை அகத்திலிருந்து செலுத்துகின்றோம். 

    முதலில் பசியின் இரண்டு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

                                  ஒன்று வயிற்றுப்பசி.  

                                  மற்றொன்று அறிவுப்பசி.

          வயிற்றுப் பசி எல்லா சீவன்களுக்கும் பொதுவானது.  ஆனால் அறிவுப்பசி என்பது ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்த மனிதனுக்கு மட்டுமே பிரதானமாக இருக்கக் கூடியது.  ஆன்மா ஐந்து கோசங்கள் (போர்வைகள்) கொண்டிருந்தாலும் ஐந்தறிவு சீவன்களின் வாழ்க்கை முதல் இரண்டு கோசங்களான அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே புலன்வழி இச்சையோடு முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் அவற்றின் வாழ்க்கை. இந்த புலன்வழி இச்சைக்கான வாழ்க்கை வாழ்வதற்காகவா பேரறிவு நாமாக(மனிதனாக) தன்மாற்றம் அடைந்துள்ளது?! சிந்திக்கலாமே!  சிந்தித்தாலே பிறவியின் நோக்கம் அறியும் முயற்சியிலோ, இறைத்தேடலிலோ விரைவில் வெற்றி பெற்றிடலாம்!

    ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’

          இச்சையைப்பற்றி 80 வரிகள் கொண்ட கவியில் இருபத்தைந்தாவது  வரி ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’ என்பது. அக்கவியின் எல்லா வரிகளுமே உலகியல் வாழ்க்கையை மட்டும் பிரதானமாக நடத்தும் மனிதர்களுக்கும் உலகியல் வாழ்க்கையையும் இறையுணர்வு ஆன்மீகத்தையும் இணைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆன்ம சாதகர்களுக்கும் பொதுவானதுதான். இருந்தாலும், மேலும் அக்கவியின் மற்றொரு வரியினையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது உசிதமானது.  அதாவது 63-வது வரியில் “இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?” என வினவுகிறார் இன்ப-துன்ப அறிவியளாலரான ஜகமே போற்றுவதற்கு உரியவரான இருபதாம் நூற்றாண்டின் ஜகத்குருவாக அவதரித்த நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கை மிக மிகச் சிறப்புடையது என்பதனை நன்கு உணரலாம்; அறியலாம் அனுபவப்பூர்வமாக.  மனிதனின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘மனிதனின் சிறப்பு’ (1955) என்கின்ற தலைப்பில் 100 வரிகளில் கவி ஒன்றை அருளியுள்ளார். வாசித்து இன்புறலாம்.

     

    மனிதனின் சிறப்பை  அறிந்து   ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்துள்ள மனிதனால் மற்ற மூன்று கோசங்களிலும்  வாழ்க்கையை நடத்தாமல் வாழ்க்கை வாழ்வது சரியா என்பதனை அறிந்துகொள்ள முடியும்.   நடைமுறையில் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படுவதில்லையே!  ஏன்?

    கடினமானதா?

        மற்ற மூன்று கோசங்களில் வாழ்க்கையை நடத்துவது கடினமானதா? மற்ற மூன்று கோசங்கள் என்னென்ன?  அவற்றில் பெரும்பாலோர் கடைசி மூன்று கோசங்களில் வாழ்வதில்லை; வாழ முடிவதில்லை?   ‘வாழ்வதில்லை’ என்றால்  அது தனிமனிதனின் பொறுப்பின்மையையாகின்றது.   ‘வாழ முடிவதில்லை’ என்றால் அதற்குக் காரணம் சமுதாயம்.  பாரதியார் மொழிந்துள்ளதுபோல் ‘வாழவேண்டிய நன்முறையை’ சமுதாயமோ, விஞ்ஞானமோ  மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  அந்த நன்முறையினை  சமுதாயத்தின்  சார்பாகவும் விஞ்ஞானத்தின் சார்பாகவும்  திருவேதாத்திரியம் செய்துகொண்டிருக்கின்றது  என்பது மிகையே அன்று. 

    கடைசி மூன்று கோசங்கள் என்னென்ன?

       அவையாவன:

                    3) பிராணமய கோசம்

                    4) விஞ்ஞானமய கோசம்

                    5) ஆனந்தமய கோசம் (முழுமை பெற்று நிறைவாக நிற்கின்றது மனம்)

         முதல் இரண்டு கோசங்களையும் சேர்த்துத்தான் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படவேண்டியுள்ளது. ஆனால் முதல் இரண்டு கோசங்களிலேயே வாழ்வது என்பது

         அறியாமையின் காரணமாகவோ

                  அல்லது

        அறிந்தும் அலட்சியப்படுத்தி வாழ்வதன் காரணமாகவோ

                 அல்லது

        தக்க வழிகாட்டுதல் கிடைக்காமலோ மனிதர்கள் அல்லலுறுவதைக் கண்கூடாகப் பார்க்கும்போது  சகமனிதர்களாகிய மனவளக்கலைஞர்களுக்கெல்லாம் கவலை ஏற்படுகின்றது.  கவலை ஏற்பட்டாலும், அந்நிலையினை மாற்றி அமைக்க  மகரிஷி அவர்களின் வழியில், தொண்டுகளிலே சிறந்ததான அறிவுத் தொண்டாற்றி இன்பம் கண்டு வருகிறோம்.   இன்றைய  ‘அறிவிற்கு விருந்து’ (FFC: Feast For Consciousness) – க்கான முன்னுரையை (like starter served in Dinner to create appetite) இத்துடன் முடித்துக்  கொண்டு நேரிடையாக தலைப்பிற்குள் செல்வோமாக.

    பசி என்பது என்ன?

          ‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியுடன் இருக்கிறேன். I am hungry என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு.  அந்தப் பசிக்கு  ‘வயிற்றுப் பசி’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

        வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எது எது, எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும்.   இதனை செய்வது யார்?  நாமா?  இல்லையே! இயற்கைதான்/இறைதான் செய்கின்றது.     வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை முடிந்துவிடுகின்றது.  உண்ணும் உணவை சீரணம் செய்து ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவது  யார் அல்லது எது அனுப்புகின்றது? இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது என்று சொல்ல மாட்டோம்.   

    காரணம் என்ன?

           காரணம் 1911 வரை அவ்வாறெல்லாம்  சிந்தித்ததில்லை மனிதஅறிவு. சிந்தித்துப் பழக்கமில்லை. ஆனால் 1911 ற்குப்  பிறகு மனிதஇனத் தன்மாற்றத்தில்  அல்லது  ஆன்மீகத்தில்  ஒரு புதிய திருப்பத்தை சடுதிமாற்றமாக எட்டியிருக்கின்றது இயற்கை/இறை. எனவே இப்போது  சீரணம் செய்யவைத்து ஏழுவித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவதை  இயற்கை என்கின்றது 1911 ல் ஏற்பட்டுள்ள  சடுதிமாற்றத்திற்குள் வந்த மனிதஅறிவு.   இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது. இது கருத்து என்றுகூட சொல்ல முடியாது. இதுவே உண்மை. எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை.  

    விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

           மனிதன் உண்ட உணவு சீரணிக்கப்பட்டு ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்பப்படும் விந்தையை நினைத்து மகிழலாமன்றோ?  இயற்கையை/இறையை* நினைவில் கொண்டோ அல்லது  முன் வைத்து ஒருமை இயலில் (in advaidic sense or in  Oneness Science)  பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நான், தான், தனது என்கின்ற தன்முனைப்பில்(Ego = Edging God Out= E + G+ O = EGO) மூழ்கிவிடும் அறிவு.  தன்முனைப்பு வந்துவிட்டால் அறிவு தடுமாற்றம் அடைந்து தடமாற்றத்தில் சென்றுவிடும்.  விழிப்புணர்வு அயர்ந்துவிடும்.  அயராவிழிப்புணர்வேதான் இயற்கையின் ஆதிநிலையான பேரறிவு.  பேரறிவேதான் இப்போது ஆறாமறிவாக தன்மாற்றம் அடைந்துவிட்டாலும், மனிதஅறிவு விழிப்புநிலையில் அயர்ந்துவிட்டதால் அது மயக்கத்தில்- மாயையில்(புலன்மயக்கத்தில்) சிக்கித் தவித்துக்கொண்டு வாழ்கின்றது.  காரணம் பேரறிவு நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவும்கூட ஒருவகை விழிப்புணர்வைச்சார்ந்ததே!  பேரறிவு நேரிடையாக மனிதஅறிவாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.  ஓரறிவிலிருந்து ஐந்தறிவாகி மனிதனாகி வந்துள்ளதால் பேரறிவின் பின்னமான மனிதஅறிவு விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியைப் போக்கி அயராநிலைக்கு வந்து அயராவிழிப்புணர்வாகிய பேரறிவோடு கரைந்து ஆனந்தமயகோசத்தில் இன்புறவேண்டும்.  இதுவேதான் மனிதப்பிறவியின் நோக்கங்களிலே பெரும் நோக்கமானதாகவும் உன்னதமானதாகவும் உள்ளது. இந்த அறிவு பற்றிய அறிவியல் உண்மையை மனவளக்கலையின் வழியாக மலரச்செய்து கொண்டிருக்கின்றது  திருவேதாத்திரியம். 

    (*திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள்  இயற்கையை இறை என்றனர். ‘இயற்கையை’ இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்?  காரணப் பெயராக இயற்கையை இறை என்கின்றனர்.  இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை  என்று கூறுகின்றனர்.)

    அளவும் முறையும் அவசியம்

          உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில், உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்படும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கும் சாதாரண உணவுதான் கிடைக்கின்றது.  இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.  வறுமை என்பது சமுதாயத்தின் ஒரு பெரிய கொடும் துன்பம். கருணையாலும்,  சமுதாயத்தின்  மீது கொண்ட அக்கறையின் காரணமாக  “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினையே அழித்திடுவோம்” என்று கூறுகிறார் மகாகவி – பன்முகமாக  சிந்தித்த மாமனிதர்  (multifaceted Personality). அதாவது உலகில் வாழும் ஒருமனிதனுக்குக்கூட உணவு இல்லை என்கின்ற நிலை இருக்கக்கூடாது  எனக்கருதியே அவ்வாறு கூறி அதற்காக “இனியொரு விதி செய்வோம். அதனை எந்தநாளும் காப்போம்” என்கிறார் மகா கவி பாரதியார்.  

        விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவை உணவுக்குழாய்க்குள் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியை செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

       எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்தை உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில்   “அளவும்” (limit) முறையும் (method) அவசியம்.  அளவு என்பது அதிகமாகவோ, குறைவாகவோ, அனுபவிக்கக் கூடாது.  முறை என்பது இயற்கைக்கு முரண்படாமல் ஒத்த முறையில் அனுபவிப்பதாகும்.  இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.

           வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம்.    மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

    1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
    2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
    3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

    அறிவுப் பசி என்பது என்ன?

           இப்போது அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்வோம். வயிற்றுப் பசி என்பது சரி.  அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் என ஐயம் எழலாம்? அறியவேண்டியதை அறியவேண்டும் என்கின்ற அவா எழுந்தால் அதுவே அறிவிற்கானப் பசி ஆகும்.  அந்த அறிவுப்பசியினைப் போக்குவதுதான்  மனவளக்கலை எனும் விருந்து.  மனவளக்கலை அறிவை அறியும் பயிற்சியாயிற்றே!  அது அறிவிற்கு ஆனந்தத்தைத்தான் தரும்.  அதுதான் அறிவு முழுமை பெற்று நிறைவாக இருக்கின்ற நிலை.     வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகிய துன்ப உணர்வை அறிவது அறிவு.  அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது.  நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    எத்தகைய உணவு அறிவிற்கு விருந்து?

         உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும்.   அதுதான் சிந்தனை. எனவேதான் சிந்தனையை சிந்தனை விருந்து என்றும் அறிவிற்கு விருந்து என்றும் சொல்கிறோம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது.  இன்பதுன்பங்களை உணர்கின்றது.  இதுமட்டுமேவா அறிவின் வேலை?  இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

    அறிவு அறிய வேண்டியது எது?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிவது அறிவு.  அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு(Capable).  அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது?  அறிவு  ‘தான் யார்’ என்றும்,  ‘தன் இருப்பிடம்’ எது என்றும் அறிய வேண்டும். உயிரினங்களிலேயே இந்தச் சிறப்பை உடையது மனிதஇனம். தன்னை உணரும்போதுதான்  அறிவு முழுமை பெறும்.  மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு

    அறிவுப்பசிக்கான விருந்துதான் திருவேதாத்திரியம்

        அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை/இறை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம். இயற்கையின்/இறையின் தன்மாற்றப்படி பேரறிவிற்கு  எது பிரியமோ அதனை மனிதஅறிவு அறிய வேண்டும். அப்போதுதான் மனிதஅறிவிற்கு பேரின்பம். இந்த நிலை மனிதஅறிவிற்கு இல்லாதபோது மனிதஅறிவு அல்லலுறுகின்றது. அல்லலைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற வேட்கை மனிதஅறிவிற்கு வந்துவிட்டால் அதுவே அறிவுப்பசியாகிவிடுகின்றது. தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல்,  அறிந்தாலும் அதற்கான வழியும் தெரியாமல்  காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.

    அறிவிற்கு ஓய்வேது?

           அறிவிற்கு தன்னை அறிவதில் விருப்பம் வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழு விருந்துமாகும்.  அதுவே அறிவின் முழுமைப்பேறு.  ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து, அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போதுதான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில்  வந்து போனதற்கான சுவட்டினை விட்டுவிட்டுச் செல்லவேண்டும்.  வயிற்றுக்குப் பசி இருப்பதுபோன்று அறிவிற்கும் பசி உண்டு என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.  சிந்தனை விருந்துதான் அறிவின் பசியினைப் போக்க முடியும். அறிவு  அன்னமய கோசத்தைக் கடந்து விஞ்ஞானமய கோசத்திற்குள்ளும், ஆனந்தமய கோசத்திற்குள்ளும் பயணிக்க வேண்டும்.

           இதுவரை அறிந்து கொண்டது என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

    1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
    2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
    3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
    4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!           வளர்க திருவேதாத்திரியம்!!

    Loading