admin

Author Archives

  • யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 2/?   

    யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 2/?

    FFC- 94

                                                   24-06-2015–புதன்

    Scientist of Consciousness 

    ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம்.  அப்படியானால்  ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவு ஆகியவைகளைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிந்து கொள்ளுதல்  அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களில் சிலருக்கு.  அப்போதுதான் இன்றையச் சிந்தனையான  அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

         உயிர் என்பது ஆற்றல்.

         எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது.

         ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர்.

         உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.

         அதனை ஆன்மா என்றும்   சொல்வது உண்டு.   உயிரினம் என்பதற்கு சாட்சியே  உணர்வு. 

         உணர்வதற்கு வேண்டியது அறிவு.

         அறிவு இல்லாமல் உணரமுடியாது.

         ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது.  அறிவு எங்கிருக்கின்றது?

         உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு என்பதால்,

         உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்டால் உணர்வு இல்லை.

        ஆகவே உயிர் வெளியேறும் போது  உடலைஆண்டுகொண்டிருந்த அறிவும் வெளியேறிவிடுகின்றது.

         இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.

         அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை.  இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற  self made mechanism த்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக  உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது.  ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை(magnetic wave-energy)  புலன்கள் வழியாக வெளியிலிருக்கும் புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity)  உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது.  அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.

         மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வருகின்றன.  மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்து வரும் போது மனம்  அலைகின்றது என்கிறோம்.  ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம்  அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.

         ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால்  வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.  அதற்காகத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி, புலன்கள் வழியாக வெளியே சென்று கொண்டிருந்த மனதை திருப்பி, உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.

        ஆலயத்தில் சிலைவணக்கம் செய்யப்பட்டாலும், அங்கும்  அறிவுதான் வணங்கப்படுகின்றது.  இங்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை உற்று நோக்குவோம்.

            கருத்தும் கடவுளும்(16.12.1953)

             கடவுளை வணங்கும் போது,

              கருத்தினை உற்றுப்பார் நீ!

            கடவுளாய்க் கருத்து நிற்கும்

              காட்சியைக் காண்பாய் ஆங்கே! ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சிலை வடிவத்தில்  கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள்.  சிலையைக் கண்கள் பார்க்கும் போது  அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த நம் அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார்.   யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார்.  “ஒன்றே குலம்.  ஒருவனே தேவன்” என்கின்ற திருமூலர் வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.

          சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது.  அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் இந்த சமுதாயத்தில்.

             இயற்கை மனிதனுக்கு இரு கண்களை கொடுத்துள்ளதுபோல், மனிதன் வாழ்விற்கான இருநெறிகளை அறம் தழைக்க ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று அன்பு, மற்றொன்று கருணையுமாகும்.

    1)    அனைவரிடத்திலும் உள்ள ஆத்மா   ஒன்றிலிருந்து உருவான ஒன்றே என உணர்ந்து, பிறர்க்கு துன்பம் நேர்ந்துவிடக் கூடாது எனும் அளவிற்கு அன்பு மலரவேண்டும்.

    2)   அந்த அன்பு மலர்ந்த நிலையில் பிறர் படும் துயரைத் தன்துயராக எண்ணி அத்துயரில் இருந்து அவர் விடுபட்டு நலமடைய உதவி புரியுமளவிற்கு மனம் கனிந்து கருணை வெளிப்படவேண்டும்.

        இந்த இரண்டு நெறிகளை வளரச் செய்வதும் நிலைக்கச் செய்வதும் ஒவ்வொருவரின் முயற்சியாகஇருக்க வேண்டும்.முயற்சிக்கு பயிற்சி அவசியம்.  அந்தப் புனிதப் பயிற்சியினை அளிக்க, இயற்கையின் ஏற்படுத்தியதுதான்  கருத்தியலும், செய்முறையும் ஒருங்கே இணைந்துள்ள, அறிவுத்திருக்கோயிலில் கற்றுத் தரப்படும் மனவளக்கலையாகும்.

        மனித மனம் பண்பட வேண்டும், மனித மனம் பண்படுவதற்கான கல்விதான். அறிவுத்திருக்கோயில்களில் கற்றுத்தரப்படுகின்றது. இறை அருள் வேண்டுகிற மனிதன், இறையே அவனின் அறிவாகவே இருந்தும், அதனை பயன்படுத்தாமல் போனால் என்னென்று சொல்வது? வாழ்க்கை, துன்பம் நிறைந்ததாகத் தான் இருக்கும்.  இறையாகிய அறிவைப் பயன்படுத்துவதற்கு,  அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் இருந்து ஆட்சி செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தின் அறிவாட்சித்தரம் உயரும்.

        நாகரீகம் என்பது உடை உடுத்துவதாலேயே வந்திடாது.  நாகரீகம் என்பது வாழும்முறை, பண்பாடு ஆகியவைகளைப் பொருத்தது. மனிதவாழ்வின் பண்பாட்டின் உச்சமே நாகரீகம். நாக்கு, உள்ளம், மனம் ஆகிய மூன்று சொற்களை இணைத்து வந்த தொடர் சொல் — நா+அக(உள்ளம்)+இரிகம்(மனம்)=நாகரீகம்.  உள்மனம், புறமனம், பேச்சு ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இயக்கி வாழும் உயர்ந்த பண்பாட்டை நாகரீகம் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே எந்த அளவிற்கு அறிவாட்சித்தரம் உயா்ந்து வந்துள்ளதோ அந்த அளவிற்கு நாகரீகம் வளா்ந்து உயர்ந்துள்ளது எனலாம். அதனை நிறைவேற்றவே இயற்கை/இறை விரும்பி, ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள்.  அறிவுத்திருக்கோயில்களின் மகத்துவத்தையும், புனிதத்தையும் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொண்டு அறிவுத்திருக்கோயில்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

        ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதகுல வரலாற்றில், மனித மனம் மேன்மை அடைந்து வருகின்றது.  அவ்வாறு மனித மனம் மேன்மை அடைந்து வரும் சரித்திரத்தில்,  அறிவுத்திருக்கோயில்களின் தோற்றம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்கிறார் உலகின் முதல் அறிவின்-அறிவியலாளராகியதால்,உலகில் முதன்முதலில் அறிவுத்திருக்கோயில் நிறுவிய  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       மற்ற கோயில்கள் அந்தந்த மதத்தினருக்கென்று உருவாக்கப்பட்டன. ஆனால் அறிவுத்திருக்கோயில்களோ எல்லோருக்கும் பொதுவானது. எவ்வாறு பொதுவானது என்று பார்ப்போம்.

       இன்று உலக மக்கள் தொகை 720 கோடி என்கின்றனர். 720 கோடி உலக மக்களுக்கு எத்தனை கண்கள் என வினவினால் 1440(720×2=1440) கோடி கண்கள் என பதில் வரும். எத்தனை கைகள் என்றால் 1440 கோடி கைகள் என அதே பதில் வரும்.  ஆனால் 720 கோடி மக்களுக்கும் எத்தனை அறிவுகள் என்று கேட்கமுடியுமா? கேட்டால், 1440 கோடி அறிவுகள் என பதில் வருமா? எத்தனை அறிவுகள் என பன்மையில் கேட்க முடியுமா?  முடியாது. ஏன் பன்மையில் கேட்க முடியாது?  கண்கள், கைகள் போன்று அறிவிற்கு உருவம் கிடையாது.  உருவம் இருந்தால் ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை வரும்.  அப்படியானால் உருவமற்ற அரூபமாகிய அறிவிற்கு ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை உண்டா?  இல்லை. அப்படியானால் 720 கோடி மக்களுக்கும் இருக்கும் அறிவு அரூபமான ஒரே அறிவுதான். 720 கோடி உலக மக்களுக்கு உள்ள கண்கள் வெவ்வேறானவை என்று கூறுவதுபோல்  720 கோடி மக்களுக்கும் வெவ்வேறான அறிவுகள் என்று சொல்ல முடியுமா?  முடியவே முடியாது!  ஏனெனில் அறிவு அரூபமாக இருப்பதால் அவை அனைத்தும் ஒன்றேதான்.  அருவத்தில் எண்ணிக்கை கிடையாது.

       அடுத்த விருந்தில்(28-06-2015 ஞாயிறு) எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றே என்று மீண்டும் உறுபடுத்தியும், ஆகவே அறிவுத்திருக்கோயில்கள் உலக மக்கள் எம்மதத்தைச் சார்ந்திருந்தாலும், அனைவருக்கும் பொதுவானவை என்றும்,  தெய்வம் எவ்வாறு அறிவு  என்றும், அதன் மூலம் ஒன்றே தெய்வம் என்றும் ஒன்றே குலம் என்றும் ,அறிவுத்திருக்கோயில்களின் பணி என்ன என்பதையும் அறிய இருக்கிறோம்.

    வாழ்க வளமுடன்.                                                                          ……தொடரும் 28-06-2015

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-83

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    22-06-2015 – திங்கள்

    எந்த இரண்டையொட்டி மனிதனின் அறிவாட்சித் தரம் அமையும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அறிவாட்சி தரம் உயா்ந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்?.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-82

    18-06-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—

    மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே மனதைக் கொண்டுவந்து நிலை நிறுத்தப் பழகுவது என்பதுதான் தவம். என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    —————————-

    Loading

  • யோகமும் அறிவுத்திருக்கோயிலும் 1/2

     

    வாழ்க மனிதஅறிவு                                                          வளர்க மனிதஅறிவு

    யோகமும் அறிவுத்திருக்கோயிலும் 1/2

    FFC–93

    21-06-2015-ஞாயிறு

    வாழ்க வளமுடன்.

    இன்று 21.06.2015 முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. புராதனக் கலையாக இருந்து வந்த யோகாவை இப்போது எல்லோரும் அறியும் வகையில் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுவதை அறிந்து யோகிகளான நாம் மகிழ்வுறுகிறோம். யோகா தினம் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நம் இணைய தள சத்சங்க யோகிகள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் யோகம்
    எல்லோருடைய அன்றாட வாழ்வில் இடம் பெற்று,

    அதனால் உடல் நலத்தையும், மனவளத்தையும் எல்லோரும் பெற்று

    யோகவாழ்வு வாழ வேண்டும் என விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம்.

    சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.
    சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.
    சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.

    வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.
    வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.
    வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.

    ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில் என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி? மகரிஷி அவர்களின் மானசீக குருவான அறிஞா் திருமூலா் கூறுவதென்ன?

    “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார்.

    மேலும் திருமூலர் அருளுவதாவது

    “படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.” ….திருமந்திரம் 1857

    படம், மாடம்(கோபுரம்) உள்ள கோயில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோயில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம். ஆகவேதான் ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்கின்றனர் பெரியோர்கள்.

    அருட்பேராற்றலே ஒவ்வொரு மனிதனிடமும் அறிவாக வீற்றிருப்பதால், “ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில்“ என்பது எவ்வளவு பொருத்தமாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருப்பதனையும் அறியமுடிகின்றது. அதே நேரத்தில், அறிவு தன்னைத் திருத்திக்கொண்டு, தூய்மையாக்கி தனது உள்ளத்தை திருக்கோயில்களாக்கிட வேண்டிய பொறுப்பும், கடமையும்தான், பிறவியின் நோக்கம் என உணரச் செய்கின்றது திருவேதாத்திரியம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    மனித இனம் உடல் நலத்திலும், மளவளத்திலும் மேம்படவேண்டும். அதாவது அறிவில் உயர்ந்து வாழ்வதற்கு என்ன தேவையோ அதனை கற்றுத்தரும் நிலையங்களை அறிவுத்திருக்கோயில்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உடல் நலத்திற்கு உடற்பயிற்சியையும், மனவளத்திற்கு தவத்தினையும் பயிலும் நிலையங்கள்தான் அறிவுத்திருக்கோயில்கள்.

    உடற்பயிற்சியினையும், தவத்தையும் பயில்வதற்கு, இயற்கை/இறை, அறிவின்-அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகில் முதன் முதலாக ஆழியாரில் ஆரம்பித்து, இப்போது உலகெங்கும் அறிவுத்திருக்கோயிலை ஏற்படுத்தி வருகின்றது இயற்கை/இறை. இயற்கை/இறை அளித்த அருமருந்து மனவளக்கலை. அறிவுத்திருக்கோயில் என்றால் அறிவிற்கான கோயில் என்றாகின்றது.

    ஆகவே அறிவுத்திருக்கோயிலின் அறிவியலை சுருக்கமாக அறிந்து கொள்வோம். அதற்கு ஒரு வினாவை எழுப்ப வேண்டும்.

    எது அறிவாக இருக்க முடியும்? இயற்கையே/இறையேதான் அறிவாக இருக்க முடியும். எப்படி என ஐயம் எழலாம். மனிதன் இயற்கைதானே?! இதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மனிதன் இயற்கை என்றால் அவன் அறிவும் இயற்கைதானே. அது சரி என ஒப்புக் கொள்ளலாம்.

    அறிவு எவ்வாறு இறையாக இருக்க முடியும் என அடுத்த ஐயம் எழலாம். இறை என்பது காரணப்பெயர். அதாவது இயற்கை எனும் பேராற்றல் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளதை இறைந்து கிடக்கின்றது என்றுதானே சொல்லமுடியும்! எனவே இயற்கை என்றாலும் இறை என்றாலும் ஒன்றுதான். இயற்கைக்கு மறு பெயர் இறை. யார் யாருக்கு எது பிடித்தமாக உள்ளதோ அவ்வாறு அந்த பேராற்றலை இயற்கை என்றோ, இறை என்றோ அழைக்கலாம்.

    இந்த பேராற்றலே தான் தெய்வம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆற்றலுக்கு உருவம் ஏது? இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், மகரிஷி அவர்கள் கூறுவதுபோல்

    “முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்
    மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்,” ……காந்த தத்துவப்பாடல் எண் 10 இல் உள்ள 3,4 வரிகள்

    எனவே இறைக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் தெய்வம் என்கின்ற பெயரால் பல உருவங்கள் கொடுக்கப்பட்டன. உருவங்கள் இறையின் உண்மை நிலை அல்ல. இறை பேராற்றலாக உள்ளதால் இறை அரூபம். ஆகவே இறைக்கு உருமில்லை.

    ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில்,

    “இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை
    இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்” ……காந்த தத்துவப்பாடல் எண் 10 இல் உள்ள 5,6 வரிகள்

    என்பதால், மகரிஷி அவர்கள், இறையின் நிலையை விஞ்ஞான ரீதியாக எடுத்துக் கூறி இறையின் இரண்டு தன்மைகளான பேராற்றல் மற்றும் அருள் ஆகியவைகளைக் கொண்டே ‘அருட்பேராற்றல்’ (அருள்+பேராற்றல்) என அழைக்கிறார். தெய்வம் என்பதும் அருட்பேராற்றல் என்பதும் ஒன்றேதான். தெய்வத்திற்கான அறிவியல் பெயர் அருட்பேராற்றலாகும். அருட்பேராற்றல் என்கின்ற போது இறைக்கு உருவத்தை, மனம் கற்பித்துக் கொள்ளாது.

    எப்படி அழைத்தாலும் யார் ஒருவரும் அந்த பேராற்றலின் ‘மனிதனின் செயலுக்கு விளைவைக் கொடுக்கக் கூடிய கூர்தலறத்தை’ உணர்ந்து மதித்து நடக்கவேண்டியதுதான் இன்று சமுதாயம் விரும்புவதாகும். தவறாது, இந்த மதித்து நடத்தல்தான், சமுதாயம் யோகவாழ்வு வாழ வழி வகுக்கும். எனவே சமுதாயம் யோகவாழ்வு வாழ வேண்டும் என்பதனை வலியுறுத்தவே சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது, எனவே இந்த சர்வதேச யோகாதினம் மிகச் சிறப்பாக நடக்க www.prosperspiritually.com இணையதள சத்சங்க அன்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்!

    அறிவுத் திருக்கோயிலைப் பற்றி மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவா். மற்றவர்களுக்கு அறிவுத்திருக்கோயில் என்பது வியப்பாகக்கூட இருக்கலாம். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகா், அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்ளதை அறிவோம். முருகன் கோயில் முருகனுக்கான கோயில் என்பதுபோல் அறிவுத் திருக்கோயில் என்பது அறிவிற்கானக் கோயில். அறிவிற்கு கோயில் இருக்கின்றது என்றால் அறிவு தெய்வமா என்கின்ற ஐயம் எழலாம். மகாகவி பாரதியார் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், காளி ஆகிய உருவகக் கடவுளர்கள் மீதான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு பக்திப்பாடல்களை இயற்றிவரும்போது, மகாகவி பாரதியார் “தவமே புரியும் வகையறியேன்” என்று ஒரு கவியில் ஆதங்கப்படுகிறார். பிறகு ஞானப்பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் அறிவையே தெய்வம் என்கிறார்.
    அறிவே தெய்வம்
    ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
    அலையும் அறிவிலிகாள் – பல்
    லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
    டாமெனில் கேளீரோ?
    ………………………………………..
    ………………………………………..
    சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
    சுருதிகள் கேளீரோ? …..
    ………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி பாரதியார்.

    FFC-93-429_Subramanya_Bharati

    அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும் “துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்” என்கிறார். அறிவைத் தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory), பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத் தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம் தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில் ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி வருகின்றன. அரிதாக இருந்து வந்த “தவம் இயற்றுதலை” எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம் இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில் பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத் திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.

    FFC-93-Swamiji stamp

    முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால், அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில் சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில் இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.

    அகவழிபாட்டில் சிலைகள் கிடையாது. உள்ளம் தான் அகம் எனப்படுகின்றது. உள்ளத்திற்குள் எவ்வாறு சிலைகளை வைக்க முடியும்? “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலா் வாக்குப்படி, மேலும் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதை அறிந்துள்ள மனவளக்கலைஞர்கள், உள்ளத்திலுள்ள இறை மீதே மனம் வைத்து அகத்தவ இறைவழிபாடு (meditation)செய்கின்றனர். புலன்களைக் கடந்து உள்ளே சென்றால் கடவுளைக் (கட+உள்=கடவுள்) காணலாம்.

    இறைவனே உயிராக மனமாக அறிவாக இருக்கின்ற தெளிவினை உடையவர்கள் அகவழிப்பாட்டினை மேற்கொள்கின்றனர், அதாவது உயிரிலிருந்து மனம் பிறப்பதால் புறத்தே புலன்கள் வழியாகச் செல்கின்ற மனதை திருப்பி உள்ளே செலுத்தி உயிர் மீது மனம் வைத்து தவம் செய்வதுதான் அகவழிபாடு. எனவே அறிவுத் திருக்கோயில்களில் சிலைகள் அவசியமில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் உள்முகமாக மனதைத் திருப்பி (Inner Travel) தெய்வமாகிய உயிர் மீது மனதை வைத்து தவம் செய்கின்றனா். ஆகவே அறிவுத் திருக் கோயில்களில் சிலை வழிபாடு இல்லை.
    கோயில் என்பது இறைவனைத் தொழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதக் கட்டிடம். கோயிலுக்கு ஆலயம் என்றும் பெயா். காரணம், கோயிலுக்குச் செல்லும் பக்தன் கடவுளை வணங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் கோயிலுக்கு ஆலயம் என்கின்ற பெயரையும் வைத்துள்ளனா். “ஆலயம்” என்கின்ற சொல்லில் ஆன்மா என்கின்ற சொல்லின் முதல் எழுத்தான “ஆ” வையும் “லயம்” என்கின்ற சொல்லையும் இணைத்து ஆலயம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆன்மா லயமாவதற்கான புனித இடம்தான் ஆலயம், கோயில்.
    அடுத்ததாக ஆன்மா, லயம் என்கின்ற சொற்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் ஆலயம் ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கம் தெரிய வரும். ஆன்மா என்பது உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்(soul). ஆன்மாவை உயிர் என்றும் கொள்ளலாம் தற்போதைக்கு. “லயம்” என்றால் ஒன்றுபடுதல் என்பதாகும். ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஆன்மா எதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதனையும் தெரிந்து கொண்டு அதுபோல் வழிபாடு செய்தால் ஆலயம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
    வாழ்க வளமுடன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 24-06-2015–புதன் அன்று சந்திப்போம்.
    …… தொடரும் 24-06-2015–புதன்

    Loading